9 Mar 2014

பல்லவ விருந்து


பொதுவாக சமகால திரைப்படங்கள்,ஊடகங்கள் மற்றும் மாறிவரும் தொழில்நுட்ப வாழ்க்கை முறைகளாலும் ஒரு தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்பட்டு வரும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் மகத்தான ஒன்றாக விளங்கும் மாமல்லபுரத்தையும் அதன் தொன்மைவாய்ந்த அழகியலை வரலாற்றுப்பார்வையிலும்,அதன் கலைகளை கலைகண்ணோட்டத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்று அனைவரும் அதனை அறிந்து கொள்வதற்காக பேராசிரியர்,கவிஞர் பாரதிபுத்திரன் மற்றும் ஓவியர் ட்ராஷ்கி மருது அவர்களின் விரிவான விவரிப்புகளுடனும் அனைவரும் அந்த பல்லவ கலைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க முக்கியமானதொரு நிகழ்வை சென்னை  திருவான்மியூர் “பனுவல் புத்தக நிலையம்” சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “வரலாற்றை அறிவோம்” என்ற அருமையான நிகழ்வில் நானும் கலந்து சென்றது மிக சிறப்பான நாளாக அமைந்தது எனக்கு.

திருவான்மியூர் புத்தக நிலைய வாயிலிலிருந்து 60 நபர்களுடன் புறபட்ட பேருந்து முதலில் சென்று இறங்கியது சாளுவ கிராமத்திலிருந்த  புலிக்குகை.அங்கு சென்றவுடன் எனது நினைவு சற்று பின்னோக்கி சென்று சிறுவயதில் எனது இல்லத்தில் கிழக்கு நோக்கியிருக்கும் சமையலறை ஜென்னல் கம்பிகளின் வழியே காலை சூரிய கற்றை விழும் அழகிய தருணத்தில் தினமும் நான்கு சிட்டுக்குருவிகள் சப்தமிட்டும்,ஜென்னல் கம்பியில் அமர்ந்து விளையாடிய தருணங்களை பார்த்தும்,அவற்றின் சப்தங்களை கேட்டும் ரசித்து கடந்த பதினைந்து வருடங்களாக பார்த்திராத சிட்டுகுருவிகளையும்  அதன் அழகிய குரலையும் ரசிக்க முடிந்தது புலிகுகையின் வாயினில்.

அனைவரும் உள்ளே சென்று  புல்தரையில் மெல்லிய ஒளிகற்றை மட்டுமே விழும் மரநிழலில் அமர பேராசிரியர் மற்றும் கவிஞர் பாரதிபுத்திரன் அய்யா அவர்கள் மாமல்லபுரம் பற்றிய விவரிப்பை துவங்கினார்,இவ்விடத்தை பற்றி இது வரை எழுதப்பட்டுள்ள புத்தகங்களையும் ஆய்வுக்குறிப்புகளையும் சென்னையிலிருந்து இது வரை வரிசையாக அடிக்கிவைத்து படித்தாலும் இதிலுள்ள மர்மங்கள் முற்றுபெராதவை,அனைத்து ஆய்வாளர்களுக்கும் அதே நிலைதான் அந்த அளவிற்கு 99.5% மர்மங்கள் நிறைந்த இந்த மாமல்லபுரத்தை பற்றி விவரித்த பின்பு உங்கள் மனதிலும் எழும் அனைத்து விதமான  கேள்விகளுக்கும் விடை இருக்குமா என்றால் பதில் இல்லை என்றுதான் இருக்கும் என்று மாமல்லபுரம் பற்றிய விவரிப்புகளை ஆரம்பித்து அவர் சொன்ன ஒவ்வொரு விவரிப்புகளையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த கணம் மனதில் எழுந்த அந்த பிரமிப்புகளுக்கு அளவே இல்லை எனலாம்.

அந்த பிரமிப்புகளுகிடையே நடந்தேறிய சில விசையங்களையும் இடையில் கவனிக்காமல் இல்லை,ஆம் அந்த அழகிய காலைவேளையில் நான் ரசித்த சிட்டுகுருவி காதல்களுக்கு இணையாக,நமது அனைத்து வரலாற்றிடங்களும் அதில் அதிககமாக இடம்பெற்றிருக்கும் சிற்ப காதல்கள் நமக்குதான் என்று அவ்விடம் நோக்கி படையெடுக்கும் நமது காதலர்களுக்கு இவ்விடமும் எவ்வகையிலும் சலைத்ததில்லை என்று என்னும் வகையில் நடமாட்டம் ஆரம்பித்திருந்ததை கவனித்துகொண்டுதானிருந்தோம் அனைவரும்.

