கடந்த மாதம் பல்லாங்குழி நிகழ்விற்காக ஒரத்தநாடு செல்வதற்காக குமபகோணம் பேருந்து ஏறியமர்ந்தப் போது அருகில் இருஇளைஞர்கள் வந்தமர்ந்தனர். உடல் சோர்வு காரணமாகப் பேருந்து கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கி விழித்த போது மேல்மருவத்தூர் கடந்திருந்தது.
தூக்கம் களைந்து உடல் சோர்வு நீங்கிய நிலையில் வழக்கம் போல் அருகில் இருந்த இளைஞர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன் அவர்கள் இருவருக்கும் தமிழ் தெரியாது என்பதை அறிமுகத்திலேயே புரிந்துக் கொண்டதால் அரைகுறை ஆங்கிலத்திலேயே உரையாடலைத் தொடர்ந்த எனக்கு அவர்கள் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் கல்லூரி மாணவர்கள், full science என்ற படிப்பில் grade 2 வில் தானிய வகைகள் மற்றும் அதனைச் சுத்தப்படுத்திப் பதப்படுத்துதல் பற்றிய படிப்பைப் படிப்பதாகவும், அது பற்றிய project விசையமாக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் அமைப்பின் மூலம் தமிழகத் தானியங்கள் மற்றும் அவற்றைச் சுத்திகரித்துப் பாதுகாக்கும் முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செல்வதாகவும், இந்தப் படிப்புப் படித்தால் இந்தியாவில் வேலை வாய்ப்புக் குறைவு, ஆனால் வெளிநாடுகளில் நாலா வருமானத்தில் வேலையிருக்கு என்று கூறினார்கள்(வெளிநாட்டு மோகம் யாரை விட்டது).
சற்றே வித்தியாசமான வித்தியாசமான படிப்பாக இருக்கிறதே எனக் கூறிக்கொண்டே உரையாடலை ஆந்திர மாநிலக் கல்வி முறையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்கில் கேள்விகள் கேட்கத் துவங்கிப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அக்கேள்விகளால் வெறுப்புற்றவனைப் போலதான் பதில்கள் வந்தது. எனது கேள்விகளை அவன் விரும்பவில்லை. அதனைத் தெரிந்து கொண்டு எனது கேள்விகளை ரோஹித் வெமுலா பற்றித் தெரியுமா என்று கேட்டேன். தாமதமின்றி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தான்.
அவனைப் பொறுத்த வரை ரோஹித் வெமுலாவை ஒரு தலைவனாகவே பார்கிறான். இருமுறை ஹைதராபாத் பல்கலைகழகத்திற்குச் செமினாருக்குச் சென்றிருந்தபோது ரோஹித்தை நேரில் சந்தித்திருகிறான். முதல் முறை வளாகத்தில் நடைப் பெற்ற கூட்டமொன்றில் பேசுவதைக் கேட்டு அவன் பேசிய அரசியல் சற்றுப் புரியாமல் தவித்து, சிறிது சிறிதாக முயற்சி செய்து உள்வாங்கியிருக்கிறான். மற்றொருமுறை பல்கலைகழக வளாக நூலகத்தில் அரைகால் சட்டை முண்டா பணியனோடு அமர்ந்திருக்கிறான் ரோஹித்.
இவன் ஆர்வக் கோளாறில் சென்று ரோஹிதிடம் தன்னை அறிமுகப்படுத்தி நூலகத்தில் இப்படி இருக்கலாமா என்று கேட்டதற்குத் திட்டுகளுடன் திருப்பியனுப்பியிருகிறான் ரோஹித். பின்னர் நூலகர் ரோஹித்தின் இரு JRF பற்றிச் சொல்ல மீண்டும் போய் மனிப்புக் கேட்டுப் பேசியபோது அவ்வளவு இனிமையாகப் பல விசையங்கள் பேசியிருக்கிறான். அந்தச் சந்திப்பிலிருந்து தனக்கும் ஒருவித தெளிவு வந்ததாகவே உணர்ந்தவன் ரோஹித் மீது கடுமையான விமர்சனகளையும் வைத்து அதெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகளவிலான மாணவர்களின் உதவியும் பக்கபலமும் வந்திருக்கும். இருதாலும் ABVP மற்றும் அரசாங்கத் தாக்குதலுக்கும் பிறகு அவர் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கக்கூடாது. எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஒரு விதச் சொர்வை ஏற்படுத்துகிறது என்று கூறியவன். ரோஹித்தின் அடையாளத்தை அளிக்க abvpனர் எப்படியெல்லாம் முயற்சி செய்து கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக ஒன்றைக் கூறினான். இவன் ரோஹித்திடம் பேசிவிட்டு வெளிவந்த பொது நான்கு நபர்களால் மிரட்டப்பட்டு உங்கள் கல்லூரியில் ரோஹித்தை சந்தித்தது பற்றியோ பேசியது பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றெல்லாம் மிரட்டப்பட்டிருகின்றான். இப்படியெல்லாம் ரோஹித்தின் அடையாளத்தை அளிக்க அவனது தாய்தந்தைச் சாதியை சொல்லி தற்போது எப்படியெல்லாம் பிரச்சனை பண்ணுகிறார்களோ அது போலவே வளாகத்தினுள் அவனுடன் யார்யார் பேசுகிறார்கள் என்றெல்லாம் கண்காணித்து அவைகளையும் மிரட்டும் பணியும் இருந்து வந்திருகிறது அது போலவேதான் தானும் மிரட்டப்பட்டேன் என்று சொன்னான்.
இந்த உரையாடலுக்குப் பிறகு வேறு தளத்தில் எங்களது உரையாடல் சென்றுது. குறிப்பாக ஆந்திர அரசில் மற்றும் பி.ஜே.பி, ABVP என நீண்டது. உரையாடலின் போது ஒரு விசையம் சொன்னான். ஆந்திராவைப் பொறுத்தவரை மாணவர்கள் மத்தியில் வலதோ, இடதோ அல்லது மத்திய நிலைபாடோ எதுவாக இருதாலும் தங்களுக்குள்ளாகக் குறைந்த பட்ச அரசியல் தெளிவைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை தமிழ்நாட்டிற்கு நான்கு முறை வந்து போயிருக்கிறேன் எங்களிடமிருக்கும் அந்த அரசியல் தெளிவு இங்கு மாணவர்கள் மத்தியில் இல்லை என்பதைக் காண்பதாகவும் அதனால் தான் தமிழகப் பல்கலைகழகங்கள் எவ்வித கலகங்களும் இல்லாமல் இருக்கிறது என்று கூறினான்.
உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப் பார்த்தால் நமது பெரும்பான்மையான மாணவர்களிடம் இது போன்ற தெளிவு இல்லை என்கிற தெளிவு நமக்குப் புலப்படும்.
#இனியன்