21 Nov 2014

How Old Are You

அவ்வபோது நினைப்பதுண்டு,பெரும்பாலான ஆண்கள் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களையும் தொடர்ந்து தொடர்பில் வைத்துக்கொண்டும். அந்தக் காலக் கட்டத்தில் அவர்களிடமிருந்த சேட்டைகளையும்  தங்களிடத்தில் தக்கவைத்துக்கொண்டே பயணிகின்றார்கள்.ஆனால் பெண்கள் அவ்வாறு இருக்க இயல்வதுமில்லை இருக்க விடுவதுமில்லை.தங்களது இன்சியலைக் கூட அவர்கள் ஆண்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருகிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகான வாழ்வில் துடிப்பான பெண்கள் கூடத் தங்கள் வாழ்வில் எந்தளவிற்குத் தங்களின் சுயத்தை இழந்து மாறுதல்களைப் பெற்று ஒரு குறுகியக் குடும்பச் சமூதாய  அமைப்பினால் அல்லல்படுகிறார்கள் என்பதையும்.அந்தக் கட்டமைப்பிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளைத் தாங்களாகவே எவ்வாறு ஏற்படுத்திக் கொள்வது என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கும் திரைப்படம்தான் “How Old Are You” திரைப்படம்.

கல்லூரி வாழ்வில் பல மாணவிகளுக்கு உந்து சக்தியாகவும்,மிகத் தைரியமாகப் போராட்டங்கள் பலவற்றை முன்னின்று நடத்தி மிகவும் தைரியமான பெணென்றும்,பேச்சுத் திறமை மற்றும் ஹாசியம் புரிவதிலும் கெட்டிக்காரி என்றும் பெயர் எடுத்த கதாநாயகித் திருமணத்திற்குப் பின்பு எதற்கெடுத்தாலும் பயந்தும், வெட்கப்பட்டுக் கொண்டும் தனது குடும்பத்திற்காகத் தன்னுடைய அனைத்து இயல்பையும் மாற்றியும் மறந்தும் தன்னுடைய வயதைக் கூடத் தைரியமாகச் சொல்லிக் கொள்ள வெட்கப்படும் “நிருப்பமா” என்ற கதாப்பாத்திரத்தை “மஞ்சுவாரியார்” இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் படத்தின் முதல் பாதியில்.ஆனால் இரண்டாம் பாதியில் தனக்கான சுயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுவிட்டோம். அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சுழலும் பெண்ணாகவும் கனகச்சிதமாகத் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். 

நாட்டின் குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் வாய்பின் போது அவரைக் கண்டப் பின்பு மயங்கி விழுந்துப் பிரபலமடையும் தனது தோழியான மஞ்சுவாரியாரைச் சந்திக்க வரும் கல்லூரித் தோழியான கனிகா,மஞ்சுவிடம் பேசும் ”நிருப்பமாக் கிருஷ்ணனா இருந்த போது இருந்த உனது சுயம் நிருப்பமா ராஜு என்று மாறியப் பின் மறைந்து விட்டதா?”எனப் பேசும் வசனங்கள் மிக முக்கியமானவை.அந்த வாசனங்கள் அனைத்தும் பெண்கள் அனைவருக்கும் பொருத்தமானதாகவே இருக்கும்.

படத்தில் இவற்றை மட்டுமே பேசாமல் இயற்கை வேளாண்மையால் எவ்வளவு பயன்கள் உள்ளன.அவற்றை எந்தளவிற்குச் சிறப்பாக வீடுகளிலே தயார் படுத்தலாம் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருகிறார் இயக்குநர் ரோஷன் அன்றியூ.

நான் சொந்த வீடு வைத்திருக்கும் அனைவரிடமும் பலமுறை சொல்லுவேன் இவ்வளோ பெரிய மாடி வச்சிருக்கீங்க இதுலையே ஒரு சின்னதாக் காய்த் தோட்டம் போட்டீங்க அப்படினா உங்களுக்குத் தேவையான காயும் கிடைக்கும் பொழுதுப் போக்குவதற்கான நல்ல ஒரு செயல் திட்டமாகவும் இருக்கும் வீட்டிற்கு ஏ.சி.யும் போட தேவையில்லை மாடியில் தோட்டமிருன்தானுப் பல நண்பர்களிடம் நான் சொல்லியதுண்டு. அவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

தமிழில் எத்தனையோ படங்களில் ஜோதிகா நடித்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த படம் “மொழி”தான்.அவர் தனது மீள் திரைப்பட வாழ்வில் அடியெடுத்து வைக்கும் முதல் படமே அவருக்குச் சிறந்த படமாகக் கண்டிப்பாக அமையும்.
மனைவி, தாய்மை, குடும்பம் என்ற சொற்களின் மூலம் தங்களுக்கான அடிமைத்தனத்தைத் தாங்களே கட்டமைத்துக் கொள்ளும் பெண்களிடம் அதை எவ்விதச் சிக்கல் மற்றும் விரிசல்கள் இல்லாமல் அதிலிருந்து விடுதலைப் பெறுவது என்பதை உரக்கச் சொல்லும் திரைப்படமாகவே இருகிறது”How Old Are You”.

பிற மொழிப்படங்களைப் பற்றிப் பேசும்போது எப்போதும் சொல்லும் ஒரே விசையம் நேரடித் தமிழில் இது போன்ற  திரைப்படங்கள் எப்போது இயக்கப் போகிறார்கள் என்பதுதான்.

#இனியன்.       

No comments:

Post a Comment