பிறகு புலிக்குகை பற்றிய செய்திகளுடன் அங்கிருந்த ஒரே பாரையினால் குடைதேடுக்கப்பட்டு அழகிய துவாரபாலகர்களை காவலிற்கு வைத்து சிவனை மூலவராக கொண்ட குடைவரை வழிபாட்டுத் தளத்திற்கு சென்று அங்கிருந்த சிற்பங்களையும் அதனருகில் இருந்த சிறிய வடிவிலான மகிடனை கொன்ற மர்த்தினியின் சிறிய அளவிலான தத்துரூப சிற்பத்தினை பற்றியும் பாரதிபுத்திரன் மற்றும் மருது இருவரும் விவரித்த விதம் என்றும் மறவாதவை.அவ்விடத்தில் பாரதிபுத்திரன் அவர்கள் சொன்ன தகவல் அனைத்திலும் என்னை மிகவும் கவர்ந்தது,எல்லா கோவில்களிலும் கருவறை வாயினில் இருக்கும் சிற்பத்தினை ஆண் தெய்வ கருவறையாக இருந்தால் துவாரபாலகன் என்றும் பெண் தெய்வ கருவறையாக இருந்தால் துவாரபாலகி என்றும் குறிப்பிட வேண்டுமென்று தெரிவித்தார்.இது ஒரு கூடுத்தல் தகவல் எனலாம்.

அந்த வழிபாட்டு தல சுவற்றில் பல்லவர்களால் வடிக்கப்பட்ட தமிழல்லாத இரு வேறு மொழியினை சுட்டிக்காட்டிய அவர் ஒரு மொழி சமிஸ்கிருதம் என்றும் மற்றொன்று தேவனாகினி மொழி என்றும் பிற்கால பலவர்கள் தமிழ்மொழிக்கு வந்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.பிறகு அந்த குடைவரை வழிபாட்டு தளத்திற்கு நேர் எதிரே இன்றைக்கைக்கும் சாளுவ கிராம மக்களின் வழிபாட்டு தளமாக பயன்பாட்டிலிருக்கும் ஓடுகள் வேய்ந்த ஒரு சிறிய கோவிலையும் சுட்டிக்காட்டினார்,அது பயன் பாடிளிருப்பதால் அங்கு சென்று யாரும் அதை பார்க்கவில்லை. இவையனைத்தையும் தத்ரூபமாக தெரிவித்து இறுதியாக அதிலிருக்கும் மர்மம் என  அக்குடைவரை முழுவதுமாக முடிக்கப்படாத ஒன்று என்று அதற்கான ஆதாரங்களான சிற்பங்களின் மூலம் தெளிவுபடுத்தி,இது போன்று முடிவு பெறாத அனேக இடங்கள் மாமல்லபுரம் முழுவதும் உள்ளன என்றும் தெரிவித்தார் பேராசிரியர்.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் அவ்விடத்திற்கு வெளியே 2004 ஆழிபேரலையால் வெளியுலகத்திற்கு தெரிய வந்து தொல்லியல் துறையினற்கே புரியாத புதிராய் விளங்கிகொண்டிருக்கும் சுட்ட செங்கற்கள்  மற்றும் பாறைகளால் மிகபெரிய பாறையை சுற்றி கட்டப்பட்டு மண்ணில் புதைந்த ஒரு வழிபாட்டு தளத்தையும் பார்த்தோம்,இவ்விடம் பல வரலாற்று ஆய்வாளர்களுக்கே புதிரான ஒன்றாக விளங்குவதாக கூறினார்கள்.பின் அவ்விடத்தின் பெயர்காரணமாக அமையப்பெற்ற புலிக்குகையை நோக்கி எங்கள் கால்கள் நடக்க துவங்கியது.

புலிக்குகை அதன் அமைப்பு இதற்கு முன் அதனை கண்டவர்களும்,முதல்முறையாக அதனை காண்பவர்கள் என அனைவரையும் பிரமிப்பில்தான் ஆழ்த்தியது.பேராசிரியர் அதனை விவரித்த விதத்தில், மிகப்பெரிய ஒரே பாறையை குடைதேடுத்து செதுக்கப்பட்ட அதன் அமைப்பு, சுற்றி ஒரு பார்வையாளர் மண்டபம் போலும் நடுவில் யாளி என்ற கற்பனை விலங்குகளின் தலைகளுக்கு மத்தியில் ஒரு சிறிய மேடை போன்ற அமைப்பும் அந்த மேடையின் இடது புறமும் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய சிறு கருவறை போன்ற அமைப்பும் அழகிய வேலைபாட்டுடன் விளங்க,இறுதியில் இதுவும் முற்றுபெறாத ஒன்றுதான் என்று பேராசிரியர் சொன்னபோது மேலும் ஆச்சரியம் தான் மிஞ்சியது.

அவ்விடம் ஆடல் மற்றும் மற்ற கலைகளின் அரங்கேற்ற மேடையாக இருக்கோமோ?என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதில் ஏனென்றால் அவ்வளவு சிறிய மேடையமைப்பில் கலை அரங்கேற்றம் என்பது சாத்தியமற்றது என்பது பார்த்த கணத்திலே புலப்படும் ஒன்றுகத்தான் இருந்தது.இவ்விடத்திற்கு ஏன் புலிக்குகை என்ற பெயர் வந்தது என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் இன்று வரை விடைதேடிக் கொண்டுதானிருகின்றனர். இவ்விடத்தை அவர்கள் எந்த விதமாக பயன்படுத்தினார்கள் என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடைதேடபட்டுக் கொண்டுதான் இருகிறது உலகம்.

