1 Aug 2016

மரணத்துடன் ஓர் உரையாடல்

ஆழ்நிலைத் தூக்கத்தில் கண்டக் கனவுதான் என்றாலும் அவ்வபோது சிந்தித்துக் கொள்ளும் சிந்தனைதான் கனவாக வந்திருகிறது என நினைக்கிறன். கடந்த வாரம் எனக்கான பிரத்யேக வலிக்கொல்லி மாத்திரையை உண்டுவிட்டு இருநாள் தொடர்த் தூக்கத்தில் இருந்த போது ஒரு கனவு வருகிறது அதில் ஓர் உரையாடலும் நிகழ்கிறது. என்னுடன் உரையாடுபவன் எனது மரணம்.
ஓர் அழகிய இரவில் பூட்டியிருந்த அறையில் உட்புகுந்த மரணம், எனது கட்டிலின் அருகில் வருகிற போது எனக்கு அவ்வபோது எவ்விடத்தில் கால் இடறுமோ அதேயிடத்தில், அதே பையில் கால் இடற பையிலிருக்கும் கோலிகுண்டுகள் சலசலக்க விழித்துக் கொள்கிறேன் நான்.
"விழித்தவுடன் யார் நீ என்கிற கேள்வியுடன் துவங்குகிறது எங்களுக்கான உரையாடல்."
"சும்மா, உன்னைப் பார்த்துட்டுப் போகலாமுன்னுதான் வந்தேன். உனக்கு நினைவிருகிறதா எத்தனை முறை நாம் நேருக்குநேர்ச் சந்தித்துக் கொண்டோமென்று? அதேபோல நீ என்னை மறைமுகமாகச் சந்தித்தது எப்போதெல்லாம் என்று?"
"ம். பல சந்திப்புகள் நினைவில் இருக்கிறது. அதிலும் கடந்த முறை உன்னுடன் சிறிது தொலைவும், சிலநாட்களும் உன்னுடன் நடைப் பழகினேனே. அதையெல்லாம் மறந்துவிட முடியுமா?"
"நீ, சொல்வதும் சரிதான். உன்னை நெருங்கிய என்னாலையே அவற்றை மறக்கவியலாத போது எப்படி உன்னால் மறந்து விட முடியும்."
"நான்தான் உன் மரணம்"
"சரி, உட்காரு இப்ப என்ன வேண்டும்?"
"சரி, இப்ப வந்த விசையத்தைச் சொல்லிவிட்டுச் சீக்கிரம் செல். தூங்கியாகனும்"
"அதுவொன்றுமில்லை, உன்னிடம் ஒரேயொரு கேள்விக் கேட்க வேண்டுமென்றுதான் வந்தேன். இனிமேல் உன்னைத் தொந்தரவுச் செய்யும் எண்ணமில்லை எனக்கு அதனால் 'உன் மரணம் எப்படி நிகழ வேண்டுமென்று நீயே சொல்லிவிடு அதன் படி உன்னை நெருங்குகிறேன்' என்றைக்காயிருந்தாலும் உன் மரணம் நிகழபோவது ஒன்றுதானே."
"அதுதான் எனக்கும் தெரியுமே என்றாவது ஒருநாள் முழுநேரப் பயணம் உன்னுடன் வந்துவிடுவேனென்று. நான் மட்டுமல்ல அனைவரும் உன்னுடன் பயணம் வந்தாகிதான் வேண்டும்."
"சரி, நீ கேட்டக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன் கேள்."
எனக்கு மூன்று வகைகளில் மரணம் நிகழ வேண்டும்.
1. மக்கள் நடமாட்டமில்லா அடர் வனப்பகுதியில் மெல்லிய சலசலக்கும் இசையோடு நன்னீர் வெள்ளம் அதிகமில்லா காட்டாற்றின் கரையோரப் பாறையொன்றில் உணர்வுகளற்ற நிலையிலிருக்கும் அரையுயிராய் என்னுடல் கிடக்க வேண்டும். அதனை ஏதாவதொரு பறவையோ, மிருகமோ, சிற்றுயிரினமோ தனது பசிப் போக்கிட சாப்பிடத் துவங்கும் போது மங்கிப் போயிருக்கும் பார்வையை அவற்றைப் பார்த்துச் சிரித்தவாறே மரணமடைய வேண்டும்.
2. நல்ல சுவையான பிடித்த உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு இதோ இதுபோன்ற இருள் சூழ்ந்திருக்கும் அறையொன்றில் உறக்கத்திற்காகப் படுக்க வேண்டும். காலை கண்விழிக்கக் கூடாது. உறங்கியபடியே மரணித்திருக்க வேண்டும்.
3. அனைவரிடமும் அன்புச் செலுத்தும் ஒருநபர். மற்றவர்களை விடச் சற்றே அதிகமாக என்னிடம் அன்பும் உரிமையும் கொண்ட அந்த ஒருநபர். பாலின வேறுபாடற்ற அந்த ஒருநபர். இதுவரை நான் கண்டு பிடிக்காத அந்த ஒருநபர். வரும் காலத்தில் என்னுடன் பயணமாகப் போகும் அந்த ஒருநபரின் மடியில் என் தலையிருக்க வேண்டும். அந்தவொரு நிமிடத்தில் தனது ஒட்டுமொத்த அன்பையும் தன்னகத்தே சேகரித்து என் நெற்றியில் சேகரித்த அன்பு மொத்தத்தையும் முத்தமாகச் செலுத்தும் போது நான் மரணிக்க வேண்டும்.
இந்த மூன்று முறைகளில்தான் மரணிக்க வேண்டும் என்பது எனது பேராசையாகக் கூட நீ எண்ணிக் கொள்ளலாம். அல்லது இவற்றில் ஏதோவொன்றை எனக்குப் பரிசளிக்கலாம் அல்லது இவை ஏதுமில்லாமல் உனது விருப்பபடி எப்படி வேண்டுமானாலும் கொடூரமாகக் கூட என் மரணத்தைக் கூடத் தரலாம். எதுவானாலும் உன்னுடன் பயணமாவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
"சரி, நீ கேட்டப்படியான மரணத்தைக் கொடுத்திட முயற்சி செய்கிறேன். தற்போது விடை பெறுகிறேன். படுத்துறங்கு நான் சென்று வருகிறேன் என மரணம் சென்ற போது மீண்டும் கால் இடறி அதே கோலிகுண்டுகளின் சலசலப்புக் கேட்கிறது."
திடீரெனக் கண் விழிக்கிறேன். கட்டிலுக்கு அடியில் புத்தக மூட்டைகளை விளக்கிக் கொண்டு தேடுகிறேன் கோலிகள் சிதறிக் கிடக்கிறதா என்று. சிதறவில்லை கண்டது கனவு என்ற சுயத்திற்கு வருகிறேன். உறகிய நீண்ட நேரத்து உரைக்கும் முடிவிற்கு வந்திருகிறது அப்படியிருந்து ஆங்காங்கே வலிகள் மட்டும் நீடிக்க மீண்டும் இரண்டாம் நாளுக்கான வலிக்கொல்லியுடன் ஆரம்பமாகிறது அடுத்த நாளுக்கான உறக்கம். ஆனால் கனவுதானில்லை.

