இரவு நேர உறக்கத்தினிடையே
விழித்துக் கொள்வதும், மீண்டும் இரண்டு மணிநேரங்களுக்குப்
பிறகு உறங்கச் செல்வதும் மிகச் சாதாரணமாகத் தினந்தினம் நிகழக் கூடிய அன்றாடச்
செயல்பாடாகவே மாறிவிட்ட ஒன்றாகயிருகிறது. விழித்திருக்கும் அவ்விரண்டு மணிநேர
விழிப்பில் படிப்பதற்கென்று தலைக்கருகில் புத்தகத்தை வைத்துக் கொள்வதும் முந்தைய
இரவின் அன்றாடச் செல்பாடுகள்தான்.
அப்படிப் படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கும் புத்தகத்தை வாசிக்கத் துவங்கியவுடன் அடுத்த இரண்டு மணிநேரத்தில் தூங்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர்த்துப் புத்தகங்களுக்குள்ளே மூழ்கடித்து ஒட்டுமொத்தத் தூக்கத்தையுமே மறக்கடிக்கச் செய்வதும் சில புத்தகங்களின் தலையாயக் கடமையாக இருந்துவிடுவதும் வழக்கம்தான்.
சமீபத்திய ஓர்நாளில் அதேபோன்றதொரு விழித்த இரவினில் வாசித்த புத்தகமொன்றுத் தூக்கத்தையும் கெடுத்தது. ஆனால், விழித்துக் கொண்டே கனவையும் காணச் செய்து, கனவுலகப் பயணத்தையும் துவங்கி வைத்ததோடல்லாமல் சிறுவயது நினைவுகளையும், செய்தக் குறும்புகளையும் சிந்தனையின் வாயிலாக அசைபோட செய்துவிட்டது எஸ்.பாலபாரதி எழுதிய “ஆமை காட்டிய அற்புத உலகம்” என்ற சிறார் நாவல்.
பொதுவாகச் சிறார் புத்தககங்கள் என்பது எட்டு வயதிலிருந்து ஆரம்பமாகி பதினைந்து வயதிலானவர்களுக்காக எழுதப்படுவதுதான் என்றால். இப்புத்தகத்திற்கான உணர்வின் மதிப்புகளை அவ்வயதிலிருப்பவர்கள் எழுதுவதுதான் சிறப்பானவோன்றாக இருக்கும். அனால், அதற்கான சாத்திய கூறுகள் நம்நாட்டுச் சூழலில் மிகமிகக் குறைவு என்பதால் அவ்வயதையோத்த மனநிலைக்குத் தங்களை அவ்வபோது கொண்டு செல்பவர்கள் எழுதுவதுதான் சரியானதாகயிருக்குமென எண்ணி இதை எழுதுகிறேன்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தங்களைச் சாகசப் பிரியர்களாக வைத்துக்
கொள்வதில் என்றைக்குமே அலாதியான ஆர்வம் இருந்து கொண்டேதானிருக்கும். அவற்றிக்கு
வயதுவரம்புகள் கிடையாது. இன்று காலைப் பேருந்தில் வருகிற போது மனதிற்குள்
சாகசமொன்று ஓடிக் கொண்டிருந்தது சிந்தனையில். அவ்வபோது எனக்கு இது போன்ற
சிந்தனைகளும் கனவுகளும் வருவது இயல்புதான் என்றாலும் இன்றைய காலைப்பொழுது என்பது
கூடுதல் சிறப்பு.
“கால்களைத் தரையில் ஊன்றி நிற்கிறேன். திடிரெனப் பூகம்பம் வருகிறது பூமி இரண்டாகப் பிளக்கிறது. பிளந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் பழைய நிலைக்கு மூடவும் செய்கிறது பூமி. பிளவிற்கு உள்ளே செல்லும் நான், என்னுடன் பிளவில் விழுந்தவர்களைக் காப்பாற்ற எனது கைகளால் பிளவு மூடாமளிருக்கும் படித் தடுத்து நிறுதுத்திக் கொள்ள அனைவரும் மேலே ஏறிவிடுகின்றனர். இறுதியாக நான் ஏறலாமென்று நினைத்துக் கைகளையெடுக்கும் போது பூமி மூடி விடுகிறது.
உள்ளே மாட்டிக் கொண்ட நான் என்ன செய்வதென்று தெரியாமல் மண்ணை நோண்ட ஆரம்பித்துப் புதைக்கப் பட்ட மனிதப் பிணங்கள், பல நிலகரிச் சுரங்கங்கள், எண்ணைக் கிணறுகள், இன்னும் பல கனிமவளங்கள் போன்றவற்றைக் கடந்து ஒரு பகுதியில் வெளியேறுகிறேன். அப்பகுதி ஆஸ்திரேலிய கண்டமாக இருக்கிறது. அதான் வராத இடத்திற்கு வந்திருகிறோமே எனச் சொல்லி வெளிவந்த குழிக்கு அடையாளம் வைத்து மோடி விட்டு ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றலாம் எனக் கிளம்புகிறேன். சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் குழிக்குள் நோண்ட ஆரம்பித்து ஒவ்வொரு கண்டமாகப் பாதையமைத்து உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்கிறேன். இடையிடையே டைனோசர் மற்றும் மமூத்துடன் கொஞ்சி விளையாடல் என அனைத்தையும் முடித்து இறுதியாகப் பேருந்தை விட்டு இறங்கிய சென்னை டைலர்ஸ் ரோட்டில் எழுந்து நிற்கிறேன் உலகை பூமிக்கடியின் மூலமாகவே அரைமணிநேரத்தில் சுற்றியிருக்கிறேன் என்ற சாகசத்துடன்.” இப்போது எனக்கு மட்டுமே தெரிந்த உலகம் முழுவதிற்குமான ரகசியப் பாதையொன்று எனது கனவுலத்தில் இருக்கிறது. கனவுக்கண்டத் தூரமோ சேப்பாக்கம் முதல் டைலர்ஸ் ரோடு வரைதான். இருந்தாலும் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன்.
இதே போன்ற தனது சிறுவயது சாகசக் கனவைத்தான் சிறு நாவலாக எழுதியிருக்கிறார் எஸ்.பாலபாரதி. ஆனால் கனவை மட்டுமே கதையாகக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் மற்றும் கடல் உயிரினங்களின் வகைகள் மற்றும் அவற்றின் தன்மைகள் போன்றவற்றையும் சொல்லியிருப்பது சிறார்களிடம் நாம் எதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தெளிவோடு செயல் பட்டிருப்பதற்காகவே பெரும் வாழ்த்தினைக் கூறவேண்டும்.
தொடர்ந்து இது போன்ற சிறார் நாவல்கள் தமிழ் அதிகளவு வர வேண்டும் அவற்றையெல்லாம் விட வருகிற புத்தகங்களைச் சிறார்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அவர்களை வாசிப்பனுபவத்திற்குக் கொண்டு செல்வதற்கான செயல் திட்டங்களும் இங்குத் தேவை எனபதையும் நாம் அனைவரும் உணரவேண்டும்.
மொத்தத்தில் “ஆமை காட்டிய அற்புத உலகம்” படிப்பவர்களின் சாகசக் கனவுகளையும் சுற்றுச்சூழல் பற்றிய அதிலும் குறிப்பாகக் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலின் சூழல் கேடு பற்றிய ஆரம்பநிலைப் புரிதல்களை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
#இனியன்