7 May 2015

Philips And The Monkey Pen

ஒரு சில திரைப்படங்களே நம்மையுமறியாமல் நம்முள் ஒன்றாகக் கலந்துவிடுகிறது.அவ்வாறு என்னுள் கலந்தது ஒரு திரைப்படம். இப்படம் எனக்கு அறிமுகமாகிய நான்கு தினங்களில்  ஒன்பது முறைப் பார்த்திருக்கிறேன் என்றால் அது மிகையாகாது. சமீபகாலத்தில் இதுபோன்று எந்தத் திரைப்படம் அதுவும் குழந்தைகள் திரைப்படம் இந்தளவிற்கு ஈர்த்ததில்லை.

பொதுவாகக் குழந்தைகள் திரைப்படம் என்றால் புனைவுகளை மிகைப்படுத்தி எடுக்கப்பட்டு வெற்றியடைகின்ற திரைபடங்கள் அல்லது எதார்த்தைக் கூறுகிறோம் என்ற பெயரில்  எடுக்கப்பட்டுப் படுதோல்வியை அடைகின்ற திரைப்படங்கள் என இரண்டு வையாகவே குழந்தைகள் திரைப்படங்களாக வெளி வருகின்றன. இதில் அனிமேசன் திரைப்படங்களைத் தவிர்த்து விடுவது நல்லது ஏனென்றால் அவை ஒரு மெகா மாயப்புனைவு வைகைத் திரைப்படங்கள்.

ஆனால் மேற்சொன்ன இரண்டு வகையையும் அதாவது புனைவு  மற்றும் எதார்த்தம் போன்ற  இரண்டையும் ஒருசேர சொல்லி குழந்தைகளையும் மற்றுமின்றி அனைவரையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்ததிருக்கும் திரைப்படம் தான் "Philips and the Monkey pen".

திரைப்படம் இந்தளவிற்கு நெருங்கி வருவதற்குக் காரணமாக இருப்பது சமகாலத்தில் கல்வி என்றப்பெயரில் குழந்தைகள்  எந்தளவிற்கு அவர்களின்  இயல்பை இழந்து கொண்டிருகிறார்கள் என்பதை நாம்  கண்கூடாக  தினம் தினம் பார்த்துக்  கொண்டிருக்கின்ற விசையங்கள்தான். அவ்வாறு தன்னியல்பை மாற்றாத குழந்தைகள்  எந்தளவிற்குப் பாதிப்புள்ளாகிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பாதிப்பிலிருந்து  குழந்தைகள் வெளிக் கொண்டுவருவது பெற்றவர்கள், ஆசிரியர்கள், கல்விச் சூழல் போன்றவற்றின் கடமைகளாகக் கொள்ளவேண்டும் என்பதையும் குழந்தைகள் எவ்வாறு இந்தச் சமூகத்து ஏற்றாற்போல் தங்களைக்  கட்டமைத்துக் கொண்டால் சமூகக் காவலர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொல்லி நமது எண்ணத்தைப் பிரதிபலித்ததால் கூட இருக்கலாம்.

ஆசிரியர்களுக்கும் வகுப்புக்கும் அடங்காத குழந்தை ஆசிரியரின் அடி உதைக்குப் பயந்து மனம் வேம்பும் போதெல்லாம் கடவுள் என்கிற கற்பனைக்  கதாபாத்திரம் அக்குழந்தையிடம் பேசுகிறது. அக்கடவுளும் குழந்தையிடம் பேசும் போது குழந்தைப் போட்டிருக்கும் உடையைப் போலவே உடையுடுத்திருப்பது போன்ற காட்சியமைப்புக் குழந்தைகளைக் கொண்டாடுவதற்கான உட்சபட்ச யுக்தி என்றே சொல்லலாம். ஆனால் கடவுளால் கூடக் குழந்தையின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் பூர்த்திச் செய்து விட முடியாது என்று  சொல்லியிருப்பதும். அதற்கு மாறாகக் குழந்தைகளிடம் நாம் எந்தளவிற்கு அவர்களின் உள்ளே சென்று பேசுகிறோமோ அந்தளவிற்கு அவர்களிடம் புரிதல்கள் பூர்த்தியாக்கப்படும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருகிறார்கள் இயக்குனர்கள்.

