ஒரு புத்தகத்தைப் படிக்கவேண்டுமென்ற
ஆவல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் சில புத்தகங்கள் அதன்
சாரம்சத்தினைத் தாண்டி ஆவலைத் தூண்டுவது புத்தகத்தின் பெயர், அட்டைப்படம்
மற்றும் எழுத்தாளரின் முந்தைய செயல்பாடுகள் முக்கியப் பங்கு வகுக்கிறது. அதிலும்
கவிதைத் தொகுப்பாக இருந்தால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படவே செய்கிறது.
இந்த நவீனத் தொழில்நுட்ப யுகத்தில்
இணையம், முகநூல் மற்றும் வாட்ஸ் - அப் வழியே பல கவிஞர்களும் தங்கள்
கவித்திறனை வெளிபடுத்திக் கொண்டிருக்கும் காலக்கட்டம். இதில் பலரது படைப்புகள்
தங்களது சுயம் சார்ந்த பதிவுகளாகவே வளம் வருகிறது. அதில் சிலரது படைப்புகள்
மட்டுமே நம்மைத் தொடர்ந்து அவர்களையும்,
அவர்களது எழுத்துகளையும் தொடர் வைத்துவிடுகிறது.
அப்படி நாம் தொடரும் நபர்களின்
படைப்புத் தொகுப்பாக வருகிற போது, இருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும்.
ஒன்று நாம்தான் ஏற்கனவே படித்துவிட்டோமே அதிலென்ன இருக்கப்போகிறது என்ற
அலட்சியமும். இரண்டாவதாக ஏதாவது புதிதாக இருக்குமா என்கிற எண்ணமும் வரும்.
இவற்றில் இரண்டாவது எண்ணம் எழுவதென்பது மிகவும் அரிதுதான். அதிலும் குறிப்பாகக்
கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளைப் பொறுத்த வரையில் இவ்வெண்ணம் வருவது
அரிதிலும் அரிதாகத்தான் இருகிறது சமகாலத்தில்.
இவற்றை மீறி வருகிற புத்தகங்களை
உடனடியாகப் படித்துவிட வேண்டுமென்ற உந்துதல் வந்துவிடுகிறது. அப்படிப்பட்டப்
புத்தகமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம்தான் ஆன்மன் எழுதியிருக்கும் “லெமூரியக்
கண்டத்து மீன்கள்” கவிதை தொகுப்பு.
புத்தகம் முகவரித் தேடி வந்த போது
அதைப் பெற்றுக் கொள்ள நானில்லை அங்கு. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் உறைப்
பிரித்துப் புத்தகத்தை வெளியெடுத்து முகர்ந்துப் பார்த்துவிட்டுக் கைக்கு
வந்தபக்கத்தைப் புரட்டிய பொழுது முதலில் தென்பட்டக் கவிதை
“அபத்தமாய் இருக்கிறது
தனிமையைத்
தனிமையெனச்
சொல்வது ”
என்கிற வரிகளைப் படித்தவுடன் “தனியறையில், தனித்த பயணத்தில், தனித்த புன்னகையில், தனித்த உறக்கத்தில், தனித்துக் கிடக்கும் எனது வலிகளில் என
அனைத்திலும் தனித்திருந்தாலும் என்றும்
தனிமையை உணராதிருக்கும் எனக்கு வாழ்வியல் நெருக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவே
இருந்தது.”
“மேலும், ஒருசிலக் கவிதைகளை வாசித்த போது
எக்காரணங்களுக்காக எல்லாம் என்னுள் கோபம் வருகிறதோ?... அதே காரணங்களுக்கான கோபங்களைக் கவிதைகளில்
உணரமுடிந்தது.”
