உலகினில் நாடோடியாகத் திரிந்த மனிதன்
நதிக்கரை நாகரீகங்கள் வளர்ச்சியடைந்து நிலையான இருப்பிடமும் விவசாயமும் அதனைச்
சார்ந்த தொழில்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சற்றே வலிமையான
ஒற்றை மனிதனிடமிருந்து அந்த முதல் குரல் ஒலித்தது. “இவை என்னுடையது, தனக்கு
மட்டுமே சொந்தம்” என்ற குரல்தான் அது. அந்நாள் அவனுடன்
பகிர்ந்துண்டக் கூட்டத்தினருக்கு அவனது குரல் சில சிந்தனை ஏற்பட அவனுகென்று
அவனைப்போலவே ஒரு கூட்டமும் உருவாகிறது. சற்றே வலிமை மிகுந்த அக்கூட்டத்தால்
நிலப்பிரிவினை, தொழிற்பிரிவினை எனப் பொருளாதார விலங்காக மாறிய
மனிதர்களால் வர்கங்கள் பிரிக்கப்பட்டு
வலிமையுடையவர்கள் என்று நம்பப்பட்ட கூட்டத்தால் மற்றவர்கள் அடிமைப் படுத்தப்பட்டு ஆளப்படுகிறார்கள்.
அவ்வாறு ஆளப்பட்டவர்களிலிருந்து சில
சிந்தனை மனிதர்களும், அடுத்தக்கட்ட வலிமையானவர்களும்
அடிமைத்தனத்திலிருந்து விடுப்பட்டுத் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே
ஏற்படுத்திக்கொள்ள மீண்டும் நாடோடி வாழ்வினை ஏற்படுத்திக் கொண்டு அடுத்த இடத்தைத்
தேடி நாடோடிகளாகச் சென்று அவர்களுக்கெனத் தனி இருப்பிடம் மற்றும் தேவைகள் என
அனைத்தையும் செயல்படுத்த துவங்கியவுடன் மீண்டும் அதே குரல் வெளிவந்த பிறகு அங்கு
நிலவியப் பொதுமையானது தனிமையானதாக மாறியது.
அதன் பின் மீண்டும் ஒரு தனிப்பட்ட
நகர்வு நாடோடி வாழ்க்கையைத் துவங்கியவர்களிடமும் மீண்டும் தனியுடமைச் சிந்தனைத்
தொற்றிக் கொண்டு உலகம் முழுவதும் தனியுடமை என்ற கோட்பாட்டுக்குள் சிக்கியிருந்த
நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அதிகரிக்க
ஆரம்பித்துத் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகத் தனித் தனியான நகர்வும் அதற்குப்
பிறகான நிலையான இருப்பிட வாழ்வு என்ற நிலை வந்த பிறகு அவனிடமிருந்து “நாடோடி” என்ற
சொல் நீக்கப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் அதனைச் சார்ந்த தேவைகள் அதிகரித்துச்
சுயநல வாழ்வியல் முறை வந்த பிறகு, தங்களது பொருளாதாரத் தேவை மற்றும் பிற
தேவைகளுக்கான போர்கள், பிழைப்புகள் என மீண்டும் ஒரு நகர்வுகளுக்கு
ஆளான மனிதர்களை “வந்தேறி” என்று
அரசியலுக்கான சொல்லால் அழைத்தனர் நாடோடியாக வந்தவர்கள்.
இதில் முக்கியமாக நாம் கவனிக்கப்பட
வேண்டியது இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் கூடத் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஊர் சுற்றும் மானிடர்களை நாடோடி என்றுதான் அழைத்தும்
வருகிறோம் வந்தேறிகள் என்றில்லை. ஆனால் நாடோடிகளை விட வந்தேறிகளாக வாழும்
மானிடர்களின் வாழ்வுதான் மிகத் துயரமனது. அத்துயர்மிகு வாழ்வினில் ஏற்படும் சில
மகிழ்வானத் தருணங்கள் மற்றும் போராட்டங்கள் அதனால் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள்
என அனைத்தையும் நம்மோடு பேசியிருக்கும் நாவல்தான் பாரதிநாதனின் “வந்தேறிகள்”.
