18 Sept 2014

தறியுடன்...

நம் கண்களால் பார்த்திராத போர்களுக்கான வரலாற்றைப் புனைவுகளுடன் சித்தரித்து வெளிவரும் நாவல்களை வரலாற்றுப் புதினம்,கிளாசிக் வரிசை என மிகப்பெரிய அளவில் கொண்டாடியும் அதன் நாயகர்களைச் சிறந்த வீரர்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நம் இலக்கியச் சமூகம்,இயக்கம் மற்றும் சங்கங்கள்  சார்ந்த  போராட்ட வீரர்களின் அனுபவ வாழ்வுகள் நாவல்களாக வெளிவந்து விருதுகள் பல பெற்றாலும், இலக்கியச் சமூகத்தில் மட்டுமின்றி  அந்த இயக்கம் மற்றும் சங்கங்களாலே புறக்கணிக்கப்படும் நிலையிலேயே இருந்துவருகிறது.உதாரணமாகப் போராட்டக் களங்களை மையமாக வைத்து வெளி வந்து சாகித்திய அகாதமி விருதுப் பெற்ற கல்மரம் மற்றும் தோல்போன்ற புதினங்களைச் சொல்லலாம்.அவற்றைப் போல் சமகால நவீன இலக்கிய வரிசையில் போராட்ட வாழ்வினை மையமாக வைத்துக் கொண்டாடத் தகுதிகள் இருந்தும் கொண்டாடப்படாத வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் போராட்டப் புதினம்தான் தறியுடன்...”.ஒரு தனி மனிதன் தான் சார்ந்த இயக்கப் போராட்டங்கள் மற்றும் அந்தப் போராட்டங்கள் மூலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையில் எந்த அளவிற்கு மாற்றங்கள் புறக்கணிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மிகத்தெளிவாகத் தனது சுயசரிதையை ஒரு சுவாரசியத் திரைக்கதைப் போல் தனது பக்கங்களில் எழுத்துக்காட்சியாகப் படுத்தியிருக்கிறார் ரெங்கநாதன் என்கின்ற பாரதி நாதன்”.

உலகமயமாக்கல் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் சுதந்திரம் பெற்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைமுறை படுத்தப்படுவதற்கு முன்னால் முதலாளித்துவம் மற்றும் நிலபிரபுத்துவம் போன்றவற்றின் கொடுமைகளையும் கொள்ளை மற்றும் கொலைகளையும் எதிர்த்து முதல் குரல் எழுவது என்னமோ ஒரு தனிக்குரல் தான், அந்தத் தனிக்குரல் நாளடைவில் தடைகளை மீறிச் சங்கங்களாக மாறிப் பிறகு இயக்கங்களாக உருமாற்றமடைந்து வளர்ந்து நிற்கும் நிலையில்,பெரும்மக்கள் கூட்டம் சில மனிதர்களால் சுரண்டப்படும் போது,சுரண்டப்பட்ட அம்மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களை எந்த அளவிற்கு முதலாளிகளும்,முதலாளி வர்க்க ஆதரவு அரசாங்கமும்,அரசாங்க ஆதரவு காவல்துறையும் எந்தளவிற்கு வதைத்தது என்பதைச் சுதந்திரத்திற்குப் பிறகும் எண்பதுகளின் இறுதிவரைப் போராடிய அனைவருக்கும் தெரியும்.போராட்டக்கார்களுக்கு மக்களின் ஆதரவுப் பெருமளவிற்கு இருந்த காலகட்டம்மும் இதுதான்.

