20 Apr 2016

Schizophrenia

இரு தினங்களுக்கு முன் Schizophrenia என்ற மன நோயால் பாதித்த கணித மேதை வசித்தா நாராயண் சிங்(Vashishtha Narayan Singh) பற்றிய பதிவு ஒன்றை எனது நிலைத் தகவலில் பதிந்திருந்தேன். அதையொட்டிய பதிவுதான் இது.


அதே நோயால் பாதித்த 16 வயது மானவனைத்தான் தற்போது தினமும் எனது அலுவலகத்தில் நான் உட்பட அனைவரும் எதிர் கொண்டு வருகிறோம். குறிப்பாக எனது பங்குதான் அதில் அதிகம். எனக்குத் தெரிந்த மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசனையாளர்களிடம் இந்நோய் பற்றிக் கேட்டறிந்தப் போது அதில் ஒருவர் கூறியது பெரும்பாலும் இந்நோய்ச் சிறு வயதில் அதாவது குழந்தைகளுக்கு ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளால் குறிப்பாகக் கல்வி மற்றும் ஒழுக்கம் சம்மந்தமாகத் தரப்படும் அழுத்தம் காரணமாகப் பதின் பருவத்தில் துவங்கி நாற்பது வயது வரைக்கும் பாதிப்புகள் உண்டாக வாய்பிருப்பதாகவும். பெரும்பாலும் பெண்கள் அதிகம் பாதிப்பதாகவும் கூறினார். இந்நோய்த் தாக்குண்டவர்கள் அதீத மறதி, அதிகமான பகல்நேரத் தூக்கம், அதிகமான கோபம், எனத் துவங்கித் தன்னிலை மறத்தல் வரை தொடரும். சரியான மருத்துவ ஆலோசனைப் பெற்றால் கண்டிப்பாகக் குணப்படுத்திவிட முடியும் என்று சொன்னார் மருத்துவர். 

அவர் சொல்லி முடித்த பிறகு இந்நோய் பற்றிய தகவலுக்காக இணையத்தைத் தேடியப் போது பல தகவல்கள் வருகிறது. உலகம் முழுவதும் 2.1 கோடி பேர் இந்நோய்ப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 பேர் வரை இறப்பதாகவும் உலகச் சுகாதார நிறுவனமான WHO தெரிவிக்கிறது. 

எனது மருத்துவ நண்பர் தெரிவித்தது போல் குழந்தைப் பிராயத்தில் ஒழுக்கம் மற்றும் கல்விச் சார்ந்த அழுத்தங்களினால் ஏற்படுகிறது என்றால் அதனை நான் முற்றிலும் ஏற்கத் தயாராகி இருக்கிறேன். காரணம் எனது மாணவனுக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்திருகிறது. மகன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்கிற மிடில்கிளாஸ் மனநிலை அதிகம் இருக்கும் அவனது வீட்டில் அவனைச் சிறுவயது முதலே பெரிய மெட்ரிக் பள்ளியில் சேர்த்துப் படிப்புத் தொடர்பான அனைத்துச் சித்தர்வதைகளையும் பள்ளியிலும் வீட்டினிலும் கொடுத்து வந்திருகின்றனர் என்பது அவனது பெற்றோகளிடம் பேசியதிலிருந்து தெரிந்தது. அதே போல் கணித மேதை வசித்தா நாராயண் சிங்(Vashishtha Narayan Singh) பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. 

மேலும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒழுக்கம் மற்றும் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்கிற பெயரில் தொடர்ந்து குழந்தைகளை நாம் வதைத்து வருகிறோம் என்றே தோன்றுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் அதிகமான சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் குழந்தைகள்தான். என்ன உறவு, உரிமை என்கிற பெயரில் நடத்தப்படுவதால் இது போன்ற வன்முறைகள் வெளியே தெரிவதுமில்லை. கண்டு கொள்வதுமில்லை. இது போன்ற வன்முறைகளை கைவிட்டால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற மன நோய்களிலிருந்து சமூகம் விடுபடும்.


#இனியன்

No comments:

Post a Comment