29 Jun 2016

ரசனைக்காரனின் கோபக் கவிதைகள் “லெமூரியக் கண்டத்து மீன்கள்”

ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டுமென்ற ஆவல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் சில புத்தகங்கள் அதன் சாரம்சத்தினைத் தாண்டி ஆவலைத் தூண்டுவது புத்தகத்தின் பெயர், அட்டைப்படம் மற்றும் எழுத்தாளரின் முந்தைய செயல்பாடுகள் முக்கியப் பங்கு வகுக்கிறது. அதிலும் கவிதைத் தொகுப்பாக இருந்தால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படவே செய்கிறது. 

இந்த நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் இணையம், முகநூல் மற்றும் வாட்ஸ் - அப் வழியே பல கவிஞர்களும் தங்கள் கவித்திறனை வெளிபடுத்திக் கொண்டிருக்கும் காலக்கட்டம். இதில் பலரது படைப்புகள் தங்களது சுயம் சார்ந்த பதிவுகளாகவே வளம் வருகிறது. அதில் சிலரது படைப்புகள் மட்டுமே நம்மைத் தொடர்ந்து அவர்களையும்அவர்களது எழுத்துகளையும் தொடர் வைத்துவிடுகிறது. 

அப்படி நாம் தொடரும் நபர்களின் படைப்புத் தொகுப்பாக வருகிற போது, இருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். ஒன்று நாம்தான் ஏற்கனவே படித்துவிட்டோமே அதிலென்ன இருக்கப்போகிறது என்ற அலட்சியமும். இரண்டாவதாக ஏதாவது புதிதாக இருக்குமா என்கிற எண்ணமும் வரும். இவற்றில் இரண்டாவது எண்ணம் எழுவதென்பது மிகவும் அரிதுதான். அதிலும் குறிப்பாகக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளைப் பொறுத்த வரையில் இவ்வெண்ணம் வருவது அரிதிலும் அரிதாகத்தான் இருகிறது சமகாலத்தில். 
இவற்றை மீறி வருகிற புத்தகங்களை உடனடியாகப் படித்துவிட வேண்டுமென்ற உந்துதல் வந்துவிடுகிறது. அப்படிப்பட்டப் புத்தகமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம்தான் ஆன்மன் எழுதியிருக்கும் லெமூரியக் கண்டத்து மீன்கள்கவிதை தொகுப்பு.


புத்தகம் முகவரித் தேடி வந்த போது அதைப் பெற்றுக் கொள்ள நானில்லை அங்கு. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் உறைப் பிரித்துப் புத்தகத்தை வெளியெடுத்து முகர்ந்துப் பார்த்துவிட்டுக் கைக்கு வந்தபக்கத்தைப் புரட்டிய பொழுது முதலில் தென்பட்டக் கவிதை

அபத்தமாய் இருக்கிறது
 தனிமையைத்
 தனிமையெனச்
 சொல்வது
என்கிற வரிகளைப் படித்தவுடன் தனியறையில், தனித்த பயணத்தில், தனித்த புன்னகையில், தனித்த உறக்கத்தில், தனித்துக் கிடக்கும் எனது வலிகளில் என அனைத்திலும் தனித்திருந்தாலும் என்றும்  தனிமையை உணராதிருக்கும் எனக்கு வாழ்வியல் நெருக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவே இருந்தது.

மேலும், ஒருசிலக் கவிதைகளை வாசித்த போது எக்காரணங்களுக்காக எல்லாம் என்னுள் கோபம் வருகிறதோ?... அதே காரணங்களுக்கான கோபங்களைக் கவிதைகளில் உணரமுடிந்தது.” 

அச்சிலக் கவிதைகளுடன் மூடிவைத்து விட்டு பிறகு படித்துக் கொள்ளலாமெனப் பொறுத்துப் படிக்க ஆரம்பித்த இந்தப் பத்து நாட்களில் நான்கு முறைகள் வாசித்து விட்டேன். என்னைப் போன்ற அரைகுறைக் கவிதை வாசிப்பாளனுக்குச் சிரமப்பட்டு மீண்டும்மீண்டும் படித்து அர்த்தங்களைத் தேடவேண்டிய கவிதைகளுக்கு மத்தியில், வாசித்தவுடன்  சிந்தனையில் ஒட்டிக் கொண்டு நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்த கூடிய எளிமையான கவிதைகளைத் தொகுப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த நிறைவைத் தந்தன இந்த மீன்கள்.

கவிஞர்களின் சமூகக் கோபம் என்பது வீரியமிக்கதாகயிருக்கும் என்பதை மீண்டுமொரு கவிஞர் தன் வீட்டுச் ஜென்னலின் வழியே மட்டுமே கண்டு கவிதையின் வாயிலாக எழுதாமல், சமூகத்தின் கூடவே நடக்க முயற்சித்து அந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதன் வெளிப்பாடு பெண்ணியம், ஈழம், கல்வி, தத்துவம், சூழலியல், அரசியல் எனத் தொகுப்பு முழுவதும் விரிந்துக் கிடக்கிறது.”  உதாரணமாக யுத்தம் என்றொரு கவிதை,

"கத்தியின்றி
  ரத்தமின்றி
  யுத்தஞ் செய்றான்
  கார்ப்பரேட்டு
  அட
  கம்முனு கெட
  கத்துனா
  நீ நக்சலைட்டு"