ஆனால் இந்த நிலையை ஓட்டிற்காகப் போராட்டம் நடத்தி மற்றவர்வர்கள் யாரும் போராடிடக் கூடாது அப்படிப் போராடினாலும் அந்தப் போராட்டாம் வெளி வரகூடாது என்பதில் தெளிவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கம் குறிப்பாகப் போராட்டங்களின் மூலம் ஆட்சியைப் பிடித்த தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் தந்திரச் செயல்பாட்டால் எந்தளவிற்கு இன்று வரை அனைத்து விதமான போராட்டங்கள் இருட்டடிப்புச் செய்யபடுகிறது என்பதைப் படிப்பவர்களிடம் புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் இந்தப் புத்தகம் இருந்தாலும்,அந்தப் போராட்டங்களின் இருட்டடிப்பினாலும் திறந்து விடப்பட்ட பொருளாதாரச் சிந்தனையாலும் மக்களின் மனநிலையில் சுயநலம் மற்றும் சுயநலம் சார்ந்த பொருளாதாரம் எண்ணங்களையும் ஆசைகளையும் மட்டுமே திட்டமிட்டுக் கட்டமைத்து விட்டதாகவே தோன்ற வைத்தது. இந்த முழுநீளப் போராட்டப் புதினத்தின் நாயகன் அவன் சார்ந்த இயக்கத்தால் தான் பெற்ற மாற்றங்களை ஆங்காங்கே சொல்லும் போது இயக்கங்கள் எந்தளவில் கட்டுக்கொப்பானதாகவும் பகுத்தறிவு மிக்கதாகவும் இருந்திருக்கின்றன என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் முடிகிற அதே நேரத்தில் நாங்களும் பகுத்தறிவாதிகள் என்று சொல்லிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவர்களின் பகுத்தறிவற்ற தன்மையையும் அவர்களுக்கு ஜால்ராப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய பகுத்தறிவாதிகளின் நிலையையும் நன்றாக உணரமுடிந்தது.
அதே போல் இந்த நாவலில் வரும் சில சம்பங்கள் மற்றும் போராட்ட அனுபவங்கள் அது நடந்த காலக் கட்டத்தையும் சமகால அரசியல் மற்றும் ஆளும் முதலாளிய வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய சிலவற்றைக் கூறியே ஆகவேண்டும்.இன்று உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பிட வைத்த வாழ்வியல் உரிமைக்கான போராட்டமான கூடங்குளம் மற்றும் இடிந்தகரைப் பகுதிகளில் நடந்த, நடத்துகொண்டிருக்கும்,நடக்கும் போராட்டங்களின் விளைவாகச் சிறை சென்ற பெண்களின் அனுபவத்தைத் தெளிவாகச் சொல்லியிருந்த இடிந்தகரை சிறை படாத பெண்கள்என்ற புத்தகத்திலிருந்த காவதுறையின் அடக்குமுறைகள் மற்றும் சிறைசாலை வன்முறைகள்,சிறைபோராட்டங்கள் போன்றவையும், “தறியுடன்நாவலில் சொல்லப்படும் சிறையனுபவம் மற்றும் சிறைபோராட்டங்கள் போன்றவற்றிக்கும் சிறிய அளவுகூட வித்தியாசம்மில்லை.இதில் இங்கு ஒப்பிட விரும்புவது இரு சம்பவங்களும் நடைபெற்ற காலத்தை மட்டுமே. எண்பதுகளின் மத்தியில் நடந்த அதே அடக்கு முறைகள் 2012லும் நிகழ்ந்து கொண்டிருகின்றன.காவல்துறையின் ஒடுக்கு முறைகள் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து வருவதற்குக்கான காரணத்தை வரலாற்றுடன் ஒப்பிடும் போது ஆங்கிலேய அரசாங்கம் கொண்டுவந்த காவல்துறை சட்டங்கள் மற்றும் அதிகார ஒடுக்குமுறைகளின் பரிணாமமே என்று தெளிவாகத் தெரிகிறது.

மேலும் பெண்ணுரிமை பற்றிப் பல இடங்களில் பேசியிருக்கும் இந்த நாவலில் வரும் ராசாத்தி, ரஞ்சிதம், மாரியம்மா, வேலாயி போன்றவர்களின் கதாபாத்திரம் மூலமும் எந்த ஒரு வாழ்வியல் போராட்ட வளர்ச்சியானாலும் சரி,நாட்டின் முன்னேற்றமானாலும் சரி ஆணாதிக்கம் கலைந்த சரியான புரிதலுடன் கூடிய பெண்ணுரிமை இல்லையேல் வளர்ச்சிகள் சிறிதும் இல்லை என்று சொல்லும் இதே நாவலில் காவல்துறை உயரதிகாரிகளால் பெண் காவலர்கள் எந்தளவிற்கு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்ற காட்சிப்படுத்தலிலும்,சமகாலத்தில் அவ்வபோது சில நண்பர்களால் கேள்விப்படும் பெண் காவலர்களின் நிலையினைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

