17 May 2016

அடிப்படைவாதம் உருவாக்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள்

கடந்த சனியன்று "பல்லாங்குழி" நிகழ்விற்காக சென்னைக்கு மிக அருகிலிருக்கும் ஒரு கிராமத்திற்குச் செல்ல நேர்ந்தது. அழகிய கிராமம்தான் இருந்தாலும் கிராமத்தின் எல்லைக்கு முன்பே கண்ணில் பட்டது காவல்துறையின் கண்காணிப்புத் தடுப்பு. அதைக் கடந்துதான் ஊருக்குள் சென்றோம். ஆனால், எவ்வித விசாரிப்புகளும் இல்லாததால் சாதாரணக் கண்காணிப்புத் தடுப்புதான் போல என்று நினைத்துக் கொண்டோம்.
ஆனால், ஊருக்குள் சென்று என்னை அழைத்திருந்த தோழியிடம் பேச ஆரம்பித்த பிறகுதான் பத்துநாட்களுக்கு முன்பாகச் சிறிய அளவிலான சாதிக் கலவரம் நடைபெற்ற ஊர் என்றும் அதனால்தான் காவல்துறையினர் வெளியே நிற்கின்றனர் எனக் குறிபிட்டார். அந்த ஊரில் ஆதிக்க ஜாதியாக இருப்பது வன்னியர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பது காட்டுநாயக்கர்கள் இவர்கள் இருவரும் இணையந்து தலித் காலனிமக்களைத் தாக்கியுள்ளனர் ஏதோவொரு நிலப்பிரச்சினைக் காரணமாக.
ஊருக்குள் வன்னியர் மற்றும் காட்டுநாயகர்கள் ஒரே தெருவில் இருக்கிறார்கள். இருந்தாலும் தெருவின் ஒருவருசையில் வன்னியர்களும் எதிர் வருசையில் காட்டுநாயகர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குள்ளாகவே சாதிய ரீதியில் அடித்துக் கொள்வதும் அவ்வப்போது இயல்பாக நடக்கும். ஆனால் தலித் காலனியை தாக்கும் போது மட்டும் இவர்களும் ஒன்றினைந்துக் கொள்வார்கள் என வருத்தமாகத் தெரிவித்தார் தோழி.
இம்மாதிரியான சூழலில்தான் அங்குச் சென்றிருந்தோம். நாங்கள் வருகிறோமென்று ஊரின் ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் ஒன்றிணைக்க முயற்சிசெய்தத் தோழிக்குத் தோல்வியே கிட்டியிருகிறது. தலித் காலனியிலிருந்து ஒரு குழைந்தை கூட வரவில்லை. கேட்டதற்குத் தோழியின் குடில் இரு தெருக்களும் சேருமிடத்தில் இருந்தாலும் அப்பகுதி வன்னியத் தெருவையோட்டி வருகிறது. அதனால் பாதுகாப்பில்லை என்று பதிலுரைத்துள்ளனர் தலித் காலனி மக்கள்.
சரி, வந்திருக்கும் குழந்தைகளை விளையாட வைத்துக் கதைச் சொல்லலாமென்று ஆரம்பித்து வழக்கம்போல் நிகழ்வைத் துவக்கிய போது பெண் குழந்தைகளை நிகழ்விற்குள் கொண்டுவருவது என்பது சற்றுச் சிரமமாக இருந்தாலும் எங்களுடன் விரைவில் ஐக்கியமாக நிகழ்வு சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த நிலைய விளையாடுவதற்காக வெளியே அழைத்துச் சென்றேன்.
“பாயும் புலி” விளையாட்டை அறிமுகப்படுத்தி ஒருமுறை விளையாடியிருப்பார்கள். அதற்குள்ளாக அவர்களுக்குள் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட நான் அருகில் செல்லும் போதும் ஒரு 7 வயதுடைய வன்னிய சிறுவன் ஒருவன் 13 வயதையுடைய காட்டுநாயக்க சிறுவனைப் பார்த்துச் சொல்கிறான் “டேய், நீ தெருவுள்ளேதானே வரணும் நான் உன்னைத் தெருவில் வச்சிப் பார்துகிறேன்னு, சொல்லிக் கையை நீட்டிக் கொன்றுவிடுவேன் எனச் சொல்ல", அந்த 13 வயது பையன் அப்படியே அமைதியாகிச் சோர்ந்துப் போக. இதற்குமேல் விளையாட வைத்தால் ஏதாவது பெரிய அளவில் பிரச்சனை வருவதற்கும் சாத்தியம் உருவாகும் என்பதால் அத்துடன் விளையாட்டை நிறுத்தி உள்ளேயே அமர்ந்து விளையாடும் விளையாட்டுகளை விளையாட வைத்தோம்.
