24 Mar 2015

எனது நாடகப் பயணங்களில் "கூக்குரல்"

சிறு வயதில் பள்ளி ஆண்டு விழாவில் பள்ளியின் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல் பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பேசுவதற்காக எனது ஆசிரியரின் அறைக்குச் சென்ற போது அவரும் அவரது நண்பர் ஒருவரும் மேடை நாடங்கள் பற்றிப் பேசுவதைக் கேட்டிருந்த போது ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டே மேடை நாடங்கங்கள் அவ்வளவு முக்கியமானதா என்று சிந்தித்த தருணங்கள் இருகிறது. ஆனால் அதைப் பற்றி அப்போது யாரிடமும் பேசியதில்லை அதற்கான அனுபவங்களோ தேவைகளோ இருந்ததில்லை. இரு வருடங்களுக்கு முன் சென்னை வந்து கடந்த ஒருவருடமாக வெளிப் பயணங்கள், தொடர்புகள் என அதிகரித்த பிறகு முதல் முறையாக அண்ணன் கருணா பிரசாத் இயற்றிய சூடாமணியின் "நான்காம் ஆசிரமம்" தான் நான் பார்த்த முதல் மேடை நாடகம். அதுவரை மேடை நாடகம் என்றால் கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, மாது, சீனு போன்றவர்கள் மட்டும்தான் நவீன மேடை நாடகங்களில் நடிப்பார்கள் என்ற பிம்பம் எனக்கு இருந்தது அதுவும் அவ்வபோது ஆங்காங்கே பார்த்த விளம்பரப் பலகைகளால் மட்டுமே. அதனைத் தவிடு பொடியாக்கிப் பார்ப்பவர்கள் அனைவரையும் சினிமாவை விட மேடை நாடகத்தில் ஈர்த்து விட முடியும் என்று என்னுள் விதித்தார் கருணாபிரசாத் தனது இயக்கத்தாலும் நடிப்பாலும்.

அதன் பிறகு சில நாடகங்கள் பார்பதற்கு வேண்டிப் பயணங்களும் சென்றேன் சில பயணங்கள் செல்ல முடியாத தடங்களும் இருந்தது. அதில் பெரும்பாலும் மனதிற்கு ஒட்டாத நாடகமாகவே இருந்த நிலையில் மீண்டும் கருணா பிராசாத் மற்றும் பார்த்திப ராஜா இணைந்து அரங்கேற்றிய புதுமைப் பித்தனின் "செல்லமா" நாடகம் மேடை நாடங்கங்கள் மீதான எனது நெருக்கத்தை மேலும் அதிகரித்தது. செல்லமாவிற்குப் பிறகு நான் ஆவலுடன் கண்டிப்பாகப் பார்க்க நினைத்த நாடகம் முருக பூபதியின் "குகை மர வாசிகள்". இதற்கான பயணத் திட்டம் உடல்நிலைக் காரணமாக ரத்தானதால் சற்று வருத்தத்தில் இருந்து வந்த நான் அதைப் பற்றிச் சென்ற வாரம் கூட நண்பர் ஒருவரிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக அமைந்ததுதான் நண்பர் "பிரளையன் அவர்களின் சென்னை கலைக்குழு" சார்பாக நடைபெற்ற "கூக்குரல்" நாடகம்.


சிலவற்றை விவரிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்போமே, அப்படியொரு உணர்வு மேலோங்கி வந்தது நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாடகத்தின் முதல்காட்சித் துவங்குமிடம் மகாபாரத்தப் போருக்குப் பிறகு காட்டில் தனித்து வாழும் வயது மூப்படைந்த திருதராஷ்டிரன் - காந்தாரி மற்றும் குந்தி ஆகிய மூவரும் தங்களை விட்டுச் சென்று தனக்கான மரணத்தைத் தேடிச்சி சென்றிருக்கும் விதுரனை பற்றிச் சஞ்சையாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது போல் இருக்கும். பெரும்பாலும் மகாபாரதக் கதைகள் நாடங்கங்கள் என்றாலே போர் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறும் நிகழ்வோடு முடிந்துப் போகும். ஆனால் அதற்குப் பிறகான வாழ்க்கை உள்ளது. அதில் கிருஷ்ணன் உட்பட அனவரும் முதுமையடைந்துக் கவனிப்பாரற்று இறந்துப் போவார்கள் என்பதை ஏற்கனவே படித்திருந்த எனக்கு மேடையில் அக்காட்சிகள் வரும் போது என்னையுமரியாமால் மழ்ச்சி ஏற்பட்டது. காரணம் இதுபோன்ற சம்பவங்களை யாரும் வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டார்களா என்ற என்னுடைய ஆவலாகக் கூட இருந்திருக்கல்லாம்.
ராஜேஷ், ஷீலா ராஜ்குமார், ஜானகி அந்தோனி