இவற்றிற்கெல்லாம் முத்தாயிப்பாக ஒரு கவிஞன் தனக்குக் கிடைக்கும் கிடைக்கப் போகும் மகுடத்தைத் தூர எறிகிறான் என்றால் அவனது கோபத்தின் உச்சம் மிக எளிதாகவே புரிந்துவிடுகிறது "விடுதலை" என்கிற கவிதை

" கூண்டைத் திறந்துவிடு
   தூர எரிகிறேன்
   தூக்கிச் செல்
  நீ அணிவித்த மகுடத்தை" 

இப்படியாகப் பல கவிதைகளைச் சொல்லிக் கொண்டும், ரசித்துக்  கொண்டும் செல்லும் நேரத்தில் உரக்கச் சிந்தனை ஒன்று ஓங்கி வருகிறது. அதுதான்  இத்தொகுப்பில் காதல் கவிதைகள் இல்லை என்பது. ஆனால் தொகுப்புக் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இணையத்தில் பதிவிடப்படும் காதல் கவிதைகளில் ஒன்றிரண்டையாவது சேர்த்திருக்கலாம்  தொகுப்பில்.

கூடுதல் சிறப்பாக இக்கவிதைகளை வாசிக்கும் போது சில நேரம் கண் மூடி கவிஞர் ஆன்மன்னின் குரலில் சொல்வது போல் நினைத்துப் பார்த்ததுண்டு. அதனால்,  மரங்கள் நிறைந்த வனத்தில் சிற்றோடையின் சலசலப்பிற்கு நடுவே மங்கிய ஓர் மாலை வேளையில் சிறுமிடறு மதுக்குப் பிறகானப் போதையில்லா போதைக்கிடையில் ஆன்மன்னின் குரலில் ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கச் சொல்லி ரசித்திட வேண்டும். அப்படியொரு களவாடும் குரலுக்குச் சொந்தக்காரர். அதேபோல் அடுத்தடுத்த தொகுப்புகளை வெளியிடும் போது வெளியீட்டு விழாவை அழகிய வனத்தில் வைத்திடவும் ஆயத்தம் செய்த வேண்டும்.   

மொத்தத்தில் ஆன்மன்னின் லெமூரியக் கண்டத்து மீன்கள் கவிதை தொகுப்பு ஒரு ரசனைக்காரனின் கோபக் கவிதைகள் என ஒற்றை வரியில் சொல்லிவிட்டுச் செல்லலாம்.

22 Jun 2016

கதாநாயகன் ஆனேன்

அழைத்துப் பேசிய அரைமணி நேரத்திற்குள்ளாக மொத்தக் குடும்பமும் சேப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டனர்.

"என்னைக் கண்டவுடன் மாமா என்று கத்தியபடித் துள்ளிக்குதித்து ஓடியாந்து, ஒரே துள்ளலில் என் கைகளில் வந்தடைன்தவள். கன்னத்தில் முத்தங்கள் கொடுத்துச் சிரித்தாள்."

"இவள்தான் இப்படியென்றால், அவள் தம்பி குட்டிப்பையன் அறிவோ அதற்கு மேல் இருக்கிற நான்கு பற்களைக் காட்டிய படியே அம்மாவின் கையிலிருந்து தாவி 'அக்கா மாமா, அக்கா மாமா' என்று சொல்லிக் கொண்டே என்னிடம் வந்தான். யாழினியை இறக்கிவிட்டு அவனை வாங்கியதும் அக்காவைப் போல இவனும் முத்த மழை."

அதுவென்ன அக்கா மாமான்னுக் கேட்க, அக்கா என்னை மாமா என்று அழைப்பதால் அவனுக்கு நான் அக்கா மாமாவாம்.

அதன் பின்னர் அனைவரும் கடற்கரைப் போகலாமென முடிவெடுக்க. " அப்பா, நீங்க அம்மாவையும், தம்பியையும் வண்டியிலக் கூட்டிட்டுப் போங்க, நான் மாமாவோட நடந்து வருகிறேன்." , எனச் சொன்னவளைக் கைப் பிடித்து அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன்.

மாமா எனத் துவங்கிப் பேச ஆரம்பித்தவள். " தம்பி, கல்லால் என் மண்டைய ஓடச்சிட்டான்" , " ஸ்கூல் மாறப் போறேன்" , "தம்பி ரொம்ப அடம்பிடிக்கிறான், அதனால அவனப் பால்வாடிலச் சேக்கப் போறாங்க" , " அப்புறம் அம்மா நீங்க சொன்ன மாதிரி மீன் குழம்பு வச்சி கொடுத்தாங்க" என அடுக்கடுக்காகப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தவள் போன தடவ போன் பண்ணுனப்ப ஊருல இருக்கேன்னு சொன்னீங்களே!... எந்த ஊருக்கு போயிருந்தீங்கன்னுக் கேள்வி கேட்க ஆரம்பிக்க.

நானும் கடந்த இரு மாதங்களில் எங்கெல்லாம் சென்றேனோ அனைத்தையும் ஒன்று விடாமால் சொல்லிக் கொண்டிருக்கும் போது பாலா அவர்களை இறக்கி விட்டு விட்டு எங்களை அழைக்க வந்து விட்டார்.

