இதோ நேற்றோடு இந்த வருடத்திற்கான மே மாதம் முடிந்தது. சிறுவயது முதலே இந்த மாததின்மேல் ஓர் அலாதியான பேராவலும் பெருமகிழ்ச்சியும் இருந்து கொண்டேதானிருந்திருகிறது. சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும் அதைப் பற்றிய கவலை என்ற ஒன்று இருந்ததில்லை. அப்படியென்ன இந்த மாதத்தின் மீது அவ்வளவு ஆவல்.
சிறு வயது :
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சூரிய வெளிச்சம் படர ஆரம்பித்து விடும். அந்த நேரத்திலேயே கிரிகெட் விளையாட காஜாமலை காலனி பொதுப்பணித்துறை மைதானம் நோக்கிப் புறப்படிருப்போம் நண்பர்கள் படைசூழ. ஐந்தரை மணிக்கெல்லாம் விளையாட்டையும் ஆரம்பித்துப் பத்து மணிக்கெல்லாம் விளையாட்டை முடித்து, வேலைக்குச் சென்றுவிட்ட அப்பாக்கள் இல்லாத வீட்டில் நுழைத்தால் சொல்லிவைத்தார் போல் அனைத்து அம்மாக்களும் எங்கள் கோலம் கண்டு ஒரே மாதிரியான வாய்மொழியில் திட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தளவிற்கு அழுக்காக இருப்போம் அனைவரும்.
அவர்கள் திட்டுவதிலும் நியாமில்லாமல் இருக்காது. பெரும்பாலும் வசைமொழிகள் அனைத்தும் நாங்கள் அழுக்காக இருக்கிறோம் அல்லது வெயிலில் விளையாடுகிறோம் என்பதையெல்லாம் விட, தண்ணீர் பஞ்சக் காலத்தில் எங்கள ஏன்டா இப்படி வத்தக்கிறீங்க என்பதாகவேயிருக்கும் (மே மாதம்தான் திருச்சி காஜாமலை காலனி அரசுஅலுவலர்கள் குடியிருப்பின் தண்ணீர் பஞ்ச மாதம்).
அவ்வசை மொழியெல்லாம் சிறிதும் காதில் போட்டுக் கொள்ளாமல் மெனக்கெட்டும் சிரமப்பட்டும் அவர்கள் குடம் குடமாகத் தூக்கிக் கொண்டுவந்த வீட்டு ட்ரம்களில் சேர்த்திருந்த தண்ணீரை உபயோகப்படுத்திக் கை கால் கழுவி சாப்பிட துவங்குவோம் அநேகமாக எல்லார் வீட்டிலும் இக்கதைதான் நடக்கும்.
அதிலும் நான் கொஞ்சம் சிறப்பானவனில்லையா ட்ரமிலிருந்து தண்ணீரை ஜக்கால் எடுத்துக் கழுவாமல் அப்படியே ட்ரமில் கையையும் உடல் எந்தளவிற்கு உள்ளே செல்கிறதோ அந்தளவிற்கு உள் நுழைத்துக் கழுவி கால் கழுவுவதற்கு மட்டும் ஜக்கை உபயோகப் படுத்துவேன். அம்மா இதப் பார்க்கலைன்னாச் சரி, பார்த்துட்டாங்க அவ்வளவுதான் அடிபிரிச்சி மேஞ்சி பிறகுதான் சோறு.
காலை நேரச் சோத்தை முடித்துப் பதினோரு மணி வாக்கில் மீண்டும் வீட்டை விட்டுக் கீழிறங்கி வேப்பமரத்து நிழலில் சிறிது நேரம் ஒன்பிச் கிரிகெட் விளையாடிட்டு அடுத்த ஆட்டமாகக் கோலி, பம்பரம், மரமேறிகொம்பேரின்னு என்ன தோணுதோ அவற்றை விளையாட ஆரம்பிப்போம். ஆனால் அது முழுக்க அந்த வேப்ப மர நிழலில் தான் நடக்கும். இதுக்கிடையில் வேலைகளெல்லாம் முடித்து விட்டுத் தாயம் விளையாடிக் கொண்டிருக்கும் மூன்று கிழவிகளுடனும் வம்புக்குப் போய் அதுகளைச் சீண்டி அவர்களிடமும் திட்டு வாங்குதல் என்பதும் தினமும் நடைப்பெரும் சம்பவமாகவேயிருக்கும்.
இப்படியே ஒன்னரை மணிவரை விளையாடிவிட்டு மதிய சோத்துக்கு வீட்டு ஜென்னலின் வழியே அழைப்பு வர மீண்டும் வீட்டுப் பிரவேசம் நடக்கும். ஆனால் காலையைப் போல் வசைகள் இருக்காது. கொஞ்சம் சுத்தமாக இருப்போம்.
