27 May 2014

தீண்டாமையின் முதற்பக்கம்.

தீண்டாமையின் முதற்பக்கம்

தீண்டாமை ஒரு பாவச்செயல்!
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்றச் செயல்!

என்று காந்திச் சொன்னதாக நமது அனைத்துப் பாடப்புத்தகத்திலும் இருக்கும் ஆனால் இந்த மெக்காலே கல்வி முறையின் மீது ஏற்பட்ட வெறுப்பால்
    
காலாண்டு ஒரு பாவச்செயல்!
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்!
முலாண்டு ஒரு மனிதத்தன்மையற்றச் செயல்!

என்று மாற்றியமைத்து இந்தக் கல்வி முறையின் மீதும் தேர்வுகளின் மீதும் உண்டான வெறுப்பைப் பதிவு செய்து விட்டனர்.அநேகமாக இந்தப் பதிவு எண்பதுகளின் மத்தியிலிருந்துதான் வெளிப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால் கல்வி என்ற ஒன்று அறிவுச் சார்ந்த மனபெருக்கத்தைக் குறைத்த காலகட்டத்தின் ஆரம்ப நிலை எண்பதுகளின் மத்திதான்.

ஒருபக்கம் கல்வியின் மீது ஏற்பட்டுள்ள விரோதப் போக்குத் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் இதே வேளையில் தான் காந்தியின் வார்த்தைகளைக் கடந்து சென்று நேரடியாகப் பாடத்திட்டதிற்குள் செல்லும் ஆசிரியர்களால் முதல் வார்த்தையை நேரடியாக அல்லது மறைமுகமாவோ கற்பிக்கப்பட்டு வருகிறது நமது கல்வி நிலையங்களில்.இதில் கிராமம் நகரம் என்ற வேற்பாடுகள் கிடையாது.இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் என்னிடம் இருவேறு மாணவர்கள் என்னிடம் பகிர்ந்ததைக் கூரலாம்.

அடிப்படைவசதிகள் சிறிது சிறிதாக வசதிகள் பெற்று வரும் ஒரு கிராமம் அங்குள்ள உயர்நிலை அரசுப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த ஒரு மாணவிப் பல போராட்டங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு வரை படித்துப் பத்தாம் வகுப்பில் 389 மதிப்பெண் பெற்று,மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று தனது வகுப்பாசிரியரிடம் சென்று அறிவுரைக் கேட்க, அவர் உன் சாதியாளுங்களுக்குப் பத்தாவதே பெரிய விசையம் உனக்கு மேற்படிப்பு வேர ஒரு கேடா, போய் ஏதாவது வேல வெட்டிய பாரு, நீயெல்லாம் மேலப் படிச்சி என்னத்தக் கிழிக்கப் போறனுச் சொல்லி அறிவுரையும் கூற மறுத்து விட்டுத் தனது தீண்டாமையை அந்த மாணவியின் மீது உபயோகித்திருக்கிறார்.ஆனால் தற்போது அந்த மாணவிச் சில நல்மக்களின் உதவியால் மேற்கொண்டு படித்து வருகிறார்.இது இங்கு அநேகக் கிராமங்களில் சாதாரணமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வுதான் என்றாலும் இங்குக் கவனிக்கப்பட வேண்டியது கிராமப்புற ஆசிரியர்களின் தீண்டாமை அணுகுமுறை.

இதே நிலை நகரத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் உள்ளது. நமது தலைநகரில் உள்ள புகழ் பெற்ற ஒரு தனியார் மெட்ரிக் கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சொல்கிறான் எங்கள் பள்ளியில் நல்லாப் படிக்கின்ற மாணவர்கள் நல்லா படிக்காத மாணவர்களுடன் சேரக்கூடாது, பேசக்கூடாது ஒன்றாக அமரக்கூடாது என்ற கட்டுபாடுகள் உண்டு,நான் ஒருமுறை நல்லாப் படிக்காத என் நண்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதற்காக என்னை வெளியில் நிற்க வைத்து விட்டார்கள்,ஆனால் என் நண்பன் இந்தத் தேர்வில்தான் மதிப்பெண் குறைந்தான்,சென்ற தேர்வில் அவன் நல்லா படிக்கிற பசங்க வரிசையில் இருந்தான். என்னான்னுத் தெரியல இந்தத் தடவ நல்லாப் படிக்காத பசங்க வரிசைக்குச் சென்று விட்டான் என்று சொல்லி முடித்தவுடன் நான் கேட்டேன் நல்லாப் படிக்கிற மாணவர்களின் மதிப்பெண் எவ்வளவு இருக்க வேண்டும்,நல்லாப் படிக்காத மாணவர்களின் மதிப்பெண் எவ்வளவு இருக்க வேண்டுமென்று.அம்மாணவன் சொல்கிறான் நல்லாப் படிக்கிற பசங்கன்னா எண்பத்தைந்து மதிப்பெண்களுக்கு மேல எடுத்திருக்கனும்,நல்லாப் படிக்காத பசங்கன்னா அதுக்குக் கீழ இருக்குறவங்க என்று பதில் சொன்னான்.இது நகரத்துத் தீண்டாமை.

அனைத்துப் பாடப் புத்தகத்தின் முதல் பக்கதலிருக்கும் காந்திய வார்த்தை எந்த ஆசிரியர்களும் கவனிப்பதேயில்லை என்றுதான் தோன்றுகிறது,குழந்தைகள் மத்தியில் தீண்டாமை என்ற ஒன்று நெருங்கிவிடக்கூடாது என்பதற்காகவே தான் அவை பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுகின்றன என்று பலர் சொல்கின்றனர்,ஆனால்  நமது ஆசிரியர்களும் கல்வி முறையும் தீண்டாமையைத் தாங்களாகவே முன்வந்து வேவ்வேறு நிலைகளில் குழந்தைகள் மத்தியில் தீண்டாமையை விதைத்து விட்டுச் செல்கின்றன.இது போன்ற ஆசிரியர்களின் அணுகு முறையால்தான் இன்று கல்வியின் மீது பல விமர்சனங்களும்,மாணவர்கள் கல்வியின் மீது ஒருவித வெறுப்புடனும் தங்களது கல்வி பயணத்தைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.


#இனியன்                

No comments:

Post a Comment