ஒருவாரு புலிக்குகை முடித்து வெளியேறி பேருந்தில் சிறு பயணம் மாமல்லபுரம் நோக்கி.அங்கு சென்றவுடன் முதலில் அந்த மாமல்லபுரக்குன்றுகளின் துவக்கமாகிய மும்மூர்த்தி குடைவரையிலிருந்துதான் பார்க்க துவங்க வேண்டும் என்ற அறிவிப்போடு செல்ல இடையில் இயற்கையின் புரியாத புதிரில் ஒன்றாக விளங்கிக் கொண்டும்,பிறகு நம்மவர்கள் மத நம்பிக்கையால் மெருகேற்றப்பட்ட பகுதியில்,சறுக்கலான பாறையமப்பில் ஏதோ ஒரு புள்ளியில் தாங்கி நிற்பது போல் நிற்கும் அற்புத பாறை எங்களை வரவேற்க,அந்த அற்புத இயற்கை நிகழ்விற்கு நம்மவர்கள் சொல்லும் இட்டுகட்டிய பெயர் கிருஷ்ணனின் வெண்ணெய் உருண்டை என்று சொல்ல சிரித்த வாரே மும்மூர்த்தி குடைவரைக்கு சென்றோம்.

மும்மூர்த்தி என்று சொன்னவுடன் அனைவரும் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்ற அமைப்பில்தான் இருமென்று ஒரே விதமான மனநிலையில் செல்ல,அங்கு ஒரே குன்றை குடைந்தெடுத்து அழகிய வேலைபாடுகளுடன் கூடிய உருவங்களை கொண்ட சிவன்,விஷ்ணு மற்றும் முருகன் ஆகியோருக்கான கருவறைகள் துவாரபாலகர்களின் பாதுகாப்புடன் குடையப்பட்டிருந்தது.விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கரம் மற்றும் சங்கு,முருகனின் முக அமைப்பு முதல் அனைத்தும் மிகவும் தத்துரபமாக விவரிக்கப்பட்டது எங்களுக்கு.மும்மூர்த்திகளில் பிரம்மா ஏன் இல்லை என்ற கேள்வி எழுந்த போது பிரம்மா முருகனிடம் சொல்லாடலில் தோற்க,படைக்கும் தொழிலை முருகன் மேற்கொண்டான் என்ற சங்க இலக்கிய புராண கதை ஒன்றோடு இணையப்பட்டது என்று பேராசிரியர் கூறியபோது பல்லவர்கள் வடித்த அனைத்து சிற்பங்களும் புராணக் கதைகளுக்கான பதிவு என்றே தோன்றியது.இங்குள்ள முருகன் குடைவரையையிலுள்ள துறவிகள் சிற்பம் அக்கால மெலிந்த துறவிகளை கண்முன்னே நிறுத்தியது அதன் சிறப்பு அம்சமாகப்பட்டது,மேலும் முருகன் குடைவரையின் வாயிலின் மேற்புறத்தில் மாமல்லன் என்று செதுக்கபட்டிருப்பதால் இது மாமல்லபுரம் என்றுதான் அழைக்கபட்டிருக்கும் என்று விளக்கம் அழித்தார் பேராசிரியர்.

இந்த மும்மூர்த்தி குடைவரையின் எதிரே ஒரே பாரையில் குடையப்பட்ட மிகப்பிரம்மாண்டமான தொட்டி ஒன்றும் இருந்தது,அது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறதாம் அனைத்து ஆய்வாளர்களுக்கும்.மும்மூர்த்தி குடைவரையை சுற்றி பின்புறம் சென்றபோது என்ன ஒரு தத்துரூபமான படைப்புடன் ஒரு யானைக்குடும்பமும்,இமையமலை பகுதியில் காணப்படும் குரங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்படிருந்தன,இவை அனைத்தும் அர்ஜுனன் தபசு என்ற இடத்தில் குடைவதற்கு முன்னால் செய்து பார்ப்பதற்காக செய்யப்பட்டிருக்கலாம் என்றும்,ஏனென்றால் இவையனைத்தையும் அர்ஜுனன் தபுசுவில் நாம் காணலாம் என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.அந்த யானைய்களின் உடற்கூறுகளில் இருந்த உண்மைத்தன்மையை ஓவியர் விளக்கினார்,ஒரு யானை தனது துதிக்கையை மேல தூக்கும் போது அதில் ஏற்படும் மடிப்புகள் மற்றும் யானையின் வால்பகுதியில் உள்ள தனியொரு சதை பிடிப்பு போன்ற பகுதியில் இருந்த உண்மைத்தன்மை,ஒரு சிறு யானை மண்டியிட்டு தனது வாயால்  தண்ணீர் அருந்துவது போன்ற காட்சியில் யானையின் மண்டியிட்ட தன்மையில் உள்ள அதன் உடற்கூறுகள் பற்றி ஓவியர் தெரிவித்த போது உண்மையில் அங்கு ஒரு யானைக் குடும்பம்தான் உள்ளதோ என்று எண்ணத் தோன்றியது.