நம்சமூகத்தில் எழுந்த மிகப்பெரிய போராட்டங்கள் அனைத்தும் மாணவர்களின் பங்களிப்பில்லாமல் நடந்ததில்லை என்பதை நாவலில் வரும் போராட்ட அனுபங்களில் தெளிவுபடுத்தியிருந்தாலும்,அரசாங்கத்தின் மாற்றமில்லாக்  கல்விமுறையும்,மாணவர்களை எந்த ஒரு போராட்டங்களிலும் ஈடுப்பட்டு விடக் கூடாது என்ற அரசாங்கத்தின் பயமும்,பொருளாதாரம் ஈட்டுவதற்காக மட்டும் கல்வி என்ற மக்களின் மனநிலையும் மாணவர்களின் போராட்ட குணத்தை எவ்வாறு மழுங்கடித்துவிட்டன என்பதையும் சிந்திக்க வைக்கும் அதே நேரத்தில், தற்காலத்தில் உள்ள மாணவர்கள் எந்தளவிற்குச் சமூகம் பற்றிய விழிப்புணர்புப் பெற்றுள்ளனர் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.கல்விபயிலும் மாணவர்களுக்கு எவை தேவை என்பதைச் சிந்திக்காமல் அவர்களையும் இலவசம் வேண்டுவாராகச் சித்தரித்துத் தேவையில்லாதா இலவசங்களை அள்ளித்தரும் அரசாங்கங்கள் அவர்களுக்குத் தேவையான உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துகிறதா? என்று கூடச் சிந்திக்காமல் இலவசங்களைப் பெற்றுக்கொல்லும் தற்போதுள்ள மாணவர்கள்  நாங்களும் போராடுகிறோம் என்று அமைப்புகளாக அமைந்து அரசுக்கு அப்பாற்பட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனரோ என்ற ஒப்பீட்டையும் தருகின்றது.
நாட்டில் எந்தளவிற்குச் சாதிய ஒடுக்கு முறையும் சாதிய அரசியலும்  இருக்கிறதோ,அதற்கு இனையாக வர்க்க ஒடுக்கு முறையும் அரசியலும் இருகிறது.அதிலும் வர்க்க ஒடுக்கத்தில் சாதியையும் சேர்த்து ஒரு பிரிவு மக்கள் மட்டும் அதிகமாக ஒடுக்கப்படும் போது,அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரப் போராடுபவர்கள் எவ்வாறெல்லாம் இன்னலுக்குட்படுத்தப்படுகின்றனர் இந்த வர்க்க ஆதரவு அரசாங்கத்தால் என்பதைத் தெளிவாகச் சொல்லும் அதே வேளையில் அரசாங்கம் என்பது வர்க்கத்தில் செலித்திருப்பவர்களுக்கு மட்டும்தானா?இது போன்ற வர்க்க அரசியலில் அரசாங்கம் ஈடுபடுவதாலையோ என்னமோ இலவசங்களாக அள்ளிக்கொடுத்துப் பெருமுதலாளிகளை வாழவைத்துக் கொண்டும், வர்க்கக் குறைவில் உள்ளவர்களை மேலும் வர்க்கக் குறைவில் தள்ளுகின்ற அரசாங்கள் எதுவும் பொதுமக்கள் புழங்க போதுமானக் கழிவறைகள் கட்டவில்லை.ஒரு சிறந்த பொது மருத்துவமனைகள் கட்டவில்லை? என்ற கேள்வியையும் முன் வைத்தவாரே செல்கிறது.