அந்தக் கானகக்காட்சியில் பாண்டவர்கள் வருகையின் போது திரவ்பதி காந்தாரியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் தருணத்தில் துட்சாதனின் ரத்தத்தால் நனைந்த திரவ்பதியின் கூந்தலைத் தொட்டுப்பார்த்துக் கூந்தலில் இன்னும் ரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தேன். அந்தக் கணம் திரவ்பதியை அப்படியே கொன்று விடலாமா என்ற எண்ணம் என்னுள் வந்து சென்றது என்று கூறும் காந்தாரியின் வன்மம். அதீத அன்பு வன்மத்தை என்றும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது என்ற சிந்தனையை ஏற்படுத்தியது. இருபினும் திரவ்பதியை கொல்லாமல் விட்டதற்கான காரணத்தைக் காந்தாரிக் கூறும் போது அதீத அன்பினால் ஏற்படும் வன்மத்திற்கான மாற்று மற்றுமொரு அன்பு மட்டுமே என்பதானப் பொருளுடன் புரிந்து கொள்ளும் விதத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

பாண்டவர்கள் கானகத்திலிருந்து சென்ற பிறகு தனது தள்ளாத வயதில் பழைய நினைவுகளிலிருந்து மீள முடியாமல் தனது உயிரைக் காட்டுத் தீயிக்கு இறையாக்கிக் கொள்ளும் திருதராஷ்டிரன் முடிவு முதுமையில் ஏற்படுகின்ற தனிமையின் உச்சபட்ச வலியாகவே இருந்தது. மகாபாரதக் கதைகளைப் போருடன் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நம்மவர்களுக்கு அதன் பிறகான முதிய வாழ்வு எப்படி இருந்திருகிறது என்பதற்கான சான்றாகவே தெரிந்தது.

இதிகாசக்கால முதுமைக் கதைகள் முடிந்தவுடன் சமகாலத்தில் முதியோர் இல்லங்களில் நடைபெறும் விதமாகக் காட்சிகள் தொடர்கிறது. ஆனால் நாடகத்தின் இந்தப் பகுதி பலமுறை வெகுவாக நாம் கேட்டுக் கொண்டிருக்கும் கதையாகத் தோன்றினாலும் தனித்து விடப்பட்ட முதியவர்களின் துயரங்களைப் பிரதிபலிப்பதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து வந்த பகுதி இந்த நாடகத்தின் உச்சம் என்றே சொல்லலாம். கலைமாமணி விருது வாங்கிய கலைஞனைத் தேடிப்போகும் பயணம், முதுமையடைந்த கலைஞர்களின் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வைப் பிரதிபலித்தது.

கு.ப. தேவராஜன் 
முதுமையடைந்து நோய் பிடித்திருந்தாலும் ஒரு கலைஞனிடத்திலிருக்கும் கலையும் கலையார்வமும் அழிவத்தில்லை என்பதை மிக அழகாக நம் கண்களுக்குக் காட்சிப் படுத்தியிருப்பார் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த கே.பி.தேவராஜ் அவர்கள். மேலும் அதே பகுதியில் இன்றைய அரசியலில் பெண்களுக்குப் பின்னால் இருக்கும் ஆண்களைப்பற்றிய செய்தியும் அதனைப் பேசிய விதமும் பெண்களுகேன்றே கட்டமைக்கப்பட்ட கடைமட்ட அரசியல் பதவிகளில் நிகழும் ஆண்களின் ஆதிகத்தைக் காட்டுவதாகவே இருந்தது.

நாடகத்தின் ரசிப்புணர்வு அதிகமிருந்த பகுதியிலிருந்து வெளிவருவதற்காகவே கலகலப்பு மிகுந்த பகுதியாக அமைந்தது அடுத்தப் பகுதி. வாழ்வில் பொருளாதாரம் உட்பட அனைத்த்திலும் நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துப் பழகிய முதியவர் தனது முதுமைகாலத்தை எவ்வாறு அணுகுகிறார் என்பதையும் அவரது அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் அவரது குடும்ப உறுபினர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை நகைச்சுவையாகச் சொல்லி, இறுதியில் தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன், எனக்குத் தனிமைத் தேவையில்லை என்று சொல்லி வெளியேருமிடத்தில் அனைத்து முதியவர்களும் இது போலவே சுதந்திரமாகத் தங்கள் வாழ்நாட்களைக் கட்டமைத்துக் கொண்டால் எவ்வாறு இருக்குமென்று தோன்றியது. நாடகத்தின் இந்தப் பகுதிக்காக ஒரு பிராமணக் குடுப்பத்தைக் கதாப் பாத்திரமாக எடுத்துக் கொண்டதன் அரசியலும் பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்.