அவ்விடம் விட்டு நகர்ந்து வரும் போது வான் நோக்கி நிமிர்ந்து வளர்ந்திருக்கும் சில பாறைகளில்(பாறைகள் என்று சொல்வதை விட குன்றுகள் எனலாம்) இருக்கும் துளைகளை காண்பித்து அவை அனைத்து பாறைகளை உடைப்பதற்காக போடப்பட்ட துளைகள் என்றும் அந்த துளையில் மரத்துண்டுகளை இட்டு தண்ணீர் ஊற்ற மரத்துண்டுகள் தண்ணீரில் ஊறி  விரிவடையும் போது பாறைகள் உடையுமாம்,இம்முறைக்காகத்தான் அந்த துளைகள் இடம் பெற்றுகின்றன என்றும்,பாறைகளை உடைக்க மற்றுமொருமுறை பயன்டுத்தப்பட்டுள்ளது அது பாறையை நன்கு சூடேற்றி சூடான பகுதியை உடைத்தேடுத்துள்ளனர் என்றும் பேராசிரியர் கூர ஆச்சரியமாக கேட்டுகொண்டே வந்தோம் அனைவரும். 

மீண்டும் ஒருமுறை கிருஷ்ணனின் வெண்ணையுருண்டையை கடக்க நேர்ந்தது,அப்போது எனது நினைவு  திருச்சி காஜாமலையிலும் ஒரு பாறையிடம் செல்ல,அங்கும் இதுபோன்று ஒரு பாறை தனித்து நிற்குமென்று கூர,ஒருவேளை அங்கேயும் கிருஷ்ணனின் உருண்டை விழுந்திற்க்கும் என்று நண்பர் சொல்ல அது இஸ்லாமியர்களின் மலை என்று நான் சொல்ல,அனைவரும் சிரித்தவாரே கணேஷ தபசு என்ற இடத்திருக்கு வர,பேராசிரியர் அதன் வித்தியாசமான கோபுர அமைப்பையும் முற்றுபெறாத தன்மைபற்றியும் விவரிக்க,பொதுவாக கோபுரங்களில் கூம்பு வடிவ அமைப்புதான் இருக்கும்,ஆனால் இந்த கணேஷ தபசுவில் திருசூல அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அதுவும் ஒரு பகுதி உடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டி விவரிக்க அதனை கவனித்த வாரே அங்கிருந்து நகர்ந்து துர்க்கை மண்டபத்திற்கு வர,அங்கு துவாரகபாலகனிகள் எங்களை வரவேற்க,தாமரை மேல் அமர்ந்து போருக்கு ஆயத்தமாகும் துர்க்கையின் அமைப்பும்,துர்க்கைக்கு சேவை செய்யும்  பணிப்பெண்களின் முகத்தில் இருக்கும் பணிவு கலந்த பாவனை,யானை தன் துதிக்கையால் துர்க்கைக்கு தண்ணீர் உற்றும் அழகு போன்றவற்றை பற்றியும்,ஆக்ரோசமான சிம்மவாகனத்தில் துர்க்கை அமர்ந்து போர் புரிய,துர்க்கையின் மற்றுமொரு வாகனமாகிய கலைமான் ஒரு ஓரத்தில் நின்று அதனை பார்க்கும் விதம் என்று அற்புதமான வேலை பாடுகள் கொண்ட சிற்பங்கள் பற்றியும்,ஆக்ரோசமான போர் மற்றும் சுய பலியினை மேற்கொள்ளும் போர் வீரனின் வடிவமைப்பு பற்றியும்,சுய பலியை போன்றே சுய உறுப்பு பலி என்ற ஒன்றும் அக்காலத்தில் இருந்ததாகவும் அது ஒரு மனிதன் தானே தனது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக வெட்டி இறுதியில் தலையையும் வெட்டிக்கொண்டு  துர்க்கைக்கு பலியிடும் நிகழ்வையும் விவரித்தவாரே அதே   மண்டபத்தில் முற்றுபெறாத விஷ்ணுவின் ஓவியம் இருந்த பகுதிக்கு வர அவ்வோவியம் மிகவும் சிதைந்த நிலையில் பெரிதாக எதுவும் சொல்ல இயலாமல் சிறிய விவரிப்புகளோடு முடிந்தது,பின் சிறிது நேர ஓய்விற்கு பிறகு பிரமாண்டமான  அர்ஜுன தபசு செல்ல ஆயத்தமானோம்.

அங்கு செல்வதற்கு முன் அனைவரது கவனைத்தையும் ஈர்த்தது அனேக திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் நாம் பார்த்து சிரித்தது,ஒரு குரங்கு மற்றொரு குரங்கிற்கு பேன்பார்ப்பது போன்றுஒரே கல்லால் செய்யப்பட்ட சிலயமைப்பு,அதில் பல பெண்கள் நின்றும் அதே போல் அமர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டிருக்க அனைவரும் அதனை ரசித்தாரே சென்றோம்.