இது போன்ற வர்க்க அரசியல் புரிவோர்களால் முதலாளிகளின் இயற்கைச் சுரண்டலிலிருந்து கல்விச் சுரண்டல் என அனைத்திற்கும் துணை நிற்கும் அரசாங்கம் இயற்கை வளங்களைக் காப்பதை விடுத்து பேரு முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனகளுக்கு வழியேற்படுத்தி விட்டு மக்கள் அனைவருக்கும் பணமும் பகட்டான வாழ்வுமே முக்கியம் என்ற நிலையைக் கல்வியிலிருந்தே கற்றுகொடுத்துக் கொண்டிருகின்றன.இதே மனநிலையில் பன்னாட்டு நிறுவங்களில் வேலை புரிவோரும் தங்களது வாழ்க்கை வரலாறுத் தெரியாமலே தங்களைப் பன்னாட்டு நிறுவன அடிமைகளாகவும் அகதிகளாகவும் வாழ்வைக் கடத்திக் கொண்டும், பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்வதால் மட்டுமே தங்களது அனைத்து உரிமைகளைக் கடமைகளும் மறந்து வேலை செய்யும் மக்களை உற்பத்திபடுத்திக் கொண்டிருகின்றன நமது அரசாங்கங்கமும் கல்விமுறையும் போன்ற சமகால நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு ஆழமான கருத்துகளை ஆங்காங்கே சொல்லிக்கொண்டே இருக்கும் வரிகளினால் நிரம்பியிர்கிறது புத்தகம்.

இது போன்ற பல அரசியல் சார்ந்த சிந்தனைகளை மனதில் ஏற்படுத்தினாலும் இந்த நாவலில் வரும் உண்மைக் கதாபாத்திரங்கள், அழுகை, பரபரப்பு, கோபம், சிரிப்பு, திருமணம், மகிழ்ச்சி என அனைத்தையும் கடந்து நாயகன் தனது போராட்டத்தைத் துவங்கும் விசைத்தறித் தொழிலாளர்ச் சங்கம் மற்றும் நக்சல்பாரி இயக்கத்தின் போராட்டாங்களையும்,போராட்டகாரகளின் காதலையும்,தான் கற்றுக்கொள்ளும் மார்க்சியமும்,தன்னை வழிநடத்தும் தலைவர்கள் மற்றும் புத்தகங்களையும் சொல்லும் விதத்தில் தன்னை ஒரு போராட்ட வாதியாகவே சித்தரித்திருந்தாலும்,இந்த ஜனநாயக அரசாங்கத்தில் புரட்சியை அறுவடைசெய்திட மக்களும் போராட்டகாரகளும் எதற்கும் மயங்காமல் இறுதிவரை ஒரே மனநிலையில் இருந்திட முடியாது என்ற நிலைபாட்டாலோ அல்லது தன்னை வழிநடத்தும் தலைவர்கள் என்று எண்ணியவர்கள் தவறான பாதையின் வழயில் செல்வதாலோ என்னவோ தனது சுய சரிதையில் தன்னையே மரணமடையச் செய்யும் நிலைபாட்டை எடுத்துத் தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவே தெரிகிறது.


ஆனால் அவர் முன்னுரையில் தெரிவித்திருப்பதுபோல் காலத்தையும் களத்தையும் பதிவுச் செய்வதுதான் இலக்கியம்,ஆனால் இலக்கியத்தில் சமூக மாற்றத்திற்கான அக்கறை இருக்கவேண்டும் என்று சொல்வது மார்க்சியம்.அதனால் நானும் கொஞ்சம் அக்கறைப்பட்டுருகிறேன்,என்று சொல்லியிருப்பது உண்மையாகவே படுகிறது. ஏனென்றால் இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் கண்டிப்பாகத் தனது அரசியல் நிலையினைச் சிந்திப்பார்கள்.மேலும் தாங்கள்தான் இலக்கிய உலகின் சிந்தனைச் சிற்பிகள் என்று கருதிக்கொண்டு புனைவுகளாகத் தந்துக்கொண்டிருப்பவர்களின் எழுத்துகளின் மத்தியில் இது போன்ற உண்மைத் தன்மை அதிகமிருக்கும் சமூகப் போராட்ட வாழ்வினை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமானதாகக் கருதிக்கொள்ள வேண்டும்.பள்ளிக் கல்லூரிகளிலும் போர்களுக்கான வரலாற்றுடன் போராட்ட வரலாற்றையும் அறிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் அமைந்திட வேண்டும் என்பது எனது சிந்தனையாக இருக்கிறது.

#இனியன்.

No comments:

Post a Comment