நேற்று முன்தினம் மாலை அறைக்குச் சென்ற போது மணி ஆறரை இருக்கு. அறையில் தண்ணீர் இல்லையெனத் தெரிந்திருந்த எனக்குத் தண்ணீர் கொடுக்குமாறுக் கேட்டுக் கொண்டேன். சில நிமிடங்களில் அறையில் தண்ணீர் இருந்தது. நேற்று மாலை அரைமணி நேரத் தாமதத்திற்குப் பிறகுதான் அறைக்கச் சென்றேன். செல்லும் முன்னே யோசித்தேன் இரவு உணவை வாங்கி வரச் சொல்ல வேண்டும்மென. ஆனால் உணவு வாங்கி வருவதற்கான அஜிஸ் பாய்தான் இல்லை. மாலை ஐந்து மணிவரை இருந்தவர் ஐந்தரை மணிக்கு இல்லை. ஆம் மரணித்து விட்டார். அறைக்குச் செல்லும் முன்னே இந்தச் செய்திதான் காதில் விழுந்தது.
மாரடைபிற்குக் கால நேரம் எதுவும் இருக்கா என்ன? அஜிஸ் பாய் பற்றிச் சொல்லணுமுன்னா வாழ்கையிலச் சில பேரைப்பார்த்தால் நம்மையறியாமல் சில சிநேக உணர்வு ஏற்படுமல்லவா அதுபோன்றதோர் முகவமைப்பைப் பெற்றவர் அஜிஸ் பாய். பல நாட்கள் அவரைக் கிண்டகளும் கேளிகளும் செய்திருக்கிறேன். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் இவன் ரொம்ப நல்லவேன்னு வடிவேல் சொல்கிறது போல், எவ்வளவு இறங்கிக் கேளிகள் செய்தாலும் சிரித்துக் கொண்டே உங்களுக்கு வேறு வேலையில்லைன்னுச் சிரித்துக்கொண்டே செல்பவர்.
கேளிகளின் உட்சபட்சமாக வோட்காவில் ஆரஞ்சி ஜூஸ் கலந்து கொடுத்த போது குடித்து விட்டு நீங்க என்னாக் கலந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். இதுவரை குடித்ததில்லை, இனியும் குடிக்கப்போவதுமில்லை ஆனா நல்லாயிருக்குன்னு பதில் சொல்லி என்னைச் செருப்பால் அடிகாத குறையாக யோசிக்க வைத்த மனிதன். மேன்சனில் இருக்கும் அனைவருக்கும் எப்படியோ தெரியாது. ஆனால் என்றாவது ஒருநாள் முடியாத காலங்களில் மட்டுமே சாப்பாடு வாங்கியார அனுப்பும் என்னிடம்தான் நான் சொன்னதை வாங்கி வராமல் அவருக்குப் பிடித்ததை வாங்கிவந்து சாப்பிடுங்க என்று சிரித்துக் கொண்டே சொல்பவர். இப்படி அவரைப் பற்றிப் பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டே போகலாம். ஆனால் இன்று மதியம் மண்ணுக்குள்ளே இறக்கியாயிற்று.
மரணங்களுக்கு மட்டுமே மரணமென்பதேயில்லை என்பதுதான் எதார்தம். ஆனால் அதைப் புரிந்துக் கொள்வதில் தான் எத்தனையெத்தனை எதார்த்த மீறல்களை அரங்கேற்றிக் கொண்டிருகிறோம் என்பதைப் புரிந்துக் கொண்டுதான் அவர் வீட்டிற்குச் சென்று வந்தோம். அவ்வளவு அழகாக எப்போதும் இருக்கிற புன்னகை முகத்தை விடச் சற்றே அதிகமான புன்னைகையைத் தேக்கிவைத்திருந்தவர் கண்ணாடிப் பெட்டியுனுள் இருந்தார்.
எதிர்ப்பார்த்துக் காத்திருந்துப் பெற்றுவிடும் மரணங்களை விடவும், தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் தன்மரணங்களை விடவும், தனக்கே தெரியாமல் தானாக நிகழும் மரணங்களும், மரணித்தவர்களும் அழகாகத் தெரிகிறது.
மரணத்திலும் அழகைத் தேடும் மனநிலையைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் குளிர்நிறைந்த அந்தக் கண்ணாடிப் பெட்டியினுள் அஜிஸ் பாய் அழகாதான் இருந்தார். இன்னும் சிறிது நாட்களுக்கு அறைக்குச் செல்லும் முன் தினமும் வம்பிழுத்து கேளி செய்ய அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியின் பக்கம் கண்கள் அனிச்சையாகத் திரும்பும்.
#இனியன்
No comments:
Post a Comment