#இனியன்

5 comments:

  1. மூன்றாவது விருப்பம்தான் நீ உரையாடினாயா என ஐயம் பிறக்கிறது.இதுவரையும் காணவில்லையென்றால் எப்படி?

    ஆனாலும் லி மிகுந்த உன்னுடைய வாழ்க்கையை உன்னுடைய சாப்பாட்டு ரசனையும் அழகிய எழுத்தியலும் இன்னும் அழகாக்கவே செய்கின்றன.

    மரணத்துடன் ஓர் உரையாடல் கோன்று ஜனனத்துடனும் ஓர் உரையாடல் நடத்து

    ReplyDelete
  2. மற்றுமொரு முறை கனவில் மரணம் உரையாடட்டும், மூன்றாவது கோரிக்கையின் (நாயகியை) நபரை அருகில் அமர்த்தியப்படி

    ReplyDelete
  3. மற்றுமொரு முறை கனவில் மரணம் உரையாடட்டும், மூன்றாவது கோரிக்கையின் (நாயகியை) நபரை அருகில் அமர்த்தியப்படி

    ReplyDelete
  4. ஆம் இனியா மரணம் நிதர்சனம் அப்புறம் அஃதெப்படி விருப்பில் நிகழும் மரணத்தை மரணிக்கச் சொல்லும் மருத்துவர் அண்ணாவின் விருப்பம் போலவே உந்தன் மூன்றும் இனியா
    மூன்று விருப்பங்களிலும் மரணத்தை விரும்பி ஏற்கும் மனநிலை கொண்டிருக்கிறாயே அதையே வழி மொழிகிறேன்

    ReplyDelete