9 Aug 2014

நமது விளையாட்டு


நாளுக்கு நாள் பெருகிவரும் அதிநவீன தொழில்நுட்ப வாழ்க்கையில் இல்லங்கள் தோறுமட்டுமில்லாமல் கைகளில் உலகமும்,விரல்களில் தகவல்களை பெரும் வசதியை பெற்று விட்டதாக மகிழ்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் நம் மக்கள் தங்கள் குழந்தைளும் அதை பெற்றிட வேண்டுமென்ற முனைப்புடன் செயல் பட்டு அவர்களிடமும் தொழிற்வளர்ச்சியை கொண்டு செல்வது ஆரோக்கியமான மனநிலையாக இருந்தாலும்,அக்குழந்தைகள் தொடர்ந்து இழந்து வரும் நமது வாழ்வை அழகாக்கும் சில முக்கிய காரணிகளையும் தகவல்களாகவே பெற்றுவருகின்றனர்.அவர்கள் தொடர்ந்து இழந்து வருவதில் முக்கியமான ஒன்றாக இருப்பது நமது பாரம்பரியமான  விளையாட்டுகளும் ஒன்று.

பொருளாதார தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவரும் “தனக்கு கிடைக்காதது தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும்”என்று சொல்லிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் “தான் ரசித்து அனுபவித்தவற்றை தன் பிள்ளைகள் பெற வேண்டும்”என்ற எண்ணத்தை மட்டும் காலங்காலமாக தவிர்த்து வருகின்றனர்.இது போன்ற எண்ணத்தால் குழந்தைகளின் விளையாட்டுகள் என்பதே கணினி மற்றும் மேலைநாட்டு மோகத்தின்  கீழ் என்றாகிவிட்ட நிலையில் குழந்தைகளின் உலகம் பெரிதும் தனிமைப் படுத்தப்பட்டும்,உடல் மற்றும் மன சிக்கல்கள்,கூட்டு வாழ்க்கையின்மை போன்ற பல வாழ்வியல் சிக்கல்களை சந்தித்துக் கொண்டுமிருகின்றன.குழந்தைகளின் இம்மன நிலைக்கு பெற்றோர்களும், பள்ளிகளும், மாறி வரும் வாழ்க்கை முறைகளும் இது போன்ற சிக்கல்களுக்கு வழிவகையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதே நிறந்தர உண்மையாகிக் கொண்டிருகிறது.

இந்நிலை மாற குறைந்தபட்ச உத்வேகத்திலும் புதுமை புகுத்தலுடன் வணிகவியல், கணிதவியல், வாழ்க்கையியல், உடற்த்திடம், கூட்டுமுயற்சி, உறவு போன்ற பலவற்றை உள்ளடக்கிய நமது பழமையான பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி,தாயம்,ஒற்றையா இரட்டையா பம்பையா பரட்டையா,நேர்கோடு,ஆடு புலியாட்டம்,கல்லாக்கா,சொல்விளையாட்டு,நூற்றுக்குச்சி,எண்விளையாட்டு போன்ற உள்விளையாட்டுகளும்,கடல்,பாண்டி,பச்சக்குதிரை,குலை குலையா முந்திரிக்கா, சில்லாக்கு, கண்ணாமூச்சி, கல்லா மண்ணா, கில்லி தாண்டு கோலி, பம்பரம், கவட்ட குச்சி, நாடுபிரித்தல், பூபறிக்கவருகிறோம், நிலாச்சோறு, போன்ற வெளி விளையாட்டுகளையும் இக்கால குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.இந்த விளையாட்டுகள் சில வற்றில் வகை பாடுகளும் உண்டு.

நமது வாழ்வுடன் ஒன்றி விட்டிருந்த இது போன்ற விளையாட்டுகளில் சிலவற்றை விளையாடுவதற்கான மண் தரைகளோ,தெருக்களோ,அல்லது கூட்டுக் குடும்ப வாழ்வு நடைமுறை சாத்தியக்கூறுகளோ தற்போது இல்லை என்றாலும் முடிந்த அளவேனும் இவற்றை குழந்தைகளிடமும் இளைய தலைமுறையினரிடமும் கொண்டுச்செல்ல வேண்டும்.பெற்றோர்களும் தாங்கள் தங்கள் பணிகளை பார்த்துக் கொல்வதற்காக குழந்தைகளை தனிமைப்படுத்தும் நவீன தொழில்நுட்ப விளையாட்டுகளுக்கு வழி வகை செய்து கொடுத்தாலும் குறைந்த பட்சம் தினமும் ஒரு மணிநேரமாவது அவர்களுடன் சேர்ந்து இவற்றை விளையாடி மகிழ வேண்டும் அவ்வாறு விளையாடும் போது குழந்தைகளின் தனிமை உடைப்பட்டு உறவுகளும் பலம்பெறும்.

நவீன அறிவியல் வளர்ச்சி அத்தனை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி அதற்கு ஈடான பொருளாதார வளர்ச்சிகளை தேடும் அதே நேரத்தில் நமது வரலாறு,பாரம்பரியம்,மனிதம் போன்றவற்றைகளையும் தேடி வளர்ச்சி பெற்றால் மட்டுமே அச்சமூகம் ஒரு சிறந்த மாற்று சமூகம் என்ற நிலையை எட்ட முடியும்.அந்நிலையை எட்டுவதற்கு குழந்தைகளையும் இளைய சமுதாயத்தையும் விளையாட்டுகளின் வாயிலாக தயார் படுத்த வேண்டும்.


#இனியன்                 

No comments:

Post a Comment