கடற்கரைச் சென்றவுடன், குட்டிபையன் அறிவிடம் என்னடாப் பையா பால்வாடிப் போகபோறியாமே என்றதும் சிரித்துக் கொண்டே.... ஈ...ஈ...ஈன்னுத் தலையாட்டினான்"

உன் வயசு என்னடான்னுக் கேட்டதற்கு "தென்ற"ன்னுப் பதில் சொல்ல, நான் அதற்குள்ளவெல்லாம் பள்ளிக்குச் செல்லவும் வேண்டாம், அனுப்பவும் வேண்டாமென்று பாலாவிடம் சொல்லிய வாரே கடற்கரையினுள் சென்றோம்.

உள்ளே சென்றவுடன் ஓடி - பிடித்துத் துவங்கி, கிச்சிகிச்சித் தாம்பூலம் வரை பல விளையாட்டுகளை விளையாடியும் மணலில் ஆட்டம் போட்டும் குதுகலமாக இருந்துவிட்டுக் கிளம்பும் போது யாழினியின் அம்மா சொன்னா விசையம்தான் நேற்றைய மாலையை அழகாகியதொடு மட்டுமல்லாமல் ஏதோ, நாம சரியாதான் போயட்டிருகிறோமுன்னு நினைக்கத் தோன்றியது.

“தினமும் யாழினிக்கு கதைச் சொல்ல வேண்டுமாம். அப்படிக் கதைச் சொல்லும் போது கதையின் நாயகனாக இனியன் என்ற பெயர் இருக்க வேண்டுமாம். அந்தப் பெயர் இல்லையென்றால் பாப்பா கதையே கேட்பதில்லை. உங்களுடன் பேச ஆரம்பித்த பின்பு ரொம்பவே மாறியிருக்கா, பேச்சில், செயலில் கொஞ்சம் தெளிவாயிருக்கா. மாமா மாதிரி நிறையப் புத்தகம் படிக்கணுமுன்னு சொல்லுறா, உங்களை வச்சிக் கதைச் சொல்ல எனக்கும் போர் அடிக்குது அதனால எனக்குப் போர் அடிகிறப்ப போன் போட்டு தாறேன் இனிமே நீங்களே சொல்லிக்கோங்க” என்றெல்லாம் அவங்க சொல்லச் சொல்ல மௌனமான புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்து கொண்டியிருந்தேன்.

ஆனால், உள்ளுக்குள் போய்க்கொண்டிருக்கும் பாதையில் சரியாகத்தான் போய்கொண்டிருகிறோம் என்ற எண்ணமும், கூடவே அதீதப் பயமும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் போல என்கிற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது/ கொண்டிருகிறது.

அதற்குள்ளாக, பாலா ஆளுகொரு அவித்த சோளக் கருத்துகளுடன் வந்து நிற்க. அனைவரும் சாபிட்டுக்கொண்டேயிருக்கும் போது, யாழினி “ அப்பா நீயொரு மஷ்ரூம் காளான்” எனச் சொல்லிச் சிரித்தாள். நான் என்னவென்று கேட்க.

அன்றொருநாள் குடும்பத்துடன் அனைவரும் எங்கேயோ சென்றிருகின்றனர். அப்போது பாலா சூப் கடைக்குச் சென்று மஷ்ரூம் சூப் ஒன்னு, காளான் சூப் ஒன்னுன்னு அவையிரண்டும் ஒன்றென்று தெரியாமல் ஆர்டர் கொடுக்க. சப்லேயர் சிரித்துக் கொண்டு இரண்டும் ஒன்றுதானே எனக் கேட்க அன்று முதல் இவள் அப்பாவை நீயொரு மஷ்ரூம் காளான்னு கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள். உங்களுடன் பழகிய பிறகுதான் இனியன் இவளிடம் இதுபோன்ற கலாய்த்தல் விசையமெல்லாம் ஆரம்பித்திருக்குன்னு பாலா என்னிடம் சொல்ல. சற்று நேரத்திற்கு முன் யாழினியின் அம்மா சொன்னது நினைவுக்கு வர. பேந்தபேந்த முழித்துக் கொண்டே கலாயித்தலெல்லாம் இல்லையின்னா வாழ்க்க நல்லா இருக்குமான்னுக் கூறிக் கொண்டே அவளைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டேன்.

அப்போது, நாங்கள் நின்றிருத்த இடத்திற்கு நேராக ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தினார். அதில் தற்கால அரசியல் தளபதியின் புகைப்படம் ஒட்டியிருந்தது. அதைப் பார்த்ததும் மு.க.ஸ்டாலின் போட்டோ ஓட்டிருக்காங்க என்றால். நான் ஆச்சரியமாக இவரையெல்லாம் தெரியுமா? எனக் கேட்க... காரல் மார்க்ஸ், லெனின் முதல் தற்கால மோடி, சீமான் வரை அனைவரது புகைப்படங்களையும் அடையாளம் சொல்கிறாள் எனச் சொன்னவுடன், நம்ம வார்ப்பு இப்படியில்லை என்றால் தான் சிக்கல் எனச் சொல்லிக் கொண்டே கிளம்பினோம்.