மதியசோத்த முடித்து மீண்டும் வேப்ப மர நிழலில் கீழ்வீட்டுக் கிழவி வைத்திருக்கும் மரப் படுக்கையை இழுத்துப் போட்டு அதிலமர்ந்தும் படுத்தும் கதைகள் பேசியும் மூனரை வரை பொழுதைக் கழித்து மீண்டும் மைதானம் நோக்கி கால்கள் நடைப் போட சூரியன் மங்கும் வரை ஆட்டம் போட்டு அதன் பிறகு வீடு வந்து இருக்கிற தண்ணியிலக் குளித்து மொட்டை மாடியேறிக் கதைகள் பேசி இரவு சோத்தையும் மொட்டைமாடியிலேயே அமர்ந்துத் திண்ணு அங்கேயே படுத்துறங்கி மீண்டும் காலை சூரியன் வருவும் வேளையில் மைதானம் புறப்படுவோம். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் அப்பாக்கள் வீட்டிலிருக்கும் காலங்களில் மாலை விளையாட்டிற்குப் பதில் சைக்கிள் பயணம் போகும்.
பதின் வயது:
கிட்டத்தட்ட நண்பர்கள் அனைவரும் வளர்ந்து விட்ட நிலையில், சில மாற்றங்கள் குடும்பங்களிலும் இருபிடங்களிலும். இருந்தாலும் இந்த மே மாதத்தில் தான் வழக்கம் போல் ஒன்று கூடுவோம். அதேபோல் அதிகாலை விளையாட்டிற்குச் செல்வோம். ஆனால் திருச்சி ரயில்வே போலிஸ் மைதானத்திற்கு மாற்றியிருந்தோம். அதேபோல் விளியாட்டுக்கள் முடித்து வரும் வீடு திரும்பும் போது காஜாமலை கல்குவாரி குளத்தில் குளித்து, குளித்தது வீட்டிற்குத் தெரியாமலிருக்க மண்ணை உடலில் பூசிக் கொண்டு செல்வோம். எல்லைகள் மாறியிருந்ததாலும் கிழவிகள் அனைத்து மரணித்திருந்ததாலும் வேப்ப மர நிழலும் கிழவிகளுடனானச் சீண்டல்களும் இல்லாமலே கடந்தது பதின் பருவம்.
அவற்றிக்கு மாறாகக் காலை விளையாட்டு மற்றும் சோத்துக்குப் பிறகு புத்தகங்கள் கையிலேறின. வீடு மாறியிருந்ததால் வேப்ப மரத்திற்குப் பதில் தூங்கமூஞ்சி மரம் வந்திருந்தது. அதனடியிலமர்ந்து ஜெயகாந்தனையும், சுஜாதா, பெரியார் என ஓட மீண்டும் மாலை மைதானம் குளக்குளியல் எனப் போகும் மே மாதம்.
தற்காலம்:
பலவாறான வாழ்வியல் பேரனுபவங்களுக்குப் பிறகு என்னை நானே கட்டமைத்துக் கொண்ட இந்தத் தேடலினால் உருவான “பல்லாங்குழி” விளையாட்டுகளுக்கான பயணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மே மாதம் என்பது பயணத்திற்கான மாதமாக இருக்கிறது. அதிலும் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வதற்கானப் பயணமாகவேயிருகிறது.
கடந்த இருவருடங்களை விட இவ்வருடப் பயணம் என்பது மிகச் சிறப்பாகவே இருந்தது. ஒவ்வொரு குழந்தைகள் நிகழ்வின் போதும் குழந்தைகளை ஏதாவதொரு உறவுமுறை சொல்லி அழைக்கச் சொல்வதுதான் எனது வழக்கம். அதையேதான் இம்முறையும் செயல்படுத்தினேன். அதேபோல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள் முடிந்தப் பிறகு எப்போது சிறு உரையாடல் நடைபெரும் குழந்தைகளுடன் அதுபோலதான் சிவகாசி கரிசல் பள்ளியில் (கரிசல் பள்ளியைப் பற்றி விரிவாக மற்றொரு பதிவில்) இருந்த இரு தினங்களிலும் விளையாட்டையும் மீறிக் குழந்தைகளுடனான உரையாடல்கள் அதிகம் நடந்தது. அதில் அக்கா, தம்பி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயதுடைய குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்துப் பேச ஆரம்பித்தனர்.
முதலில் அவள் தான் பேசினாள் “உங்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடச் சொன்னீங்க உங்களை அப்பான்னுக் கூப்பிடலாமான்னு” கேட்டாள். இதுவரை சில நிகவுகளில் இதுபோல் நடந்ததுண்டு ஆனால் மாமா, சித்தப்பா, தாத்தான்னுக் கூடக் கூப்பிட்டிருக்காங்க. ஆனால் அப்பான்னுக் கூபிடட்டான்னுக் கேட்டது இதுதான் முதல் முறை. அப்படி அப்பான்னுக் கூபிடட்டான்னுக் கேட்டு நின்றவர்களைப் பார்த்த போது இப்பிரபரபஞ்சத்தின் பெருமெளனம் என்னுள் ஏற்பட்டுக் கண்முன்னேயிருந்த அத்தனையும் அப்போதுவீசிய மெல்லிய காற்றில் கலந்து போய்க் கொண்டிருந்தது போலொரு பிரம்மை.