அச்சிலக் கவிதைகளுடன் மூடிவைத்து விட்டு பிறகு படித்துக்
கொள்ளலாமெனப் பொறுத்துப் படிக்க ஆரம்பித்த இந்தப் பத்து நாட்களில் நான்கு முறைகள்
வாசித்து விட்டேன். என்னைப் போன்ற அரைகுறைக் கவிதை வாசிப்பாளனுக்குச் சிரமப்பட்டு
மீண்டும்மீண்டும் படித்து அர்த்தங்களைத் தேடவேண்டிய கவிதைகளுக்கு மத்தியில், வாசித்தவுடன் சிந்தனையில் ஒட்டிக் கொண்டு நமக்கு நெருக்கத்தை
ஏற்படுத்த கூடிய எளிமையான கவிதைகளைத் தொகுப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த
நிறைவைத் தந்தன இந்த மீன்கள்.
“கவிஞர்களின்
சமூகக் கோபம் என்பது வீரியமிக்கதாகயிருக்கும் என்பதை மீண்டுமொரு கவிஞர் தன்
வீட்டுச் ஜென்னலின் வழியே மட்டுமே கண்டு கவிதையின் வாயிலாக எழுதாமல், சமூகத்தின் கூடவே நடக்க முயற்சித்து
அந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதன் வெளிப்பாடு பெண்ணியம், ஈழம், கல்வி, தத்துவம், சூழலியல், அரசியல் எனத் தொகுப்பு முழுவதும் விரிந்துக்
கிடக்கிறது.” உதாரணமாக “யுத்தம்” என்றொரு கவிதை,
"கத்தியின்றி
ரத்தமின்றி
யுத்தஞ் செய்றான்
கார்ப்பரேட்டு
அட
கம்முனு கெட
கத்துனா
நீ நக்சலைட்டு"
இவற்றிற்கெல்லாம் முத்தாயிப்பாக ஒரு கவிஞன் தனக்குக் கிடைக்கும்
கிடைக்கப் போகும் மகுடத்தைத் தூர எறிகிறான் என்றால் அவனது கோபத்தின் உச்சம் மிக
எளிதாகவே புரிந்துவிடுகிறது "விடுதலை" என்கிற கவிதை
"
கூண்டைத்
திறந்துவிடு
தூர எரிகிறேன்
தூக்கிச் செல்
நீ அணிவித்த மகுடத்தை"
இப்படியாகப் பல கவிதைகளைச் சொல்லிக்
கொண்டும், ரசித்துக்
கொண்டும் செல்லும் நேரத்தில் உரக்கச் சிந்தனை ஒன்று ஓங்கி வருகிறது.
அதுதான் இத்தொகுப்பில் காதல் கவிதைகள்
இல்லை என்பது. ஆனால் தொகுப்புக் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதுவும் ஒரு
காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இணையத்தில் பதிவிடப்படும் காதல் கவிதைகளில்
ஒன்றிரண்டையாவது சேர்த்திருக்கலாம்
தொகுப்பில்.
கூடுதல் சிறப்பாக இக்கவிதைகளை
வாசிக்கும் போது சில நேரம் கண் மூடி கவிஞர் ஆன்மன்னின் குரலில் சொல்வது போல்
நினைத்துப் பார்த்ததுண்டு. அதனால், மரங்கள் நிறைந்த வனத்தில் சிற்றோடையின்
சலசலப்பிற்கு நடுவே மங்கிய ஓர் மாலை வேளையில் சிறுமிடறு மதுக்குப் பிறகானப்
போதையில்லா போதைக்கிடையில் ஆன்மன்னின் குரலில் ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கச்
சொல்லி ரசித்திட வேண்டும். அப்படியொரு களவாடும் குரலுக்குச் சொந்தக்காரர். அதேபோல்
அடுத்தடுத்த தொகுப்புகளை வெளியிடும் போது வெளியீட்டு விழாவை அழகிய வனத்தில்
வைத்திடவும் ஆயத்தம் செய்த வேண்டும்.
மொத்தத்தில் ஆன்மன்னின் “லெமூரியக் கண்டத்து மீன்கள் “ கவிதை தொகுப்பு ஒரு ரசனைக்காரனின்
கோபக் கவிதைகள் என ஒற்றை வரியில் சொல்லிவிட்டுச் செல்லலாம்.
No comments:
Post a Comment