கிளம்பும் போதும், கட்டிபிடித்து இருவரும் மாறிமாறி முத்தமிட்டுச்செல்ல நான் தான் சற்றுப் பெருமைபட்டுக் கொண்டிருகிறேனா? அல்லது பயந்துக் கொண்டிருகிறேனா? என்று புரியாமல் தற்போது வரை குழம்பிய நிலையில் இருக்கிறேன். ஒரு குழந்தை என்னை அவள் உலகின் கதாநாயகனாகப் பாவித்து வருகிறாள் என்பதை எண்ணி. இருப்பினும் அவற்றையெல்லாம் மீறி ஒருவித அமைதிக் கலந்தப் புத்துணர்வும் இது போதுமென்ற மனநிலையுமே ஏற்பட்டிருகிறது.

#இனியன்

அடுத்த தலைமுறை

வழக்கம் போல் அன்றும் tailors ரோடு சென்று அங்கிருந்துப் பேருந்து மாறிச் செல்லலாமென 27B பேருந்தில் ஏறினேன். உடன் நண்பர் ஒருவரும் இருந்தார். அவ்வபோது நான்போகிற பேருந்தில் சிந்தாதிரிப்பேட்டையில் ஏறும் மாணவர்களும் (எந்தக் கல்லூரி என்று தெரியவில்லை), பச்சையப்பா கல்லூரியில் M.phil. படித்துக் கொண்டிருக்கும் பாரவையற்ற மாணவியும் ஏறினர்.

பேருந்தில் சற்றுக் கும்பல் அதிகமாக இருந்ததால் இருக்கைகள் எதுவும் காலியாக இல்லை. உடனே கல்லூரி மாணவர்களில் ஒருவன் அமர்ந்திருந்த பெண்ணை எழச் சொல்லிப் பார்வையற்ற பெண்ணை அமரவைத்தான். பிறகு எப்போதும் போல் பாடல், தாளம் ரகளை எனக் குதூகலமாகச் சென்றது அம்மாணவர்களுக்கு.

ஆனால், அந்தக் குதூகலத்தைப் பார்த்த நண்பர் மாணவர்களை அவர்கள் சேத்துப்பட்டில் இறங்கும் வரை திட்டிக் கொண்டே வந்தார். நானும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேதான் வந்தேன்.

பிறகு இருவரும் tailors ரோட்டில் இறங்கும் போது பார்வையற்ற அந்தப் பெண்ணும் இறங்கினார். வழக்கம்போல் அருகில் சென்று 15B வந்தால் ஏற்றி விடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சற்றுத் தள்ளி நின்று கொண்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போதும் நண்பர் மாணவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார் இவர்களுக்கெல்லாம் பொறுப்பேயில்லை, அராத்துகள் என்று. உள்ளுக்குள் அவர் அவ்வாறு பேசுவது பிடிக்கவில்லை இருந்தாலும் அவ்விடத்தில் அவரிடம் பதில் பேசுவது உகந்ததல்ல என்று நினைத்துச் சற்று அமைதியாகே இருந்தேன் ஏனென்றால் அவரது குணம் அப்படி அவர் புழம்பும் போது யாராவது குறிகிட்டால் பெருங்கோபம் கொண்டு நம்மை வசைப் பொழிய ஆரம்பித்து விடுவார் மற்றபடிப் பொறுமையாகக் காத்திருந்து எடுத்துச் சொன்னால் புரிந்துக் கொள்ளகூடியவர். அதனால் மாலைக் கூடச் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாகவேயிருந்தேன்.

"சற்று நேரத்தில் அடுத்தடுத்து வருசையாக வெவ்வேறு பேருந்துகள் tailors ரோடு பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிப்புச் செய்ய. அப்பெண் ஏறவேண்டிய 15B பேருந்து சிக்னலிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு நிறுத்துத்தத்தில் நின்றிருந்த அனைத்துப் பேருந்துகளையும் கடந்து நேராகச் சென்றது".

"நான் அப்பெண்ணிடம் பேருந்து நிற்காமல் சென்று கொண்டிருகிறது என்றுசொல்ல முன்நகர்ந்தப் போது, அப்பேருந்திலிருந்து ஒரே சத்தம்".

மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பேருந்தை நிறுத்த சொல்ல பேருந்தும் சாலையை அடைத்து நின்றிருந்த அனைத்துப் பேருந்துகளுக்கும் சற்று முன்பாகப் போய் நின்றது.

"அப்பேருந்திலிருந்து இறங்கி ஓடி வந்த மாணவர்கள் அப்பெண்ணுக்கருகில் வந்து வாங்கக்கா என்று கை பிடித்து அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றி விட்டு, அவர்களும் ஏறியப் பின் மீண்டும் பாடல்கள் தாளம் எனப் பேருந்து புறப்பட்டது".