அர்ஜுன தபசு பார்பவர்களின் இருகண்களால் மொத்தமாக ஒரே நேரத்தில் பார்க்க இயலாத அப்படியொரு பிரமாண்டம்,அர்ஜுன தபசு மொத்தம் இருவேறு குன்றுகள் சங்கமிக்குமிடம்.வெவ்வேறு விதமான ஒன்றுகொன்று தொடர்பில்லாத ஆனால் தொடர்புடைய 158 சிற்பங்கள்.ஒரு அழகிய வன அமைப்பு,விலங்குகள்,வேடர்கள்,கந்தவர்கள் என அனைவரும் ஓரிடம் நோக்கி செல்வது போன்று காட்சியமைப்ப.வறண்ட வனத்தை காக்க அர்ஜுனன் மேற்கொண்ட தவத்தால் கங்கையாறு அவ்வனத்தின் வழியே வழிந்தோடுகிறது.அந்த இடம் நோக்கியே அனைத்து விலங்கு மற்றும் வேடர்களும் செல்வது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது என்று பேராசிரியர் விவரிக்க எங்கள் அனைவருக்கும் ஆச்சரிய சுவடு படரத்துவங்கியது.மேலும் அர்ஜுனன் தபசுவில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் தெரிந்த உடற்கூறுகள் பற்றி சுட்டிக்காட்ட நாங்கள் அனைவரும் அதனை கவனிக்கத்துவங்கினோம்,அவையனைத்தும் பல்லவ கலைஞர்களின் அற்புதம் என்றே சொல்லலாம்.

அர்ஜுனன் மற்றும் அவன் காலடியில் அமர்திருக்கும் முனிவர் ஆகிய இருவரது உடலமைப்பில் மார்பு மற்றும் விலா எலும்புகள்,வேடர்களின் கட்டுடல் அவர்கள் கையில் வைத்திருந்த வில் அம்பு மற்றும் பலாபழம்,மரங்களின் அசைவு தன்மை மான் மற்றும் சிங்க குடும்பங்கள்,யானைக்குடும்பம் முயல் போன்றவற்றின்  ததுரூப வடிவமைப்புகள் கண்களை விட்டு  என்றும் நீங்காதவை.வனம் வறண்டு கிடைகிறது,சிங்கங்கள் தங்கள் குகைகளில் இருக்கின்றன,மான் அலைகின்றன இவையனைத்தையும் பார்க்கும் போது இது கண்டிப்பாக சித்திரை மாத வெப்ப கொடுமையான நாட்களை பிரதிபலிப்பதாக இருக்கலாம் என்று அர்ஜுன தபசுவின் கால நிலை பற்றியும் விவரிக்கப்பட்டது.

வேட்டையாட திராணியற்ற கிழட்டு பூனை ஒன்று கங்கையாற்றங்கரையில் தவமிருக்க,அதனை பார்த்து கொண்டிருந்த எலிகள்,முதலில் அதன் மேல் இருந்த பயத்தினால் அருகில் வர தயங்கி நிற்க பூனை சொன்னதாம் நான் தவமிருக்க வந்துவிட்டேன் ஆகையால் நான் அசைவம் உண்ணுவதை நிறுத்திவிட்டேன் ஆகையால் நீங்கள் தாராளமாக என்னருகில் வந்து நட்பு பாராட்டலாம் என்று சொல்ல, பிறகு அந்த கிழட்டு புனையினால் எதுவும் ஆபத்துகள் இல்லை என்று தயக்கம் நீக்கி அப்பூனையுடன் உறவாட ஆரம்பித்தவுடன் தினமும் ஒவ்வொரு எலியாய் குறைந்து கொண்டே வந்ததாம் எலிகூட்டதிலிருந்து,அதனை எலிகள் அனைத்தும் அறிந்துகொண்டு வஞ்சக பூனையிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வியூகம் அமைத்து கிழட்டு பூனையின் சூழ்ச்சியை முறியடித்தனவாம்,என்ற கதையை மகாபாரதத்தில் துரியோதணன் நீயும் அந்த கிழட்டு பூனை போல்தான் என்று தர்மனுக்கு சொல்லியனுப்பிய கதையை மிகவும் தத்துரபமாக வடிவமைத்திருந்தனர் வெவ்வேறு உருவ அமைப்பைக் கொண்ட பதினைத்து எலிகள் மற்றும் ஒரு பூனையை வைத்து அர்ஜுனன் தபசுவில் பல்லவர்கள் சிற்பமாக வடிவமைத்துள்ளனர் என்று பேராசிரியர் அற்புதமான கதையுடன் விளக்கினார்.

அர்ஜுனன் தபசுவில் செதுக்கப்பட்டிருந்த யானைகளின் உடலைமைப்பை பார்க்கும்போது ஓவியர் மருது அங்கே மும்மூர்த்தி குடைவரை பின் பார்த்தோமே அதேதான் இது,ஆனால் யானைகள் திடீரென்று உயிர்பெற்றாலும் ஆச்சரியமில்லை அப்படியொரு தத்துரூப உடலமைப்பு என்று கூர நாங்களும் அவற்றை பார்த்து ரசித்துகொண்டிருந்த கணம் இந்த அர்ஜுன தபசும் முற்றுபெறாத ஒன்றுதான் என்று அதற்கான ஆதாரத்தை காட்ட,நாங்கள் அனைவரும் ஏன் இவ்வாறு முழுவதுமாக முடிக்காமல் பாதியில் வைத்துள்ளனர் என்ற கேள்விக்குறியுடன் கோவர்த்தன சிற்பம் நோக்கி நகர்ந்தோம்.