திரைப்படத்தின் முக்கியக் காட்சியமைப்புகள் எனப் பல காட்சிகளைக் கூறலாம். உதாரணமாகக் குழந்தை பிலிப்ஸ் தன் அப்பாவிடம் கடவுள் கிர்டியனா இல்லை முசிலீமா என்று கேட்கும் கேள்வியும் அதற்குக் குழந்தைகளுக்கு ஏற்றார் போல் தரப்படும் விளக்கமும் வெகுவாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதே போல் பள்ளித் தலைமையாசிரியர்  கணித ஆசிரியரிடம் பேசும் வசனமான ஒரு வகுப்பில் இருக்கும் அறுபது மாணவர்களில் இருபது சதவீத மாணவர்கள் மட்டுமே படிப்பிலும் மற்ற அனைத்திலும் மிகுந்த ஆர்வம் இருப்பவர்களாக இருப்பார்கள். அடுத்த இருபது சதவீத மாணவர்கள் சராசரி என்ற வகையில் வருவார்கள். ஆனால் அறுபது சதவீத மாணவர்கள் சராசரிக்கும் குறைவாக இருப்பார்கள். ஆனால்  அவர்களைத் திறமையற்றவகள் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்குள் இருப்பதை வெளிக் கொண்டு வருவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகக் கொள்ளவேண்டும்.என்ற வசனமும். பெற்றோகளிடம் பள்ளி வாகனங்கள் பற்றிப் பேசும் வசனங்களும், தற்போதுள்ள எதிர்பார்ப்பு உலகத்தில் எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கும் மக்களுக்கு ஏற்றாற்போல் அமைத்திருப்பார்கள்.

கணிதம் பற்றிய குழந்தைகளின் அறிவைத் தூண்டுவதற்காக “Life is Maths” என்று சொல்லி வாழ்க்கைக்கும் கணிதத்திற்கும் உண்டான தொடர்பையும் அதன் மூலம் குழந்தைகள் மத்தியில் கணித ஆர்வத்தைத் தூண்டும் காட்சியமைப்புகளும் சிந்தனைத் தூண்டல்.


சிரிக்க வேண்டுமா? குழந்தைகளை ரசியுங்கள் என்று சொல்வது போலப் பல காட்சிகள் திரைப்படத்தில். குறிப்பாகச் சக வகுப்புத் தோழிக்குக் காதல் கடிதம் எழுதுவதும் அதில் yes or no விற்குக் கட்டம் கட்டி  டிக் அடிக்கச் சொல்வதும், தான் அடித்த  மாணவன்  தலைமையாசிரியரிடம் புகார் அளிக்கும் அதிலிருந்து தப்பிப்பதற்காகச் செய்யும் சேட்டையும் அதனைத் தொடர்ந்து பழிப்பதும், தாத்தாவிடம் சண்டைப் போடுவது போன்ற காட்சிகள் சிரிப்பின் உச்சம். குறிப்பாகக் குரங்குப் பேனாவின் கடந்த காலக் கதை அட்ராசிட்டிக் காமெடி வகை. என்னைப் பொருத்த வரை படத்தில் வரும்  குரங்குப் பேனாவாக ஒவ்வொரு பெற்றோர்களும் இருந்திட வேண்டும் என்பதே எனது  ஆசை.

இவையனைத்தையும் விடக் குழந்தைகளிடம் அதிகம் பேசுங்கள் அன்பாகப் பேசுங்கள் பாராட்டுங்கள், தங்களது கடந்த கால வாழ்வினை நிகழ்காலத்தில் பேசுங்கள் போன்றவற்றை ஆங்காங்கே காட்டிக் கொண்டே செல்கிறது திரைப்படம். மொத்தத்தில் “Philips and the monkey pen” திரைப்படம் குழந்தைகள் கொண்டாடப் பட வேண்டியவர்கள். அவர்களைக் கொண்டாடினால் நமக்குக் கொண்டாட்டம் நிச்சையம் என்பதை எடுத்துரைக்கும் திரைப்படத்தில் குழந்தை நாயகனாக நடித்திருக்கும் நட்சத்திரம் சனூப் சந்தோஷ் நடிப்பைத் தாண்டி ரசிக்க வைக்கிறார். அதேபோல் பெற்றோராக வரும் ஜெய்சூர்யா, ரம்யா நம்பீசன் போன்றவர்களும் தலைமையாசிரியரான முகேஷ், கணித ஆசிரியரான விஜய் பாபு என அனைவரும் குழந்தையுடன் இணைந்துத் தாங்களும் குழந்தைகளாகவே மாறித் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர்.


இவர்கள் அனைவரையும் தாண்டித் திரைப்படத்தின் கதையாசிரியரான சனில் முகமது மற்றும் இயக்குனரான ரோஜின் தாமஸ் இருவரையும் பாராட்டியேயாக வேண்டும். தமிழில் வெளிவந்த பசங்கதிரைப்படம் ஈர்த்திருந்தாலும் இந்தப் படத்தில் கிடைத்த மகிழ்ச்சியுணர்வு எனக்கு அதில் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழிலும் இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும்.

No comments:

Post a Comment