இச்சம்பவங்கள் நடந்து முடிவதற்குள்ளாக ஆசுவாசத்திற்கு வந்திருந்த நண்பரிடத்தில் கூறினேன். மாணவர்கள் தங்கள் பொழுதுப் போக்குக்காகச் செய்யும் சில காரியங்களை வைத்து அவர்களை வசை பாடாதீங்க. முடிந்தால் அவர்கள் மனோநிலைக்குச் சென்று ரசித்து விடுங்கள். பேருந்தில் இடம்வாங்கித் தந்ததிலிருந்து ஓடுகிற பேருந்தை நிறுத்தி கல்லூரிக்கு அழைத்துச் சென்றது வரை மாணவர்கள்தான். அவர்களை நீங்கள் திட்டுவது போல் தட்டையாகவெல்லாம் பாவித்து விட முடியாது. அவர்களிடம் நல்ல நற்பண்புகள் ஏராளம் இருக்கு அதனைச் சரியான வழிகளில் ஊக்குவித்தல் முந்திய தலைமுறையினரான நமது தலையாயக் கடமையல்லவா.

நாம் எப்போதும் அடுத்தத் தலைமுறையினரைக் குற்றம் சொல்லியே வளர்ந்துவிட்ட சமூகத்தில்தானே இருகிறோம். குறிப்பாக வயது குறைவானவர்களை ஒருவித அடிமைத் தன்மையுடனும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது தமக்குத்தான் எல்லாம் தெரியும், என்ற அகபாவங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்துக் கொண்டிருப்பதுதான் இங்குத் தலையாயப் பிரச்சனை. முதலில் அவற்றிலிருந்து வெளிவர மூத்தவர்கள் வெளிவர முயற்சித்தாலே அவர்கள் சிறப்பானவர்களாகவே வருவார்கள்.

அதைவிடுத்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது... வீனானவர்கள்... வாழத்தெரியாதவர்கள்...பொறுப்பற்றவர்கள்... என்றெல்லாம் வசைபாடிக் கொண்டிருப்பது எவ்வகையில் நியாயம்?...

#இனியன்

10 Jun 2016

The Perfect Life

டிப்ளோமா முதல் வருடம் முதல் நாள் வகுப்பு. வகுப்பின் அறிமுகப்படலங்களுக்குப் பிறகான இரண்டாம் நாளின் முதல் வகுப்பு வேளை. 

"சாதனா"ன்னு ஆங்கிலத் துணைநிலைப் பேராசிரியர் தான் வகுப்பு எடுத்தார். ஊரே கொண்டாடிய மலர் டீச்சர் தோற்றுப் போகணும். வகுப்பிற்கு வந்தவங்க Ben Jonson எழுதிய "The perfect life" ங்கிற poem எடுக்க ஆரம்பித்தாங்க.
அந்த poem இதுதான் 

It is not growing like a tree 
In bulk, doth make Man better be,
Or standing as an oak, three hundred year,
To fall a log at last, dry, bald and sere;
A lily of a day
Is fairer far in May.
Although it fall and die that night_
It was the plant and flower o'light.
In small proportions we just beauties see.
And in short measures life may perfect be.

ஆனால், பாடம் ஆரம்பிக்கும் முன் எங்களை நோக்கி "what is mean by perfect life?" perfect lifeன்னா என்ன? அப்படின்னு ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் கேட்டாங்க. ஏன்னா, எங்கள் வகுப்புத் தமிழ் வழிக் கல்வி வகுப்பு.

கிட்டத்தட்ட வகுப்பே மூன்று நிமிடம் அமைதியா இருக்கும் போது இரண்டாம் வருசையின் நடுபத்தி மேசையின் மூன்றாவதாக அமர்ந்திருந்த நான் எழுந்து "ஒரு வட்டமிட்டு வட்டத்திற்குள் சதுரமென்னும் திட்டமிட்டு வாழ்வதுதான் perfect life" அப்படின்னு பதில் சொன்னவுடன் பயங்கர மகிழ்ச்சியாகி மற்ற நண்பர்களைக் கையெல்லாம் தட்டச் சொல்லிப் பாராட்டினாங்க. இந்தப் பதிலை ஆசிரியர்கள் அறையிலெல்லாம் சொல்லிப் பேசியதாக மறுநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். (பி.கு: அவ்வருடம் ஆங்கிலப் பாடத்தில் அரியர் வைத்தவன் நான். இச்சம்பவத்தை இங்குச் சொல்வதால் என்னைப் படிப்பாளி மற்றும் அறிவாளி என எடுத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.)

அதன் பிறகு நண்பர்களிடமட்டுமல்லாமல் பல இடங்களில் "ஒரு வட்டமிட்டு வட்டத்திற்குள் சதுரமென்னும் திட்டமிட்டு வாழ்வதுதான் perfect life" என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.

ஆனால், தற்காலத்தில் யாரிடமும் அதனைச் சொல்லியதில்லை. காரணம் இப்போது எனக்கு எந்த வட்டம், சதுரம், திட்டம் என எதுவுமே கிடையாது. அதனால் "life perfect" ஆக இருப்பதை விட "life beautiful" ஆக இருக்கிறது. வாழ்வினில் ஏற்படுகிற அன்றன்றைய அனுபவங்கள் ரசித்துக் கொண்டிருப்பது எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்பதை அனுபவிக்கும் போதுதான் தெரிகிறது.

மேலும் "perfect life" என்ற சொல்லுக்கு இங்கு வெவ்வேறானக் காரணங்கள் கற்பிக்கப்பட்டு ஒருவித மாயச் சமூகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருகிறது. அதனால் இங்கு என்ன மாதிரியான மன உருவாக்கம் உருவாகியிருகிறதென்றால் perfect ஆக வாழ்பவர்களாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் beautiful ஆக வாழ்பவர்களைப் பார்த்து ஏக்கம் கொள்ளவைத்திருகிறது என்பதை அனுபவங்களும் ரசனைகளும் உணர்த்திக் கொண்டேதானிருகிறது.