கோவர்த்தன மலையடிவாரம் ஆயர் குல மக்கள் வாழும் பகுதி இந்திர தேவனின் அருளால்தான் மாதம் முமாரி பெய்து விவசாயம் முதல் அனைத்து தொழில்களும் சிறப்பாக நடை பெறுகிறது.அம்மக்கள் இந்திர தேவனை போற்றி துதிக்க கர்வம் கொள்கிறான் இந்திரன்,அத்தருணம் அவனது கர்வத்தை போக்க கிருஷ்ணன் அம்மக்களிடம் இனி இந்திரனை தொழ வேண்டாமென்று சொல்ல அம்மக்களும் அவனது சொல்லிற்கிணங்க இந்திர வழிபாட்டை தவிர்கின்றனர்,கோபம் கொண்ட இந்திரன் பெரும் புயலையும் மழையையும் அவ்விடத்தை நோக்கி இடைவிடாது தந்து ஊறு விளைவிக்க,மக்கள் அனைவரும் கிருஷ்ணனிடம் முறையிட அவன் தனது இடது கையால் கோவர்த்தன மலையை தூக்கி பிடித்துக்கொள்ள ஆயர்குல மக்கள்,அவர்களின் விலங்குகள் என அனைவரும் அதன் அடியில் எந்த வித அச்சமுமின்றி நிற்க,இந்திரனும் இடைவிடாது 5 நாட்களுக்கு மேலே புயலையும்,மழையையும் தருவித்தும் அவனால் அம்மக்களை ஒன்றும் செய்ய இயலாமால் தனது கர்வம் மற்றும் ஆணவம் தவிர்த்து கிருஷ்ணனின் பாதத்தில் சரணடைகிறான்,என்ற புராணக் கதையம்சத்தை ஒரே குன்றில் மிக நேர்த்தியாக வடிவமைத்ததுத்தான் கோவர்த்தன மலை சிற்பம்.பிற்காலத்தில் நாயக்கர் காலத்தில் அதனை சுற்றி  கல் மண்டபம் எழுப்பி கிருஷ்ண மண்டபம் என்று பெயர் வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

கோவர்த்தன மலை சிற்பத்தில் குடும்பம் குடும்பமாக மக்களும் விலங்குகளும் நிர்க்கும்வாறு குடையப்பட்டு குடும்ப அமைப்பு பற்றி அருமையாக வடிவமைத்திருப்பர் பல்லவ கலைஞர்கள்,குறிப்பாக அந்த அமைப்பில் நிற்கும் பசு மற்றும் பசுவின் காம்புகள்,கம்பீரமாய் நிற்கும் எருதுகள்,இளம் காதல் மனைவியிடம் விளையாடும் கணவன்,தந்தையிடம் விளையாடும் குழந்தைகள்,பசுவிடம் பால் கறக்கும் இடையன்,கிருஷ்ணனின் அழகிய உருவம் மற்றும் அவனது அண்ணன் பலராமன் ஆகிய சிற்பங்களை வருணிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்லலாம்.
அந்த நாயகர் மண்டபத்தில்,அவர்கள் காலத்திலோ அல்லது சில நுற்றாண்டுகளுக்கு முன்னால் விளையாடப்பட்ட பழமையான விளையாட்டு முறைககளை அந்த மண்டபத்தில் கவனித்தேன் பொதுவாக நமக்கு தெரிந்த தாய விளையாட்டுகளில் வித்தியாசமான மூன்று முறைகளையும் ஆடு புலியாட்ட குறியீடுகளையும் நான் கவனித்தேன் என்பது கூடுத்தல் சிறப்பாக அமைந்தது எனக்கு.

இந்த கிருஷ்ண மன்டபமும்,முன்பார்த்த அர்ஜுன தபசுவும் நீருடன் தொடர்பு கொண்டிருப்பதால் அவற்றிக்கு மேலே தொட்டி போன்ற அமைப்பு செய்யப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட்டு இவ்விரு இடங்களிலும் வடிவது போன்ற அமைப்பும் பல்லவர்கள் காலத்தில் அமைக்கபட்டுள்ளன என்பது சிறப்புத் தகவலாக  பேராசிரியர் விளக்கினார்.
   
அடுத்ததாக நாங்கள் சென்ற பிரமாண்டம் ஐந்துரத பகுதி,ஒரே மலைக்குன்றை ஐந்து வித்தியாசமான கோபுர அமைப்புகளாக குடையப்பட்ட பகுதி,இந்திய தொல்லியல் துறையின் முறையான பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் உள்ள பகுதி,சகாதேவ ரதம்,பீம ரதம்,பிடாரி ரதங்கள்,திரவ்பதி ரதம்,தர்மராஜ ரதம் என பிரமாண்ட கோபுர அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்றாலும் அனைத்திலும் ஒரு ஒற்றுமை உண்டென்றால் அனைத்துமே முற்று பெறாதவை என்றதுதான்,இந்த கோபுர அமைப்புகளில் மழை பெய்தால் மழைநீர் கீழே விழுவதற்கு,வாய் பிளந்த படி குரங்குகள் அமைக்கப்பட்டு,அதன் வாய் வழியே தண்ணீர் விழுவது போன்று அமர்ந்திருக்குமாரு அமைக்கப்பட்ட வடிவமைப்பு பற்றி பேராசிரியர் விளக்கியவுடன் அனைவரும் பிரமிப்பின் உச்சத்திற்கு சென்றோம் எனலாம்.