அதற்குப் பிறகானப் பகுதியில் கெளரவத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று வலுவாக நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தரக் குடும்பத்தில் நிகழும் முதியவர்கள் மீதானச் சொல் வன்முறையையும் அவர்கள் எந்தளவிற்கு அலட்சியப் படுத்தபடுகிறார்கள் என்பதையும் விளக்கும் அதே வேளையில் குழந்தைகளும் முதியவர்களும் ஒன்றுதான் என்பதை விளக்குவதற்காகக் குயிலோசையை வைத்து நிகழ்த்தப்பட்ட காட்சியமைப்புகள் எதார்த்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

இவற்றையெல்லாம் விட நாடகத்தின் உச்சத் தருணமாக முதுமையில் தங்களின் புனித மரணத்தை வேண்டிக் கங்கை நதிக் கரையிலும் பிரம்மபுத்திரா நதிக்கரையிலும் அமைந்திருக்கும் அரசுசார அமைப்புகளிடம் தஞ்சமடைந்து, தங்களது உடலை அவர்கள் வியாபாரமாகிக் கொள்கிறார்கள் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மரணித்துப் போகும் முதியவர்களும் இந்நாட்டில் உண்டு என்று சொல்லி முடிவடையும் காட்சியில் நம்மையறியாமல் கண்கள் கலங்கச் செய்கிறது.

நாடகத்தின் அத்தனை பகுதிகளும் முடிவுற்றப் பின் முதியவர்களின் சுதந்திரம் பற்றிய துணுக்குகளைச் சொல்லும் போது நமது நாட்டிலிருக்கும் முதியர்வர்களின் பாதுகாப்பின்மை பற்றிய நீண்ட ஒரு பார்வையை ஏற்படுத்தி வரும் காலங்களில் அரசாங்காம் முதியவர்களின் பாதுகாப்பிற்கு எம்மாதிரியான ஏற்பாடுகள் செய்யப் போகின்றது என்ற கேள்வியையும் முன்வைத்து முடிந்த நாடகத்தில் என் மனதுக்கு நெருடலாக அமைந்த விசையமாகப் பட்டது என்னவென்றால் இது போன்ற நாடகங்கள் விழிப்புணர்விற்குப் பதிலாக மக்கள் மத்தியில் முதுமை பற்றிய பயத்தையும், கவலையையும் ஏற்படுத்தி விடும் அபாயம் இருகிறது. இதற்கு மாறாக முதுமையை எதிகொள்ளும் போது அதனை நாம் சிறப்பாக அமைதிட எவ்வாறு திட்டமிட்டுக் கொள்ளவேண்டும் வர்க்கங்களுக்கு ஏற்றார் போல் என்பதைச் சொன்னால் குறைந்தபட்சம் பயமின்றியாவது இருக்கலாம்.
நாடகக் குழுவினர் 

பாடல்கள் மற்றும் அலுப்பூட்டக் கூடிய எதார்த்தம் தவறிய நிலையில் இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்களிலிருந்து விடுபட்டுப் பார்வையாளர்களை எங்கும் நகர விடாமல் இருக்கையில் அமரவைத்த நாடகத்தில் நடித்திருந்தத அனைவரும் தங்களது பங்களிப்பை அழகாகச் செய்திருந்தாலும் கு.ப.தேவராஜ், ராஜேஷ், சீலா ராஜ்குமார் போன்றோரது நடிப்பும் முகப் பாவனைகளையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். மேலும் பெயர்த் தெரியாத அந்த இளைய நண்பர் மற்றும் குழந்தைகளின் நடிப்புகளையும் கட்டாயம் பாராட்டியாக வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒருகிணைத்து நமக்கும் முதுமைவரும் என்ற எண்ணத்தை அனைவரது உள்ளத்திலும் ஏற்படுத்த வைத்த நாடக இயக்குனர் பிரளையனை கண்டிப்பாக வளமாகப் பாராட்ட வேண்டும் இது போன்று நிறைய நவீன மேடைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்.

பிரளயன்(நாடக இயக்குனர்)



#இனியன்

No comments:

Post a Comment