எவ்வித அனுபவங்களையும் புன்னகை முகத்துடன் ரசித்தப்படி அனுபவிக்க ஆரம்பிபோமாயின் "The perfect life is not a beautiful life. But, the beautiful life is the perfect life" என்பதை உணர்ந்துக் கொண்டவன் என்கிற முறையில் இன்று அதிகாலைக் கனவில் வந்த சாதனா டீச்சரை தற்போது பார்த்தால் வட்டம், சதுரம், திட்டமெதுவும் தேவையில்லை அழகியலையும், அனுபங்களையும் ரசித்தபடிப் புன்னகை மாறாமல் நம்மால் இயன்றளவு சகமனிதர்களுக்கு உதவிக்கொண்டும் அவர்களைச் சிரிக்கவைத்துக் கொண்டும் அழகானதொரு வாழ்க்கையை வாழ்வோமாயின் அதுதான் perfect lifeன்னு பதில் சொல்லுவேன்.

#life_is_beautiful

#இனியன்

1 Jun 2016

அப்பாவாகிப்போனேன்...



இதோ நேற்றோடு இந்த வருடத்திற்கான மே மாதம் முடிந்தது. சிறுவயது முதலே இந்த மாததின்மேல் ஓர் அலாதியான பேராவலும் பெருமகிழ்ச்சியும் இருந்து கொண்டேதானிருந்திருகிறது. சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும் அதைப் பற்றிய கவலை என்ற ஒன்று இருந்ததில்லை. அப்படியென்ன இந்த மாதத்தின் மீது அவ்வளவு ஆவல்.

சிறு வயது :

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சூரிய வெளிச்சம் படர ஆரம்பித்து விடும். அந்த நேரத்திலேயே கிரிகெட் விளையாட காஜாமலை காலனி பொதுப்பணித்துறை மைதானம் நோக்கிப் புறப்படிருப்போம் நண்பர்கள் படைசூழ. ஐந்தரை மணிக்கெல்லாம் விளையாட்டையும் ஆரம்பித்துப் பத்து மணிக்கெல்லாம் விளையாட்டை முடித்து, வேலைக்குச் சென்றுவிட்ட அப்பாக்கள் இல்லாத வீட்டில் நுழைத்தால் சொல்லிவைத்தார் போல் அனைத்து அம்மாக்களும் எங்கள் கோலம் கண்டு ஒரே மாதிரியான வாய்மொழியில் திட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தளவிற்கு அழுக்காக இருப்போம் அனைவரும்.

அவர்கள் திட்டுவதிலும் நியாமில்லாமல் இருக்காது. பெரும்பாலும் வசைமொழிகள் அனைத்தும் நாங்கள் அழுக்காக இருக்கிறோம் அல்லது வெயிலில் விளையாடுகிறோம் என்பதையெல்லாம் விட, தண்ணீர் பஞ்சக் காலத்தில் எங்கள ஏன்டா இப்படி வத்தக்கிறீங்க என்பதாகவேயிருக்கும் (மே மாதம்தான் திருச்சி காஜாமலை காலனி அரசுஅலுவலர்கள் குடியிருப்பின் தண்ணீர் பஞ்ச மாதம்).

அவ்வசை மொழியெல்லாம் சிறிதும் காதில் போட்டுக் கொள்ளாமல் மெனக்கெட்டும் சிரமப்பட்டும் அவர்கள் குடம் குடமாகத் தூக்கிக் கொண்டுவந்த வீட்டு ட்ரம்களில் சேர்த்திருந்த தண்ணீரை உபயோகப்படுத்திக் கை கால் கழுவி சாப்பிட துவங்குவோம் அநேகமாக எல்லார் வீட்டிலும் இக்கதைதான் நடக்கும்.


அதிலும் நான் கொஞ்சம் சிறப்பானவனில்லையா ட்ரமிலிருந்து தண்ணீரை ஜக்கால் எடுத்துக் கழுவாமல் அப்படியே ட்ரமில் கையையும் உடல் எந்தளவிற்கு உள்ளே செல்கிறதோ அந்தளவிற்கு உள் நுழைத்துக் கழுவி கால் கழுவுவதற்கு மட்டும் ஜக்கை உபயோகப் படுத்துவேன். அம்மா இதப் பார்க்கலைன்னாச் சரி, பார்த்துட்டாங்க அவ்வளவுதான் அடிபிரிச்சி மேஞ்சி பிறகுதான் சோறு.

காலை நேரச் சோத்தை முடித்துப் பதினோரு மணி வாக்கில் மீண்டும் வீட்டை விட்டுக் கீழிறங்கி வேப்பமரத்து நிழலில் சிறிது நேரம் ஒன்பிச் கிரிகெட் விளையாடிட்டு அடுத்த ஆட்டமாகக் கோலி, பம்பரம், மரமேறிகொம்பேரின்னு என்ன தோணுதோ அவற்றை விளையாட ஆரம்பிப்போம். ஆனால் அது முழுக்க அந்த வேப்ப மர நிழலில் தான் நடக்கும். இதுக்கிடையில் வேலைகளெல்லாம் முடித்து விட்டுத் தாயம் விளையாடிக் கொண்டிருக்கும் மூன்று கிழவிகளுடனும் வம்புக்குப் போய் அதுகளைச் சீண்டி அவர்களிடமும் திட்டு வாங்குதல் என்பதும் தினமும் நடைப்பெரும் சம்பவமாகவேயிருக்கும்.


