வழக்கம் போல் அன்றும் tailors ரோடு சென்று அங்கிருந்துப் பேருந்து மாறிச் செல்லலாமென 27B பேருந்தில் ஏறினேன். உடன் நண்பர் ஒருவரும் இருந்தார். அவ்வபோது நான்போகிற பேருந்தில் சிந்தாதிரிப்பேட்டையில் ஏறும் மாணவர்களும் (எந்தக் கல்லூரி என்று தெரியவில்லை), பச்சையப்பா கல்லூரியில் M.phil. படித்துக் கொண்டிருக்கும் பாரவையற்ற மாணவியும் ஏறினர்.
பேருந்தில் சற்றுக் கும்பல் அதிகமாக இருந்ததால் இருக்கைகள் எதுவும் காலியாக இல்லை. உடனே கல்லூரி மாணவர்களில் ஒருவன் அமர்ந்திருந்த பெண்ணை எழச் சொல்லிப் பார்வையற்ற பெண்ணை அமரவைத்தான். பிறகு எப்போதும் போல் பாடல், தாளம் ரகளை எனக் குதூகலமாகச் சென்றது அம்மாணவர்களுக்கு.
ஆனால், அந்தக் குதூகலத்தைப் பார்த்த நண்பர் மாணவர்களை அவர்கள் சேத்துப்பட்டில் இறங்கும் வரை திட்டிக் கொண்டே வந்தார். நானும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேதான் வந்தேன்.
பிறகு இருவரும் tailors ரோட்டில் இறங்கும் போது பார்வையற்ற அந்தப் பெண்ணும் இறங்கினார். வழக்கம்போல் அருகில் சென்று 15B வந்தால் ஏற்றி விடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சற்றுத் தள்ளி நின்று கொண்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போதும் நண்பர் மாணவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார் இவர்களுக்கெல்லாம் பொறுப்பேயில்லை, அராத்துகள் என்று. உள்ளுக்குள் அவர் அவ்வாறு பேசுவது பிடிக்கவில்லை இருந்தாலும் அவ்விடத்தில் அவரிடம் பதில் பேசுவது உகந்ததல்ல என்று நினைத்துச் சற்று அமைதியாகே இருந்தேன் ஏனென்றால் அவரது குணம் அப்படி அவர் புழம்பும் போது யாராவது குறிகிட்டால் பெருங்கோபம் கொண்டு நம்மை வசைப் பொழிய ஆரம்பித்து விடுவார் மற்றபடிப் பொறுமையாகக் காத்திருந்து எடுத்துச் சொன்னால் புரிந்துக் கொள்ளகூடியவர். அதனால் மாலைக் கூடச் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாகவேயிருந்தேன்.
"சற்று நேரத்தில் அடுத்தடுத்து வருசையாக வெவ்வேறு பேருந்துகள் tailors ரோடு பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிப்புச் செய்ய. அப்பெண் ஏறவேண்டிய 15B பேருந்து சிக்னலிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு நிறுத்துத்தத்தில் நின்றிருந்த அனைத்துப் பேருந்துகளையும் கடந்து நேராகச் சென்றது".
"நான் அப்பெண்ணிடம் பேருந்து நிற்காமல் சென்று கொண்டிருகிறது என்றுசொல்ல முன்நகர்ந்தப் போது, அப்பேருந்திலிருந்து ஒரே சத்தம்".
மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பேருந்தை நிறுத்த சொல்ல பேருந்தும் சாலையை அடைத்து நின்றிருந்த அனைத்துப் பேருந்துகளுக்கும் சற்று முன்பாகப் போய் நின்றது.
"அப்பேருந்திலிருந்து இறங்கி ஓடி வந்த மாணவர்கள் அப்பெண்ணுக்கருகில் வந்து வாங்கக்கா என்று கை பிடித்து அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றி விட்டு, அவர்களும் ஏறியப் பின் மீண்டும் பாடல்கள் தாளம் எனப் பேருந்து புறப்பட்டது".
இச்சம்பவங்கள் நடந்து முடிவதற்குள்ளாக ஆசுவாசத்திற்கு வந்திருந்த நண்பரிடத்தில் கூறினேன். மாணவர்கள் தங்கள் பொழுதுப் போக்குக்காகச் செய்யும் சில காரியங்களை வைத்து அவர்களை வசை பாடாதீங்க. முடிந்தால் அவர்கள் மனோநிலைக்குச் சென்று ரசித்து விடுங்கள். பேருந்தில் இடம்வாங்கித் தந்ததிலிருந்து ஓடுகிற பேருந்தை நிறுத்தி கல்லூரிக்கு அழைத்துச் சென்றது வரை மாணவர்கள்தான். அவர்களை நீங்கள் திட்டுவது போல் தட்டையாகவெல்லாம் பாவித்து விட முடியாது. அவர்களிடம் நல்ல நற்பண்புகள் ஏராளம் இருக்கு அதனைச் சரியான வழிகளில் ஊக்குவித்தல் முந்திய தலைமுறையினரான நமது தலையாயக் கடமையல்லவா.
நாம் எப்போதும் அடுத்தத் தலைமுறையினரைக் குற்றம் சொல்லியே வளர்ந்துவிட்ட சமூகத்தில்தானே இருகிறோம். குறிப்பாக வயது குறைவானவர்களை ஒருவித அடிமைத் தன்மையுடனும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது தமக்குத்தான் எல்லாம் தெரியும், என்ற அகபாவங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்துக் கொண்டிருப்பதுதான் இங்குத் தலையாயப் பிரச்சனை. முதலில் அவற்றிலிருந்து வெளிவர மூத்தவர்கள் வெளிவர முயற்சித்தாலே அவர்கள் சிறப்பானவர்களாகவே வருவார்கள்.
அதைவிடுத்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது... வீனானவர்கள்... வாழத்தெரியாதவர்கள்...பொறுப்பற்றவர்கள்... என்றெல்லாம் வசைபாடிக் கொண்டிருப்பது எவ்வகையில் நியாயம்?...
#இனியன்
No comments:
Post a Comment