தற்காலத்தில் பிழைபிற்காக உறவுகள், உணர்வுகள்
என அனைத்தையும் விடுத்து வெளிநாடு மற்றும் வெளியூர் என்று சென்று வாழும்
மானிடர்களில் அவரவர் வர்க்கங்களுக்கு ஏற்றார் போல் ஏதோவொரு அமைப்பினை ஏற்படுத்தித்
தங்களுக்கென ஒரு பொழுதுப் போக்காக மட்டும் சில நிகழ்வுகளை நடத்திக்
கொண்டிருகிறார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் கூட நாடு, மொழி, இனம்
போன்ற வேறுபாடுகளை விட வர்க்க வேறுபாடுகளை அதிகமாக ஏற்படுத்திக் கொண்டுதான்
வாழ்ந்து வருகின்றனர். ஒரே நாடு, ஒரே ஊராக இருந்தாலும் வர்க்க
வேறுபாட்டால் பிரிந்துச் செயல்பட்டும் நிலையினை எளிதில் காண முடியும் நம்மைச்
சுற்றி நிகழும் நிகழ்வுகளின் வாயிலாக. வந்தேறிகள் மற்றும் சென்றேறிகளாக வாழும்
மக்களில் அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்கள் வர்க்கங்களில்
கடைநிலையிலிருக்கும் தொழிலாளர்கள் மட்டுமே. அந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்படும்
பிரச்சனைகளையும் அவர்களின் வாழ்வினை நெறிப்படுத்திச் சீர் செய்வதற்காகச் சில
இயக்கங்கள் துணைக் கொண்டு அவற்றைப் போராடி முறியடிக்கும் மக்களின் வாழ்க்கை
முறையைத் தன்னுடைய “தறியுடன்” நாவலின்
நீட்சியாக இந்த நாவலைப் படைத்துள்ளார் பாரதிநாதன்.
முந்தைய நாவலின் நீட்சி என்று
சொல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருப்பது நாவலில் வரும் இயக்கம் மற்றும்
அந்தச் செயல்பாடுகள், கதாநாயகன், நண்பர்கள், போராட்டங்கள்
மற்றும் போராட்ட முறைகள், காவல்துறையின் அராஜகங்கள், மாணவர்கள்
எழுச்சி மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கெனத் தனியிடம், குறிப்பாகத்
தங்களின் வாழ்வியல் உரிமைக்களுக்கான போராட்டங்கள் என அனைத்தும் இந்த நாவலிலும்
உண்டு. இருபினும் இந்த நாவலைத் தறியுடனிலிருந்து பிரித்துக் காண்பிக்கும் சில
பாகங்களில் முக்கியமானதாகத் திகழ்வது போராட்டங்களுக்கு இடையில் விளையும் காதல்
மற்றும் அதன் விவரிப்புகள். பசி, குறைந்த பட்ச வாழ்வாதாரத்திற்காகப்
பாலியல் தொழில் புரியும் பெண்களின் நிலையினை விளக்கும் பகுதிகள்தான்.
பெரும்பாலான ஆண்களின் உணர்ச்சி
இச்சைக்காகவே உருவாக்கப்பட்டு, பெண்களை அதிகமாகக் கொண்ட தொழிலான பாலியல்
தொழிலில் இருக்கும் கடைநிலை வர்க்கப் பெண்களையும், ஊரிலிருந்து
விலக்கப்பட்ட அவர்கள் வாழும் “சாலை” எனப்படும்
வாழ்விடம் மற்றும் வாழ்க்கை முறைகளையும் விவரிக்கின்ற இடங்கள் சற்றுக் கனமானதாகவே
இருக்கிறது. அதிலும் தொழில் நியதியாக நாளின் முதல் வாடிக்கையாளரிடம் தனது
புடவையின் தலைப் பகுதியை கையிலேந்தி பணம் பெற்று அன்றைய தினக் கணக்கைத்
துவங்குமிடமும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் உரையாடல்களும், கதாநாயகியான
பாலியல் தொழிலாளியான சரிதாவிற்கும் கதாநாயகர்களில் ஒருவரான சந்துருவிற்குமிடையில்
ஏற்படும் காதலும் கண்டிப்பாகப் பேசப்படவேண்டிய ஒன்றுதான். அதேபோல் சாலையில் உள்ள மற்ற பெண்களும்
முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்களே.
தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கான
பொருளாதாரத் தேவைக்காகப் பாலியல் தொழிலில் ஈடுபடும் சில நவநாகரீகப் பள்ளி மற்றும்
கல்லூரி யுவதிகள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்திலும் பசிக்காகவும், உயிராவது
வாழலாமே என்கிற உயிர் ஆசைக்காகவும் தங்களது ‘குடி’கரமான
வாழ்க்கைக்கு மனைவி மற்றும் சகோதரிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடித்தியிருக்கும்
ஆண்களால் அத்தொழிலுக்கு வந்திருக்கும் பெண்களின் வாழ்விடமாக இருக்கும் சாலைக்
குடிசைகளின் கண்ணீர்க் கதைகளும் “தறியுடன்” நாவலில்
இருந்து “வந்தேறிகள்” நாவலைப்
பிரிகின்ற ஒன்று. ஆனால் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் இந்நாவலைப் பிழைப்பிற்காக
வெளியே செல்லும் அனைத்து மக்களின் குரலாகவே எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் மற்றொரு கதாநாயகனான மாதேசு
மற்றும் பொன்னியின் காதலும், தங்கள் இல்லத் திருமணம் போல் ஊரார்
இணைந்து நடத்தும் அவர்களது சீர்திருத்த திருமண நிகழ்வும், அந்தத்
திருமண மேடையில் நிகழும் சிறு மாற்றங்கள் மற்றும் அதனையொட்டிய மகிழ்வானத்
தருணங்கள் போன்றவை என்னதான் பொருளாதார விலங்காகவே நாம் இருந்தாலும் இதுபோன்ற மகிழ்வுத்
தருணங்கள் தான் நம்மை அவ்வபோது மனிதர்களாகச் செயல்பட வைக்கிறது என்ற எண்ணத்தை
ஏற்படுத்துகிறது.
மற்றப்படிச் சொந்த ஊர் விசைத்தறித்
தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களது பிரச்சனைப் போன்றவற்றைப் பேசியிருக்கும் “தறியுடன்” நாவலும்
ஊர் விட்டு ஊர் வந்து வெளியூர் விசைத்தறித் தொழிலாளர்களின் பிரச்னையைப்
பேசியிருக்கும் “வந்தேறிகள்” நாவலும் பாகம்
ஒன்று மற்றும் இரண்டாகதான் தெரிகிறது. தறியுடனில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு
ஆதரவாகச் செயல்படும் இயக்கங்களில் ஒன்றான நக்சல்பாரி இயக்கத்தை வெளிப்படையாகச் சில
இடங்களில் தெரிவித்திருப்பார் ஆசிரியர். வந்தேறிகளில் இயக்கம் பற்றிய உரையாடல்கள்
வருமிடங்களிலெல்லாம் தலைமறைவு இயக்கம் என்றே வருகிறது. அதற்குச் சமீபத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசின் அடக்குமுறை மற்றும் எழுத்தாளர்கள் மீது
நடைபெறும் நேரடித் தாக்குதல்கள் காரணமாக இருக்குமோ? என்ற கேள்வி
எழுகிறது. பாரதிநாதனும் போராட்டகாரர் என்பதனால் அவருக்கு அந்த ஐயம் இருக்க
வாய்பில்லை என்றே நம்பலாம்.
மேலும் இந்நாவலை வாசிக்கும் போது
தங்களது வறுமைக்காக நம்மூரில் வந்து வேலைகள், தொழில்கள்
பார்க்கும் வடமாநில மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் அகதிகளாக
அடைக்கலம் தேடி வந்த மக்களிடம், குறிப்பாக வர்கத்தின் கடைநிலையில்
இருப்பவர்களையும் நாம் எவ்வாறு மதிக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேள்விகளும்
எழுகிறது. இந்நாவலில் வருவது போல் அவர்கள் சங்கம், போராட்டாம் என்று
ஆரம்பித்தால் எத்தனை பேர் ஆதரவுக் குரல் கொடுப்போம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
மொத்தத்தில் பொருளாதாரத் தேடலுக்கான பொருளாதார விலங்காக இடம்பெயரும் மனிதர்களின்
போராட்ட வாழ்வு இந்த “வந்தேறிகள்”.
# இனியன்.
No comments:
Post a Comment