இப்படியே ஒன்னரை மணிவரை விளையாடிவிட்டு மதிய சோத்துக்கு வீட்டு ஜென்னலின் வழியே அழைப்பு வர மீண்டும் வீட்டுப் பிரவேசம் நடக்கும். ஆனால் காலையைப் போல் வசைகள் இருக்காது. கொஞ்சம் சுத்தமாக இருப்போம்.

மதியசோத்த முடித்து மீண்டும் வேப்ப மர நிழலில் கீழ்வீட்டுக் கிழவி வைத்திருக்கும் மரப் படுக்கையை இழுத்துப் போட்டு அதிலமர்ந்தும் படுத்தும் கதைகள் பேசியும் மூனரை வரை பொழுதைக் கழித்து மீண்டும் மைதானம் நோக்கி கால்கள் நடைப் போட சூரியன் மங்கும் வரை ஆட்டம் போட்டு அதன் பிறகு வீடு வந்து இருக்கிற தண்ணியிலக் குளித்து மொட்டை மாடியேறிக் கதைகள் பேசி இரவு சோத்தையும் மொட்டைமாடியிலேயே அமர்ந்துத் திண்ணு அங்கேயே படுத்துறங்கி மீண்டும் காலை சூரியன் வருவும் வேளையில் மைதானம் புறப்படுவோம். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் அப்பாக்கள் வீட்டிலிருக்கும்  காலங்களில்  மாலை விளையாட்டிற்குப் பதில் சைக்கிள் பயணம் போகும்.

பதின் வயது:

கிட்டத்தட்ட நண்பர்கள் அனைவரும் வளர்ந்து விட்ட நிலையில், சில மாற்றங்கள் குடும்பங்களிலும் இருபிடங்களிலும். இருந்தாலும் இந்த மே மாதத்தில் தான் வழக்கம் போல் ஒன்று கூடுவோம். அதேபோல் அதிகாலை விளையாட்டிற்குச் செல்வோம். ஆனால் திருச்சி  ரயில்வே போலிஸ் மைதானத்திற்கு மாற்றியிருந்தோம். அதேபோல் விளியாட்டுக்கள் முடித்து வரும் வீடு திரும்பும் போது காஜாமலை கல்குவாரி குளத்தில் குளித்து, குளித்தது வீட்டிற்குத் தெரியாமலிருக்க மண்ணை உடலில் பூசிக் கொண்டு செல்வோம். எல்லைகள் மாறியிருந்ததாலும் கிழவிகள் அனைத்து  மரணித்திருந்ததாலும் வேப்ப மர நிழலும் கிழவிகளுடனானச் சீண்டல்களும் இல்லாமலே கடந்தது பதின் பருவம். 

அவற்றிக்கு மாறாகக் காலை விளையாட்டு மற்றும் சோத்துக்குப் பிறகு புத்தகங்கள் கையிலேறின. வீடு மாறியிருந்ததால் வேப்ப மரத்திற்குப் பதில் தூங்கமூஞ்சி மரம் வந்திருந்தது. அதனடியிலமர்ந்து ஜெயகாந்தனையும், சுஜாதா, பெரியார் என ஓட மீண்டும் மாலை மைதானம் குளக்குளியல் எனப் போகும் மே மாதம்.

தற்காலம்:

பலவாறான வாழ்வியல் பேரனுபவங்களுக்குப் பிறகு என்னை நானே கட்டமைத்துக் கொண்ட இந்தத் தேடலினால் உருவான “பல்லாங்குழி”  விளையாட்டுகளுக்கான பயணத்தில் கடந்த  மூன்று ஆண்டுகளாக மே மாதம் என்பது பயணத்திற்கான மாதமாக இருக்கிறது. அதிலும்  குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வதற்கானப் பயணமாகவேயிருகிறது.

கடந்த இருவருடங்களை விட இவ்வருடப் பயணம் என்பது மிகச் சிறப்பாகவே இருந்தது. ஒவ்வொரு குழந்தைகள் நிகழ்வின் போதும் குழந்தைகளை ஏதாவதொரு உறவுமுறை சொல்லி அழைக்கச் சொல்வதுதான் எனது வழக்கம். அதையேதான் இம்முறையும் செயல்படுத்தினேன். அதேபோல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள் முடிந்தப் பிறகு எப்போது சிறு உரையாடல் நடைபெரும் குழந்தைகளுடன் அதுபோலதான் சிவகாசி கரிசல் பள்ளியில் (கரிசல் பள்ளியைப் பற்றி விரிவாக மற்றொரு பதிவில்) இருந்த இரு தினங்களிலும் விளையாட்டையும் மீறிக் குழந்தைகளுடனான உரையாடல்கள் அதிகம் நடந்தது. அதில் அக்கா, தம்பி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயதுடைய  குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்துப் பேச ஆரம்பித்தனர்.

