நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நமது தேவைகளே நிர்மானிக்கின்றன. ஆனால் அத்தேவைகளை நமது ஆசைகளே தீர்மானம் செய்கின்றன. இங்கு ஆசைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியாதாதால் தான் நமது பயணம் பலநேரங்களில் குறைந்த பட்ச உணர்வுப் புரிதல்களின்றியே செல்கிறது.
தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்பவர்களின் வாழ்வு மிக அழகான ஒன்றாகவும் வாழ்க்கைப் போராட்டங்களின்றியும் செல்கிறது. அவர்களுக்கு வெற்றித் தோல்வி என்பதெல்லாம் தேவையில்லை. அதே நேரத்தில் தனது அடிப்படை தேவைகளுடன் தனது ஆசைத் தேவைகளுக்காகவும் கட்டமைத்துக் கொள்ள விரும்பும் வாழ்வு எந்தளவிற்கு நம்மைக் கட்டாயக் காவு வாங்கிக் கொண்டிருகிறது என்பதை உணர்த்தியிருக்கும் குறும்படம்தான் நண்பன் லட்சுமி சரவணகுமாரின் "மயான தங்கம்".
அடிப்படைத் தேவைகளுக்காகக் கூடப் பணம் தேவை என்றாகிவிட்ட பணசூழ் உலகில், அதனை எப்படியெல்லாம் சம்பாதித்து எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் உலகம் இருக்கிறது என்பதைப் படத்தின் ஆரம்பக் காட்சி முதலே தெளிவுபடுத்துகிறார் இயக்குனர். அவரது சிந்தனைக்கேற்றவாரே தங்களது நடிப்பால் அவ்வுணர்வுகளை வெளிபடுத்தியுள்ளனர் சாம் நாத் மற்றும் செம்மலர் அண்ணம்.
"கனவுகளில் நாம் வாழ ஆசைப்படும் வாழ்க்கைக்கும் எதார்த்தத்திற்கும் இடையில் இருப்பது ஒன்னே ஒன்னுதான் பணம்", "படித்தவனுக்குப் படிக்காதவன் அத்தனை பேரும் திருடர்கள்தான்" போன்ற வசனங்களின் மூலம் பணத் தேவையினால் படும் துன்பங்களைக் கூறுவதாகக் கூறுகிற அதேவேளையில் பணத் தேவை என்பது தேவைக்கு மட்டுமிருந்தால் போதுமானது. ஆனால் அத்தேவைகளைத் தீர்மானிப்பது நாமாக மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது பணம் என்பது நமது வாழ்வின் இரண்டாம் பட்சமாகிவிடும் என்பதை ஒரு காட்சியிலாவது விளக்கியிருக்கலாம்.
ஒரு கலைஞன் எந்தளவிற்குத் தன்னைச் சுற்றிச் சமூகத்தில் நடக்கும் விசையங்களை உள்வாங்கி அதிலிருந்து தனது கற்பனைகளை வெளிக்கொணரலாம் என்பதற்காக எடுத்துக் காட்டாக இறுதிக் காட்சியில் சமகால நிகழ்வானச் செம்மரக் கட்டைக் கடத்தலென்று அரங்கேறியப் படுகொலைச் சம்பவத்தில் முடித்திருப்பது இறந்துப் போன இருபது நபர்களின் குடும்ப வாழ்வு எவ்வாறு அமைந்திருக்கும், அவர்களது கட்டாயக் காவின் பின்புலம் என்ன என்பதையெல்லாம் யோசிக்க வைக்கிறது. சிறு சிறு குறைகள் இருந்தாலும் தன்னுடைய கனவுத்தேவை எவை என்பதில் தெளிவாக நின்றுத் தன்னையே இயக்கிக் கொண்டிருக்கும் லட்சுமி சரவணகுமாரின் தேடுதலே "மயான தங்கம்". ஆனால் வெகுவிரையில் சுரங்கத் தங்கமாக மாற வாழ்த்துகள்.
வணக்கம் தோழர், நான் சமீபத்தில்தான் இக்குறும்படத்தை பார்த்தேன். கடைசி ஏற்பட்ட அதிர்ச்சி சக மனிதர்களின் வாழ்வில் அவர்கள் என்னெவெல்லாம் அனுபவிக்கின்றார்கள் என சொல்லியது.
ReplyDeleteஅன்புடன் தயாஜி