ஒரு படைப்பை
நமக்கு நெருக்கமாக உணரவைக்கும் தருணம் எவை என்று யோசித்தால், நம் வாழ்வோடு ஒத்துபோகும் தருணத்திலோ அல்லது நடந்து முடிந்த
வாழ்க்கைச் சம்பவங்களை நமக்கு மீண்டும் நினைவுக் கூறும் தருணத்திலோ அல்லது நமது
கற்பனையைத் தூண்டும் போதோ அல்லது இதுவரை தெரிந்திடாத விசையங்களைக்
கற்றுக்கொடுக்கும் போதோதான் நமக்கும் படைப்பிற்குமான நிருக்கம் உண்டாகும்.
அவ்வாறு என்னுள்
நெருக்கம் உண்டாகிய சமீபத்திய படைப்புகளில் இடம்பெற்றிருப்பது இயக்குனர் தாமிரா
இயக்கிய "மெஹர்" தொலைக்காட்சித் திரைப்படம். எந்த வகையில்
நெருக்கமாகியது என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக் கொண்டால் என்னுளிருக்கும்
நினைவுகள் தான் பதிலாய்க் கிடைத்தது.
திருச்சியில்
காஜாமலைனு ஒரு குறுமலையும் அதில் இஸ்லாமிய மதப் போதகர் ஒருவரது மசூதியும், மலைக்குக் கீழே ஜம்மாதும் பள்ளிவாசலும் இருக்கும் அப்பகுதியைச்
சுற்றியும் சிறுசிறுக் குடிசைகளில் பல இஸ்லாமியக் குடும்பங்கள் இருக்கும்.
அவற்றில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை
பீடி சுற்றுவதுதான் தொழில். தினமும் அவ்வழியாக டியூசனுக்குப் போகும் போது
தண்ணீர் வாங்கிக் குடித்ததன் மூலமாக ஒரேயொரு குடும்பம் எனக்குச் சற்று
நெருக்கமானார்கள்.
அரசு அலுவலகக்
குடியிருப்பில் பிறந்து வளர்ந்து வந்த எனக்கு அவர்களது வீடிற்குள் சென்று வீட்டை
முழுவதுமாகப் பார்க்கும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. பத்துக்கு இருபது என்ற அளவு
இடத்தில் பக்கவாட்டுச் சுவர் உட்பட அனைத்துமே தென்னங்கீற்றுக் கூரைதான் அவர்களது
வீடு அதில் மூலையில் சமையல் செய்ய இடம் பல நாள் வெளியேதான் நடக்கும் சமையல்.
இன்னொரு மூலையில் பீடி மற்றும் சுருட்டுக்கான மூலப்பொருட்கள் வைக்குமிடம், இன்னொரு மூலையில் சுற்றி முடிக்கப்பட்ட பீடி சுருட்டுகள்.
மீதமிருக்கும் இடத்தில்தான் ஏழு பேர்க் கொண்ட குடும்பமும் உறங்க வேண்டும் அதில்
திருமண வயதில் மூன்று அக்காக்கள்(அவர்களை அப்படிதான் அழைப்பேன்).
ஒருநாள் மாலைப்பொழுதினில்
டியூசன் செல்லும் போது அவர்கள் வீட்டில் எப்போதும் இருப்பதை விட அதிகமான ஆட்கள்
வெளியே நின்று கொண்டிருக்க எதையும் கவனிக்காமல் நானும் கடந்து வந்துவிட்டேன்.
சிறிது நாட்கள் வரைக்கும் பரபரப்புடன் இருந்த அந்தக் குடும்பத்தில் சிறிது
நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு எண்ணிக்கைக் குறைந்திருந்தது
காரணம் கேட்டதற்கு நிக்காஹ் முடித்துச் சென்று விட்டார்கள் என்ற தகவலைச் சொல்லும்
போதே ஜம்மாத்தில் பேசி ஜம்மாத் பெரிய மனிதர்கள் உதவியால் ஆயிரம் ரூபாய் மெஹர்
கொடுத்து ஒரே குடும்பத்தில் மிக எளிமையான முறையில் இரண்டு பேருக்கும் திருமணம்
முடிந்ததாக மகிழ்ச்சியாகச் சொன்னார் அந்த வீட்டுப் பாட்டிம்மா.
நானும் வேறு
பள்ளி வேறு இடம் என்று மாறிப் போனதில் அந்த வழியை ஒரு வருடம் வரை மறந்தே
போயிருந்தேன். எதேச்சையாக ஒருநாள் அவ்வழியில் செல்லும் போது மலையைச் சுற்றியிருந்த
பாதி அயிந்து வீடுகள் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து விட்டதாகவும், அதில் அவர்கள் வீடும் தீக்கிரையாகி விட்டதாகவும் அருகில் இருந்த ஏன்
வயதையோத்தன் நண்பன் ஒருவன் சொல்ல வேதனையுடன் அவ்விடம் விட்டு வந்தேன்.