முதலில் அவள் தான் பேசினாள் “உங்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடச் சொன்னீங்க உங்களை அப்பான்னுக் கூப்பிடலாமான்னு” கேட்டாள். இதுவரை சில நிகவுகளில் இதுபோல் நடந்ததுண்டு ஆனால் மாமா, சித்தப்பா, தாத்தான்னுக் கூடக் கூப்பிட்டிருக்காங்க. ஆனால் அப்பான்னுக் கூபிடட்டான்னுக் கேட்டது இதுதான்  முதல்  முறை. அப்படி அப்பான்னுக் கூபிடட்டான்னுக் கேட்டு நின்றவர்களைப் பார்த்த போது இப்பிரபரபஞ்சத்தின் பெருமெளனம் என்னுள் ஏற்பட்டுக் கண்முன்னேயிருந்த அத்தனையும் அப்போதுவீசிய மெல்லிய காற்றில் கலந்து போய்க் கொண்டிருந்தது போலொரு பிரம்மை.

சில மணித்துளிகளில் அப்பிரம்மை விலகி இயல்பு நிலைக்குத் திரும்பி அவளிடம் சொனேன், “அதுதான் உன் விருப்பமென்றால் அப்படியே கூப்பிடென்று”. சரிப்பா என்று என்று சொன்னவள் அருகிலிருந்த அவளது தம்பியும் சரிப்பா என்றான். ஏனோ, ஏன் அப்பாவென்று கூபிடுரீங்கன்னு அபத்தத்தனமான கேள்விகளைக் கேட்கவேயில்லை. அவசியமுமில்லை அங்கிருந்த இரு தினங்களும் என்னை அப்பா அப்பா வென்றே அழைத்து வந்த அவர்களிருவரும் இறுதிநாள் மாலை நான் புறப்பட்ட போது இடுப்போடு கட்டியணைத்து அடுத்து எப்ப இங்க வரப்ப கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணுமுன்னு சொல்லி வழியனுப்பி வைத்தார்கள்.

கரிசலிலிருந்து இப்படியொரு நெகிழ்வான மனநிலையிலிருந்து புறப்பட்டு நெய்வேலி இருநாள் நிகழ்விற்குப் பயணம். அங்கு அனைத்துக் குழந்தைகளும் பதிமூன்று மற்றும் பதினான்கு வயதையொத்தக் குழந்தைகள்தான் இருந்தார்கள். அங்கும் வழக்கம் போல் நிகழ்வு  மற்றும் விளையாட்டுகள் முடித்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் 7 பெண் குழந்தைகள் ஒன்றுகூடி என்னருகில் என்னிடம் என்னைப்பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி “உங்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிட சொன்னீங்க உங்களை அப்பான்னுக் கூபிடலாமான்னு” இருதினங்களுக்கு முன்னாள் எதிர் கொண்ட  அதே கேள்வியைக் கேட்டாள். நானும் வழக்கம் போல் சரியென்றேன். “அப்படின்னா உங்களை ‘டாடி’ன்னுக் கூப்பிடலாமா?” என்றாள். அதற்கும் சரியென்று நான் தலையாட்டிய அடுத்த வினாடி வெடித்து அழ ஆரம்பித்தவள் பத்து நிமிடம் வரை தேம்பித்தேம்பி அழுதுக் கொண்டேயிருந்தாள். அருகிலிருந்த தோழிகள் அனைவரும் அவளைச் சமாதனப் படுத்தியவாறே என்னிடம், இப்பதான் மாமா அவளோட அப்பா செத்துப் போனாரு நான்கு மாதம் ஆகிறதென்று கூறினார்கள்.

நானும் எம்பங்கிற்குச் சமாதனம் செய்து அழுகையைக் கட்டுப்படுத்த சமாதானமடைந்து எனது எண்ணையும் வாங்கிக் கொண்டு பிரிந்து சென்றவள், மறுநாள் மாலை என்னை அலைஎசியில் தொடர்பு கொண்டு பேசும்போது இப்பக்கம் வரும் போது வீட்டிற்கு வாங்கப்பா என்று சொல்ல  நானும் வருகிறேன் சரியென்றேன். அதன் பிறகு அழைப்புகள் எதுவும் வரவில்லை. இருந்தாலும் அவளைப்பற்றித் தற்போதும் யோசித்து வருகிறேன். பொதுவாகப் பதிமூன்று, பதினான்கு வயதுகளில்தான் பெற்றோர்களுடனான முரண்பாடுகளும் சண்டைகளும் வருகிற வயது. ஆனால் அவ்வயதில் பெண் குழத்தையோருத்தி அப்பாவாகப் பாவிகிறாள் என்றால் அவளின் வலிகள் எத்தனை வன்மமானதென்று யோசிக்கவே முடியவில்லை.

இப்படியாக இவ்வருட மே மாதமும் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாகிப்போன இனியனாக மீண்டுமொருமுறை மறக்கவியலாத மே மாதமாக அமைந்தது. ஒவ்வொரு பயணங்களும் ஒருவிதப் புத்துணர்வைக் கொடுத்துக் கொண்டேதானிருந்தால் இம்மேமாத பயணம் என்னை அப்பாவாகிச் சென்றுகிறது. 

பயணங்கள் தொடரும்...

#இனியன்