இவற்றில் பாறையினை குடைந்து சுற்று பிராகர வழிகள்,முழு தூண் மற்றும் அரைத்தூண்களும் அவற்றில் வடிவமைக்கப்பட்ட்ட சிற்பங்களும் அழகியலின் உச்சம்,இக்கோபுரங்களை பாறைகுன்றின் மேலிருந்து கீழாக செதுக்கியதற்கான ஆதாரங்களை பேராசிரியர் விவரித்த போது அனைத்தையும் கேட்டுகொண்டே அடுத்த பகுதிக்கு செல்ல ஆயத்தமாகி வெளியேறினோம் ஐந்து ரத பகுதியை விட்டு.

மகிடன் என்ற அசுரன் தனது கடுந்தவத்தால் பிரம்மாவிடம் சாகா வரம் கேட்க அதனை பிரம்மா தர மறுக்க,பின் மகிடன் ஆண்-பெண் புணர்வின்றி பிறக்கும் பெண் குழந்தை மூலமே தனக்கு மரணம் வேண்டும் என்று வரம் பெற்றபின் தேவ உலகம் மற்றும் பூலோகம் என அனைத்தையும் தன் வசப்படுத்துகிறான்,அவனை கொள்வதற்காக மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு,சிவன் மற்றும் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் சக்திகள் அனைத்தையும் பலப்படுத்தி மர்த்தினி என்ற பெண்ணை உறவாக்கி அனுப்புகிறார்கள் அவளும் மகிடனை வதம் செய்கிறாள் என்ற புராண இலக்கியக் கதையை தழுவிய சிற்பங்களை கொண்ட குடைவரை, ஐந்து ரத்தத்திற்கு சிறிது தொலைவிலிருக்கும் சிறு குன்றின் மேல் அமைந்திருக்கும் மகிடாசுரமர்த்தினி அமைப்பிடத்திற்கு வந்தோம்.
இந்த குடைவரையில் மகிடன் மர்த்தினியிடம் தோற்று பயந்து ஓடுவதையும்,மர்த்தினி மற்றும் அவளின் பூதகனங்கள் அவனையும் அவனது படையையும் விடாது துரத்துகிறார்கள்,எருமையின் தலை கொண்ட மகிடன் மற்றும் அவனது பூதங்கள் ஓடுகின்றன.ஓடும் திசைக்கேற்ப பின் புறமாக காற்றில் செல்லும் அவனது ஆடை வடிவமைப்பு மற்றும் மர்த்தினி சிம்ம வாகனத்தில் அமர்ந்து அவனை தனது எட்டு கைகளிலும் ஒவ்வொரு தேவர்களின் ஆயுதமேந்தி துரத்துவதையும் மிகவும் தத்துருபமான சிற்பக் காட்சியாக சொல்லபட்டிருக்கும்.

மகிடாசுர மர்த்தினியின் சிற்பத்திற்கு நேர் எதிரே விஷ்ணு ஆதிசேஷ படுக்கையில் படுத்து நித்திரை கொண்டிருக்கும் நேரம் இரண்டு பூதகணங்கள் (நான் பெயர் மறந்து போனேன்) விஷ்ணுவை கொள்ள வருகின்றன,அதனை தடுக்க நாரத முனி பதற்றப்பட்டுக் கொண்டிருக்க,ஆதிசேசன் நெருப்பை உமிழ்ந்து வெப்பம் உண்டாக்கி அந்த பூதகணங்களை விரட்ட வெப்பம் தாங்காமல் அந்த பூதகணங்கள் முதுகை காட்டியவாரு திரும்பி ஓட எத்தனிக்கும் காட்சியையும் குடைவரையாக வடிவமைத்திருப்பார்கள், இந்த சிற்பத்தில் நாரத முனிவரின் சிப்பம் முற்று பெறாமல் இருக்கும் என்று பேராசிரியர் விவரித்த விதமும் அந்த காட்சிகளை கண் முன்னே கொண்டு சென்றது எங்களுக்கு.
அவ்விரு சிற்பக் காட்சிகளையும் பார்த்த பின் அவற்றிற்கு மேலே உள்ள உயரமான குன்று பகுதிக்கு சென்று இரண்டு ரத பகுதியையும்,பொருளாதார முனேற்றத்தால் மாமல்லபுரம் சுற்றி அமைந்துள்ள தற்கால கட்டிடங்களையும்,பண்டைய கால மாமல்லபுரத்தின் நீர்வழித் தடங்களை பார்த்தோம்,1960கள் வரை அந்த நீர்வழித் தடங்கள் பயன்பாட்டில் இருந்ததாக கேள்வி பட்ட போது,நடிகர் கமல்ஹாசன் ஒரு சின்னத்திரை பேட்டியில் அந்த காலத்தில் கல்கி,பாரதிதாசன் போன்றோர் சென்னை கூவம் நதியில் ஆரம்பித்து அடையாறு வழியாக படகிலேயே மாமல்லபுரம் வரை வந்தமர்ந்து இலக்கியம்,சுதந்திரம்,நாட்டு நடப்பு பற்றியெல்லாம் பேசி செல்வார்களாம் என்று சொன்னது என் நினைவில் வந்தது தற்போது ஏற்ப்பட்டுள்ள மாற்றங்களால் அந்த வழித்தடம் அறவே இல்லை,வெறும் கழிவு நீர்தான் செல்கிறது,தற்போதும் அதுபோன்ற பயணம் இருந்தால் எவ்வாறு இருக்கும் என்ற எண்ணிய வாரே கிழே இறங்கினேன்(னோம்).