அந்த வயதில் “மெஹர்” என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத
நிலையில் எனனுள் ஓர் எண்ணம் மட்டும் ஓடிக்
கொண்டிருந்தது இவர்கள் இவ்வளவு சிரமத்தில் எவ்வாறு திருமணம் முடித்திருப்பார்கள்
என்று. அதன் பிறகான வாழ்க்கைப் பயணங்களில் இஸ்லாமிய நண்பர்கள் அதிகரிக்க
அதிகரிக்கச் சில இஸ்லாமிய நடைமுறைகளும் புரிந்தப் போது கூட அக்குடும்பம் பற்றிய
நினைவுகள் வரவில்லை. ஆனால் இயக்குனர் தாமிராவின் “மெஹர்” திரைப்படம் பார்த்தப் பிறகு
அக்குடும்பம் பற்றிய நினைவுகளே மனதை நிரப்பிக் கொண்டிருகிறது.
மற்றபடித்
திரைப்படத்திலிருந்து பேச வேண்டுமாயின் எழுத்தாளர் பிரம்பஞ்சனின் சிறுகதையைதான்
திரைகதை, வசனங்கள் எழுதிப் படமாகியிருகிறார் இயக்குனர். இதிலே “பணம் சிலருக்கு அவசியம் சிலருக்கு அலட்சியம்”, “இல்லாதவன் புலம்பல்கள் எல்லாமே கம்யூனிசம்தான்” போன்ற வசனங்கள் இயக்குனர் கடந்த காலங்களில் நேர்ந்த கசப்பான
அனுபவங்களின் பிரதிபளிப்பதாகவே தெரிகிறது. இறுதிகாட்சியில் வரும் “இஸ்லாம் சொல்லியிருக்கும் நெறிகளைப் பின்பற்றி வாழ அடுத்தத் தலைமுறை
தயாராக இருக்கிறோம்” வசனத்தைத் தற்காலத்தில் நம்மைச் சுற்றி
நடக்கும் சாதிய, மத விரோதப் போக்குடன் சற்றே ஒப்பிட
வைக்கிறது மனது. அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான இளைஞர்களின் மனதுகளில்
சாதிய, மத வன்முறை எண்ணங்கள் ஏற்கனே ஆணித்தரமாய்ப்
பதிந்திருக்கும் நிலையில் இம்மாதிரியான வசனங்கள் அவர்களுக்கு மேலும் வழுச்
சேர்ப்பதாக அமைந்து விடுமோ என்ற ஐயம் எழுகிறது.
திரைப்படத்தில்
நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்கள் பங்கிற்குக் கனகச்சிதமான
நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் நினைவில் நீங்காமல் நிலைப்பது கவிஞர் சல்மா
மற்றும் அவர்களது மகனாக வருபவரது நடிப்பு மட்டுமே மொத்தத் திரைப்படத்தையும்
நகர்த்த உதவியிருக்கிறது.
ஆனால் இது போன்ற
மத நன்னடத்தைப் பின்னணியில் உருவாகும் கதைகளுக்கு முக்கியத்தும் அளிப்பது அவசியமான
ஒன்றாகக் கருத்தருத்தப்பட்டாலும் என்னைப் போன்று உலகில் மதங்களே தேவையில்லை என்று
எண்ணுவோருக்கு இப்படம் அவசியமற்றதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
சிறு வயதில்
பேரறிஞர் அண்ணாவின் “செவ்வாழை” சிறுகதைதான் நான் பார்த்த முதல் சிறுகதைத் தொலைக்காட்சிச் சித்திரம்.
அதன்பிறகு பல எழுத்தாளர்களின் கதைககளைத் திரைபடங்களாகப் பார்த்திருக்கிறேன்.
அவற்றையெல்லாம் பொதிகை தொலைகாட்சியில்தான் படமாக எடுத்து வெளியிட்டார்கள். ஆனால்
தனியார் தொலைகாட்சிகள் வந்த பிறகு அம்மாதிரியான முயற்சிகள் நடைபெறவேயில்லை.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இம்முயற்சிப் பல கிளாசிக் சிறுகதைகளை வெளிக்
கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் விஜய் தொலைகாட்சியைப் பாராட்டியாக
வேண்டும். அவர்களோடு கைகோர்த்திருக்கும் இயக்குனர் தாமிரா போன்றவர்களையும்
பாராட்டியாக வேண்டும். மொத்தத்தில் "மெஹர்" பாராட்டிக் கொண்டாடப்பட
வேண்டிய ஒன்றுதான்.
No comments:
Post a Comment