ஒருவழியாக மதிய உணவிற்கு முன்பு அரைத் திருப்பதியாக ஒரு நிகழ்வு நடந்திய மனநிலையில் அனைவரையும் அனுப்பி விட்டுத் தோழியிடம் அமர்ந்து பேசுகையில் சில விசையங்களைக் கூறினார். அதில் முக்கியமான ஒன்று தலித் பெண் குழந்தைகள் இங்கு வரும்போது நான்தான் ரொம்பப் பாதுகாப்பா இருக்கணும். ஏன்னா, இங்கிருக்கிற பத்து வயது பையன் கூடச் சர்வ சாதாரணமாகப் பெண் குழந்தைகளுக்குத் தொந்தரவுக் கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க அதிலும் ஆதிக்கத் தொந்தரவு. இன்னைக்கு வந்த பெண் குழந்தைகளைக் கூட வரவைக்க நான் படாதபாடுபட்டேன் எனச் சொல்லி முடிக்கும் முன் இதுவரை இந்தப் பகுதியில் இவ்வளவு குழந்தைகளை ஒருங்கிணைத்து முழுமையாக என்னால் செயல் பட முடியவில்லை. இன்றுதான் அரைநாள் முழுவதும் குடிலில் இருந்திருகிறார்கள். அதனால் நீங்கள் அடிக்கடி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நிச்சையம் மாதம் இருமுறை வருவதற்கு முயற்சி செய்கிறேன். அடுத்தமுறை அனைத்துக் குழந்தைகளையும் ஒருகிணைத்து நிகழ்வு பண்ணுவோம். சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும் அதையும் கலைக்க முயற்சி செய்வோம் என்று சொல்லிப் புறபிட்டோம்.
பொதுவாக நான் செல்லும் பல கிராமங்களிலும் ஏன் நகரத்திலும் கூடச் சில இடங்களில் குழந்தைகளிடமிருக்கும் இதுபோன்ற சக குழந்தைகள் வெறுப்புணர்வு மற்றும் சாதிய, மத வெறுப்புப் போன்றவற்றைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன். அதிலும் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொண்டும் விளையாடும் விளையாட்டுகளை விளையாட வைக்கும் போது அதிகமாகக் கண்டுவருகிறேன்.
வெளியிலிருந்து நாமெல்லாம் என்னதான் கூப்பாடுகள் போட்டுக் கொண்டிருந்தாலும் அடிப்படிவாதம் என்பது குழந்தைகளுக்குக் கருவினிலிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்கள் வளரவளர அவர்கள் வீட்டினுள் கேட்டு வந்தவற்றைச் சமூகத்திலும் காட்சியூடகங்களிலும் சிறிதும் மாற்றமின்றித் தங்களது அடிப்படைவாதக் கருத்துகளைக் கற்றுக் கொடுகின்றனர். இது பற்றியெல்லாம் சில பள்ளி ஆசிரியர்களிடமும் உரையாடும் போது அவர்களது அனுபவங்கள் வேறுவிதமாகவும் அதிபயங்கரமானதாக இருக்கும்.
இவற்றிற்கெல்லாம் மாற்றாகக் குழந்தைப் பருவதிலிருந்தே, அவர்களுக்குத் தேவையான பொதுகருத்துகளை, சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றை உருவாகுவது அத்தியாவசியத் தேவையான ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள் மத்தியிலிருந்து அவர்களது மொழியில் நமது சீர்திருத்த அரசியல் சித்தாந்தங்களை உருவாக்கவில்லை என்றால் அடுத்துவரும் தலைமுறையினரும் இதே குப்பைகளுக்கு வீழ்ந்துதான் இருக்க வேண்டும்.
சில இடங்களில் எனக்குப் பெரும் சவாலாக இருப்பது இணைத்து விளையாட வைப்பது என்பதே பெரும் சவாலாக இருக்கிறது. இவ்விதமான குழந்தைகளின் மனநிலையிலிருந்து மாற்றம் காண புனைவு மற்றும் கனவுலகக் கதைகளோடு சேர்த்துச் சற்றே எதார்த்தக் கதைகளையும், தலைவர்கள் பற்றிய கதைகளையும், அதனைச் சார்ந்த செயல்பாடுகளையும் வளரும் சமூதாயம் அவர்களே என்ற எண்ணத்துடன் காலத்துக்கு ஏற்றார் போல் மாற்றியமைத்திட வேண்டுமென நினைக்கிறன்.

#இனியன்