தமிழின் மிக முக்கியமான புதினமான “பொன்னியின் செல்வன்” நாவலில் ஆதித்திய கரிகாலனும்,வந்தியத்தேவனும் கடற்கரையில் நின்று பேசும்போது,வந்தியத்தேவனிடம் உங்கள் முன்னோர்கள் இவ்வுலகத்திற்கு இட்டுசென்ற அற்ப்புதங்கள் இருக்கும் வரை உங்கள் குலத்திற்கு அழிவில்லை என்பது போன்ற சம்பாசனையும்,சமகாலத்தில் இயக்குனர் சசி அவர்களின் படைப்பில் வெளிவந்த “சொல்லாமலே” திரைப்படத்தின் இறுதி காட்சியும்தான் என்னை மாமல்லபுரம் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிய நிகழ்வுகள்,இரண்டு காட்சிகளுமே கடற்கரை கோவிலருகில் நடப்பதாக இருக்கும்,என்னுள் ஆவலை ஏற்படுத்திய அந்த கடற்கரைக்கு தான் அடுத்து செல்ல போகிறோம் என்றும்,சென்று கடற்கரை கோவிலையும் அங்குள்ள கொற்றவை பற்றிய சிறப்பு செய்திகளையும் அறிந்து கொண்டு சூரிய மறைவை அங்கு நின்று ரசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மகிடாசுரமர்த்தினி மலையிலிருந்து இறங்கி பேருந்து எரிய எனக்குமட்டுமல்ல எங்களனைவருக்குமே ஏமாற்றமே மிஞ்சியது நேரம் கடந்து விட்டதாக சொல்லி மீண்டும் சென்னை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம்.
மாமல்லபுரத்தை தங்கள் கலைத் திறமையாலும்,கலைப்பித்தாலையும் இந்த உலகம் அறிய பல்லவர்களால் நிர்மானிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாக புலப்பட்டது.இது வரை நான் பார்த்த பகுதிகளையும் திரைப்படங்களிலும் ஓவியங்களிலும் பார்த்து பழகிய கடற்கரையும் இனைத்து தற்கால கட்டிடங்கள் இன்றி சேர்த்து வைத்து எண்ணிய வாரே திரும்பிக்கொண்டிருந்த கணம் பல்லவர்களின் கலைரசனை எந்தளவிற்கு இருந்திருக்கும் என்று புலப்பட்டது.

இத்தனை சிறப்பு மிக்க மாமல்லபுரத்தை நம் மக்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வில்லையோ என்ற எண்ணம் ஆங்காங்கே எழத்தான் செய்கிறது,மக்கள் அங்கு அசுத்தம் செய்வதாகட்டும் தனது காதல் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதாகட்டும் சற்றே நம்மை முகம் சுழிக்க வைக்கிறது,மேலும் அங்குள்ள தல விவரிபாளர்கள் அனைவரும் தவறான விவரிப்புகளையும் மிக குறிகிய விவரிப்புகளையுமே தந்து கொண்டிருகிறார்கள் என்பது பேராசிரியர்,கவிஞர் பாரதிபுத்திரன் மற்றும் ஓவியர் ட்ராஸ்கி மருது ஆகியோருடன் பயணித்த இந்த ஒரே நாளில் புரிந்து கொள்ள முடிந்தது,இங்குமட்டுமல்ல அனைத்து வரலாற்று சுற்றுலாத்தலங்களிலும் விவரிப்பவர்கள் தவறான தகவல்களே அதிகம் தருகின்றனர் என்பது எனக்கு ஏற்கனவே ஏற்பட்ட அனுபவம் ஒன்று உள்ளது.
நான் மாமல்லபுரத்தை பார்த்தது இதுவே முதல்முறை,முதல்முறையே எனக்கு சிறப்பானதொரு பயணமாக அமைந்தது,மதிய உணவிற்கு பதிலாக அற்புதமான இந்த ”பல்லவ விருந்தை” படைத்த “பனுவல் புத்தகக நிலையம்”,அதன் அமைப்பாளர்களில் ஒருவரான உடன் விருந்துண்ட அமுதரசன்,மேலாளரான செந்தில்நாதன் மற்றும் சுவை கூட்டும் பதார்த்தங்களை பரிமாறிய பேராசிரியர்,கவிஞர் பாரதிபுத்திரன் மற்றும் ஓவியர் ட்ராஸ்கி மருது அவர்களின் சுவைகூட்டலும்,அருமையான விருந்தின் தொட்டுகைகளாக அமைந்த  ராஜேஷ்,ரகு,கவிஞர் ச.விஜயலட்சிமி,கவிஞர் சாம்ராஜ் போன்றோரது புதிய நட்புகளும்,உடன் விருந்துண்ட விருந்தினர்களாலும் மேலும் சுவையாக்கின நான் ரசித்த இந்த பல்லவ விருந்தை.


பல்லவ விருந்து சிறந்தது!...மனம் சிலிர்த்தது!!....

#இனியன் 

1 comment:

  1. அருமையான தொகுப்பு நண்பா....

    ReplyDelete