சில மணித்துளிகளில் அப்பிரம்மை விலகி இயல்பு நிலைக்குத் திரும்பி அவளிடம் சொனேன், “அதுதான் உன் விருப்பமென்றால் அப்படியே கூப்பிடென்று”. சரிப்பா என்று என்று சொன்னவள் அருகிலிருந்த அவளது தம்பியும் சரிப்பா என்றான். ஏனோ, ஏன் அப்பாவென்று கூபிடுரீங்கன்னு அபத்தத்தனமான கேள்விகளைக் கேட்கவேயில்லை. அவசியமுமில்லை அங்கிருந்த இரு தினங்களும் என்னை அப்பா அப்பா வென்றே அழைத்து வந்த அவர்களிருவரும் இறுதிநாள் மாலை நான் புறப்பட்ட போது இடுப்போடு கட்டியணைத்து அடுத்து எப்ப இங்க வரப்ப கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணுமுன்னு சொல்லி வழியனுப்பி வைத்தார்கள்.
கரிசலிலிருந்து இப்படியொரு நெகிழ்வான மனநிலையிலிருந்து புறப்பட்டு நெய்வேலி இருநாள் நிகழ்விற்குப் பயணம். அங்கு அனைத்துக் குழந்தைகளும் பதிமூன்று மற்றும் பதினான்கு வயதையொத்தக் குழந்தைகள்தான் இருந்தார்கள். அங்கும் வழக்கம் போல் நிகழ்வு மற்றும் விளையாட்டுகள் முடித்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் 7 பெண் குழந்தைகள் ஒன்றுகூடி என்னருகில் என்னிடம் என்னைப்பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி “உங்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிட சொன்னீங்க உங்களை அப்பான்னுக் கூபிடலாமான்னு” இருதினங்களுக்கு முன்னாள் எதிர் கொண்ட அதே கேள்வியைக் கேட்டாள். நானும் வழக்கம் போல் சரியென்றேன். “அப்படின்னா உங்களை ‘டாடி’ன்னுக் கூப்பிடலாமா?” என்றாள். அதற்கும் சரியென்று நான் தலையாட்டிய அடுத்த வினாடி வெடித்து அழ ஆரம்பித்தவள் பத்து நிமிடம் வரை தேம்பித்தேம்பி அழுதுக் கொண்டேயிருந்தாள். அருகிலிருந்த தோழிகள் அனைவரும் அவளைச் சமாதனப் படுத்தியவாறே என்னிடம், இப்பதான் மாமா அவளோட அப்பா செத்துப் போனாரு நான்கு மாதம் ஆகிறதென்று கூறினார்கள்.
நானும் எம்பங்கிற்குச் சமாதனம் செய்து அழுகையைக் கட்டுப்படுத்த சமாதானமடைந்து எனது எண்ணையும் வாங்கிக் கொண்டு பிரிந்து சென்றவள், மறுநாள் மாலை என்னை அலைஎசியில் தொடர்பு கொண்டு பேசும்போது இப்பக்கம் வரும் போது வீட்டிற்கு வாங்கப்பா என்று சொல்ல நானும் வருகிறேன் சரியென்றேன். அதன் பிறகு அழைப்புகள் எதுவும் வரவில்லை. இருந்தாலும் அவளைப்பற்றித் தற்போதும் யோசித்து வருகிறேன். பொதுவாகப் பதிமூன்று, பதினான்கு வயதுகளில்தான் பெற்றோர்களுடனான முரண்பாடுகளும் சண்டைகளும் வருகிற வயது. ஆனால் அவ்வயதில் பெண் குழத்தையோருத்தி அப்பாவாகப் பாவிகிறாள் என்றால் அவளின் வலிகள் எத்தனை வன்மமானதென்று யோசிக்கவே முடியவில்லை.
இப்படியாக இவ்வருட மே மாதமும் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாகிப்போன இனியனாக மீண்டுமொருமுறை மறக்கவியலாத மே மாதமாக அமைந்தது. ஒவ்வொரு பயணங்களும் ஒருவிதப் புத்துணர்வைக் கொடுத்துக் கொண்டேதானிருந்தால் இம்மேமாத பயணம் என்னை அப்பாவாகிச் சென்றுகிறது.
பயணங்கள் தொடரும்...
#இனியன்
ஏதோ ஒருவகையில் அந்த மூன்று குழந்தைகளின் ஏக்கத்தைத்தீர்த்திருக்கிறாய் இனியா.
ReplyDeleteபயணப்பட்டதை,பயணப்படுவதைத் தொடர்ந்து எழுது.வாழ்த்துக்கள் இனியா